வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
இராஜாங்க உத்தியோகங்களையும், சட்டசபை, ஜில்லா நிர்வாக சபை (District Board) முதலிய ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களையும் காங்கிரஸ் மகாசபை, அதன் கிளைச் சபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங் களையும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரும் அவரவர் ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து பற்றிக் கொள்ளுதலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், அதாவது மேற்கூறிய உத்தியோகங்களையும், அவற்றின் அதிகாரம், சம்பளம், செல்வாக்கு முதலியவற்றையும் ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து அந்தந்த ஜாதியார் அடையும்படிசெய்தல், (உத்தியோக மென்பது சம்பள உத்தியோகமும், கெளரவ உத்தியோகமுமாம்).
இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகாதென்று தேசாபிமானத்திலும், அறிவிலும், சிறந்தவராயுள்ள சிலர் கூறுகின்றனர். அதற்கு அவர் கூறும் காரணங்களாவன :
1) வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமது தேசத்தில் நிலவும் படி செய்துவிட்டால் ஜாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வும் தாழ்வும் நமது தேசத்தில் நிலைத்துப்போம் ; அதுபற்றி நமது தேசத்தில் ஒற்றுமையின்மையும் பகைமையும் நிலைத்துப்போம்.
2) உத்தியோக வியத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கவனிப்பதா யிருந்தால், சில உத்தியோகங் களுக்குத் தகுதியில்லாதாரை நியமிக்கும்படியான நிலைமை ஏற்படும்.
3) நம் தேசத்திலுள்ள ஜாதிகள் பல ; ஒவ்வொரு ஜாதியையும் சேர்ந்தவர்கள் மிகப்பலர். உத்தியோகங்களோ மிகச் சில. அச்சிலவற்றை அம்மிகப் பலர்க்குப் பகிர்ந்து கொடுப்பது எப்படி?
இம்மூன்று காரணங்களும் யுக்திக்கு அனுபவத்திற்கும் பொருந்தாதவை. இப்பொழுது நமது தேசத்திலுள்ள ஜாதி வேற்றுமைகள் எப்பொழுது ஒழியும்? பிறப்பை ஆதாரமாகக் கொண்டு தற்காலம் நமத தேசத்தில் நிலவும் அநீதியான ஜாதி வேற்றுமைகளும், அந்த ஜாதிகளில் ஒன்று உயர்வு. மற்றொன்று தாழ்வு என்னும் அநீதியான கோட்பாடும் ஒருகால் ஒழியக்கூடும். அவை ஒழிந்த பின்னர் நல்லொழுக்கம், தவம், கல்வி, தொழில், செல்வம் முதலியவற்றில் ஒன்றை, அல்லது சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமைகள் உண்டாகவா? நல்ல ஒழுக்கம், தவம், கல்வி, செல்வம், நற்றொழில் முதலிய நல்லவற்றை உடையோர் மேலான ஜாதியார் என்றும் தீய ஒழுக்கம், தவமின்மை, கல்வியின்மை, செல்வமின்மை, தீத்தொழில் முதலியவற்றை உடையோர் கீழான ஜாதியார் என்றும் கருதப்படமாட்டாரா?
‘ஒண்பொருள் ஒன்றே தவம் கல்வி ஆள்வினை, என்றிவற்றான் ஆகும் குலம்’ என்னும் நாலடியார் வாக்கும், ஒழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனையவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்னும் பொய்யாமொழிப் புலவர் வாக்குகளும் பொய்க்குமா? அவை பொய்க்கும் எனினும் மனிதர் மேம்படுவதற்கு ஒழுக்கம் முதலியவை பற்றி உயர்வு, தாழ்வு கற்பித்தல் அவசியம் அன்றோ? (Unity in Variety) என்றபடி வேற்றுமைகளுள் ஒற்றுமை காண்டலன்றா அறிவு? வேற்றுமை இல்லையயனின், ஒற்றுமையயன்ப தொன்றுடோ? இக்காரணங்களால் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட ஜாதி வேற்றுமைகளும், அது பற்றிய உயர்வு தாழ்வுகளும் ஒழிதலை அறிவுடை யோர் விரும்புவரே தவிர, ஒழுக்கம் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்ட ஜாதி வேற்றுமைகளாவது, அது பற்றிய உயர்வு தாழ்வுகளாவது, ஒழிதலை அறிவுடையோர் விரும்பார்.
ஜாதி வேற்றுமை என்று யான் கூறுங்கால், மனிதர்கள் நிற்கும் நிலைமைகளைப் பற்றிய வேற்றுமை என்றே கொள்க. உயர்வு தாழ்வு என்று யான் கூறுங்கால், பிறரால் மதிக்கப்படும் தன்மையைப் பற்றிய உயர்வு, தாழ்வு என்றே கொள்க. மனிதர்களிற் சிலர் அவருடைய நல்ல ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி உயர்வாகவும் மதிக்கப்படுவதென்று யான் கூறினும் பொது உடமைகளிலும் பொது இடங்களிலும் அவரெல்லாருக்கும் சம உரிமையும் சம இருப்பும் கொடுக்கப்பட வேண்டுமென்றே கூறுகின்றேன். ஆனால் தனி உடமைகளிலும் தனி இடங்களிலும் அவற்றின் சொந்தக்காரர் விருப்பம் போல் நல்ல ஒழுக்கம் முதலியவற்றை உடையவர்க்கும் தீய ஒழுக்கம் முதலியவற்றை உடையவர்க்கும் முறையே உயர்ந்த உரிமையும் இருப்பும் தாழ்ந்த உரிமையும் இருப்பும் கொடுக்கப்படலாம்.
உதாரணமாக, இராசாங்கத்தாரால் அல்லது ஸ்தல சொந்த ஸ்தாபனங்களால் ஏற்படுத்தப்பட்ட கலாசாலைகள், சத்திரங்கள், புகை வண்டிகள் அவற்றின் உணவு சாலைகள் முதலியவற்றில் எல்லா ஜாதியார்களும் சம இருப்பும் சம பந்தி போஜனமும் கொடுக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் அவற்றை அடைய உரிமை உடையவர்கள்.
ஒருவரால் அல்லது ஒரு ஜாதியாரால் அல்லது சில ஜாதியார்களால் முறையே அவருடைய அல்லது அந்த ஜாதியாருடைய அல்லது அந்த சில ஜாதியார்களுடைய உபயோகத்திற்காக மாத்திரம் ஏற்படுத்தப்பட்ட கலாசாலைகள், சத்திரங்கள் முதலியவற்றில் அவற்றை ஏற்படுத்தியவர் இஷ்டப்படி சில ஜாதியாருக்குச் சம இருப்பும் சமபந்தி போஜனமும் வேறு சில ஜாதியாருக்குத் தாழ்ந்த இருப்பும் தனிப்பந்தி போஜனமும் கொடுக்கப்படலாம். தாழ்ந்த இருப்பையும் தனிப்பந்தி போஜனத்தையும் வேண்டாதார் அம்‘மதியாதார் வாசல் வழி மிதிக்க வேண்டா’. அதுபற்றி அவரோடு பகைமை கொண்டுதல் தகுதியன்று. ஒரே தாய் தந்தை பெற்ற மக்களில் ஒருவர்க்கு உயர்ந்த இருப்பும் போஜனமும் கொடுக்கப் படுகின்றன வாகலான்.
ஒருவருடைய அல்லது ஒரு சிலருடைய சொந்தக்காரியங்களில் அவருடைய, அல்லது அச்சிலருடைய, இஷ்டப்படி அவர் அல்லது அச்சிலர், நடந்து கொள்ளும்படியாக மற்றவர்கள் விட்டுவிடுதலே முறையாகும். அவருடைய சொந்தக் காரியங்களில் மற்றவர்களது இஷ்டப்படி அவர் நடக்க வேண்டுமென்பது முறை அன்று.
ஒருவருடைய சொந்தக் காரியங்களிலும் அவர் மற்றவர்களது இஷ்டப்படி நடக்க வேண்டுமென்றால் அவர் தம் சுதந்திரம் சுவாதீனம் முதலியவற்றை இழந்து மற்றவர்களுக்கு அடிமையாய் வாழ வேண்டியதாகவே ஏற்படும். அப்போது அவருடைய உடல், பொருள், உயிர், மனைவி, மக்கள் எல்லாம் மற்றவர்களுடைய சொந்த உடைமைகளாக விட்டுவிட வேண்டிய நிலைமையும் ஏற்படக்கூடும். அதனால் பெருங்குழப்பம் ஏற்பட்டுத் தேசத்தார்களுள் போர் நிகழவும் கூடும்.
உலகத்திலும் அதன் ஒரு பாகமாகிய நம் தேசத்திலும், சரியான ஒன்றையோ, தப்பான ஒன்றையோ ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமை களும், அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளும், எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். அவற்றை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுதலும், அவற்றை ஒழிப்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ தடையயன்று சொல்லுதலும் ஆழ்ந்து ஆலோசியாமல் மேலெழுந்த வாரியாகச் சொல்லுதலாம். நாம் வேண்டுவது நம் தேசத்தவருள் நித்தியமாக நிலவும் ஒற்றுமையே. அவ்வொற்றுமைக்கு ஜாதி வேற்றுமை ஒழிவும், அது பற்றிய உயர்வு தாழ்வு ஒழிவும் அவசியம் என்று சிலர் சொல்லி வருகிறபடியால் அவ்விரண்டின் ஒழிவையும் நம்மில் சிலர் விரும்புகின்றனர். அவற்றின் ஒழிவு அவசியம் என்று அச்சிலர் கூறுவதற்குக் காரணம், தற்காலம் நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான ஜாதி வேற்றுமைகளும் அவற்றைப் பற்றிய உயர்வு தாழ்வுகளுமே.
ஆனால், உயர்வு தாழ்வு இல்லாத ஒரே ஜாதியாருள்ளும், ஒரே குடும்பத்தினருள்ளும், ஒற்றுமையின்மையும், பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கின்றோம்.
இதன்றியும், தம் ஜாதி உயர் வென்றும், பிறர் ஜாதி தாழ்வென்றும் கருதும் இதுவேறு ஜாதியார், சிலர் ஒற்றுமைப்பட்ட அத்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கின் றோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் ஜாதி வேற்றுமையும், அது பற்றிய உயர்வு தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கத் தக்கது. ஆயின், நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, முதலிய வற்றிற்கு முக்கியமான காரணம் யாதோ? எனின், நம் தேசத்து இராஜாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங் களிலும், காங்கிரஸ் மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே. இவ்வுண்மையை ஓர் உதாரண முகத்தால் விளக்குகின்றேன்.
ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் பத்துப்பேர்கள் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும், கர்ணம் உத்தியோகம் ஒன்றும் கிராம முன்சீபு உத்தியோகம் ஒன்றும் இருக்கின்றன. சகோதரர் பதின்மரில் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த இருவர், கர்ணம் உத்தியோகத்தை ஒருவரும், கிராம முனிசீபு உத்தியோகத்தை மற்றொருவருமாகக் கொண்டு அவற்றின் சம்பளங்களைப் பெற்றும் குடும்ப நிலங்களை எல்லாம் மற்றைச் சகோதரர்கள் எண்மரைக் கொண்டு பயிரிடுவித்து விளை பொருள்களை அடைந்தும், அவற்றைத் தம் இஷ்டப்படி தமது மனைவி மக்களின் சுக வாழ்க்கைக்கு உபயோகித்துக் கொண்டும் மற்றைச் சகோதரர்கள் எண்மரும் அவர்கள் மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்கக் திண்டாடும்படி விட்டுக் கொண்டும் இருக்கின்றனர். வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த அவ்விரு சகோதரரும் கர்ணம், கிராம முனிசீபு உத்தியோக அதிகாரம், சம்பளம், செல்வாக்கு, குடும்ப நிலங்களின் ஊதியம் முதலியவற்றை அநுபவிக் கின்றதையும், தாமும் தமது மனைவி மக்களும் அன்னவஸ்திரத்திற்குத் திண்டாடுகின்றதையும், மற்றைச் சகோதரர் எண்மரும் கவனித்தார்கள்.
உடனே அவர்கள் எண்மரும் முந்திய இருவரையும் பார்த்துக் ‘கர்ணம் கிராம முனிசீபு உத்தியோகங்கள் குடும்பத்துக்குப் பொதுவான உத்தியோகங் கள் : ஆயிரம் ஏக்கர் நன்செய் புன்செய்களும் குடும்பத்துக்குப் பொதுவான நிலங்கள்.
அவ்விரு உத்தியோகங்களையும் நிலங்களையும் சமமாகப் பத்துப்பங்கு வைத்துப் பிரித்து அநுபவிப்போம்’ என்று கூறுகின்றனர். முந்திய சகோதரர் இருவரும் மற்றச் சகோதரர் எண்மரையும் பார்த்து, ‘நமது உத்தியோகங்களையும் சொத்துக்களையும் நாம்பிரிவினை செய்து கொண்டால், நமக்கு ஒற்றுமையின்மை ஏற்பட்டுவிடும். கர்ணம் உத்தியோகத்தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும், வகிக்க நீங்கள் தகுதி இல்லாதவர்கள். அன்றியும் இரண்டு உத்தியோகங்களைப் பத்துப்பேர்கள் பகிர்ந்து கொள்வதெப்படி? உத்தியோக அதிகாரமும் செல்வாக்கும் இல்லாதவர்கள் சொத்துக்களைச் சரியாகப் பரிபாலித்தல் முடியாது. ஆதலால் நம் குடும்ப உத்தியோகங்களையும் சொத்துக்களையும் பிரிக்க வேண்டா’ என்று சொல்லுகின்றனர்.
மற்றை எண்மரும் ‘நாங்கள் ஒவ்வொருவரும் கர்ணம் உத்தியோகத் தையும் கிராம முனிசீபு உத்தியோகத்தையும் வகித்துப பார்த்தால்தானே நாங்கள் அவற்றிற்குத் தகுதியுடையவராவோம். இரண்டு உத்தியோகங் களைப் பத்துப் பங்க வைப்பதெப்படி யயன்றால், ஒவ்வொருவர் ஒவ்வொரு வருமாக அவ்வுத்தியோகங்களைப் பார்த்து அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை அடைவோம். நன்செய் புன்செய்களைச் சம பாகமாகப் பிரித்துக் கொள்வோம் என்று கூறுகின்றனர்.
கணவான்களே! உத்தியோகங்களையும், குடும்பச்சொத்துக்களையும் சமமாகப் பிரித்துக் கொள்வதால் அச்சகோதர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அல்லது உத்தியோகங்களையும், சொத்துக்களையும் பிரித்துக் கொள்ளாமல் முந்திய சகோதரர் இருவரும் மாத்திரம் அவற்றின் ஊதியங்களை அடைந்து அநுபவிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வுத்தியோகங் களையும் சொத்துக்களையும் சமபாகமாகப் பிரித்துக் கொள்வதே அச் சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமை நிலவுவதற்கு வழியயன்பதும், அவை பிரிக்கப்படாதிருத்தல் அச்சகோதரர் பதின்மருள்ளும் ஒற்றுமையின்மையும் பகைமையும் வளர்வதற்கு வழி என்பதும் பள்ளிச் சிறார்க்கும் தெள்ளென விளங்கத்தக்கவை.
இனி, சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், காங்கிரஸ் சபை முதலிய பொது ஸ்தாபனங்களும் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையை அந்தந்த வகுப்பினர்களே உடையவர்களா யிருத்தல் வேண்டும். ஆனால், சிலர் அப்பிரதிநிதிகளும் கலப்புத் தொகுதிகளால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்தப்படுமானால் ஜாதி வேற்றுமைகள் இன்னும் வளருமென்றும் கூறுகின்றனர்.
வகுப்புவாரித் தொகுதிகள் ஏற்படுத்துவதானால் ஜாதி வேற்றுமைகள் வளரப்போவதில்லை. அவை வளர்ந்தாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ஜாதியாயிருந்தாலும் கூட, அதனால் நம் தேசத்திற்குக் கேடு ஒன்றும் உண்டாகப் போவதில்லை. நாம் வேண்டுவதெல்லாம் ஒற்றுமை யொன்றே. வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வகுப்புவாரித் தொகுதியாக வாக்காளர்கள் (வோட்டர்கள்) ஏற்படுத்தப்பட வில்லையானால், வகுப்புவாரிப பிரதிநிதித்துவம் பொய்ப்பேச்சாகிப் பழையபடி நமக்குள் ஒற்றுமையின்மையும், பகைமையும், சண்டையும்தான் வளர்ந்து கொண்டிருக்கும்.
நமக்குள் ஒற்றுமையை உண்டாக்கி வளர்ப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகுப்புவாரி வோட்டர்த் தொகுதிகள் இன்றியமையாதவை. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அந்தந்த வகுப்பிலுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்பாலரையும், பெண் பாலரையும் வாக்காளர்களாக ஏற்படுத்துவதற்கு வேண்டுவன செய்யும்படிக்கும் தேசாபிமானச் சகோதர்களையயல்லாம் பிரார்த்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆதலால், நம் தேசத்தாருள் ஒற்றுமை ஏற்படுவதற்கு நமது இராஜாங்க உத்தியோகங்களிலும், ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நிலவும்படி செய்தலே உண்மைத் தேசாபிமானி ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.
இவ்வுண்மையை அறிந்தே நம் தலைவர்கள் காங்கிரஸ் மகாசபையின் உத்தியோகம் முதலியவற்றைப் பற்றிய விதிகளில் முகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தாபனங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும், தாழ்ந்த வகுப்பினரென்போர்களுக்கு இத்தனை ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வரையறுத்துத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
உண்மை இவ்வாறிருக்க, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒற்றுமை யின்மையை உண்டுபண்ணும் என்பவரைப் பற்றி யான் என்ன கூறுவேன்? அவர் உண்மையை உணராதவரென்று கூறவோ, ஒற்றுமையை நாடாதவரென்று கூறவோ, காங்கிரஸ் மகாசபை விதிகளின் கருத்துப்படி நடக்காதவரென்று கூறவோ என் மனம் துணியவில்லை.
ஆதலால் அவரைப் பற்றி யான் குறையயான்றும் கூறாமலே, அவர் இனிமேலாயினும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் மேற்கூறிய உத்தியோகங்களிலும், மற்றைப் பொது உடைமைப் பரிபாலனங்களிலும் நிலவும்படி செய்து நமக்குள் தற்காலம் நிலவா நின்ற ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றை நீக்கி ஒற்றுமையை உண்டாக்கி வளர்க்கும்படியாகப் பிரார்த்தித்து வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.
இராஜாங்க உத்தியோகங்கள்
சட்டசபை, நகர பரிபாலன சபை, ஜில்லா நிர்வாக சபை, தாலுகா நிர்வாக சபை முதலியவற்றின் அங்கத்தினர் ஸ்தாபனங்களைத் தேச பக்தர்கள் ஏற்றுக் கொள்ளலாமென்று இப்போது நமது தலைவர்களெல்லாம் ஒரு மனதாகச் சொல்லிவிட்டபடியாலும் அந்த ஸ்தானங்களை நம் தேச பக்தர்கள் இப்போது ஏற்றுக் கொண்டு வருகிறபடியாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளுத லின் ஆவசியகத்தைப் பற்றி யான் ஒன்றும் கூறவேண்டுவதில்லை. ஆனால் இராஜாங்க உத்தியோகங்களைத் தேச பக்தர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடா தென்று நம் தலைவர்களில் சிலர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக் கின்றனர். இராஜாங்க உத்தியோகங்களைத் தேசபக்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால், தேசபக்தரல்லாதார்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கின்றார்கள்.
அவ்வுத்தியோகங்களைத் தேசபக்தர்கள் ஏற்றுக் கொண்டால், அவற்றின் அதிகாரம், செல்வாக்கு, சம்பளம் முதலியவற்றை அவர்களுடைய சொந்த குடும்ப நன்மைக்கும், தேச தீமைக்கும் அவர்கள் உபயோகிப்பார்கள்.
இராஜாங்க உத்தியோகங்களை நம் தேசத்தார்களில் எவருமே ஏற்றுக் கொள்ளாமலிருக்கும்படி செய்துவிடலாமென்று சிலர் கூறுகின்றனர். அது அசாத்தியமான காரியம், அதிகாரத்தையும், செல்வாக்கையும், பொருளை யும் விரும்பாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லையாகலான் ; உணவு, உடை முதலியவற்றையும் மனைவி, மக்கள் முதலியவர்களையும் விரும்புகிறவர் களெல்லாம் இராஜாங்க உத்தியோகங்களையும், அவற்றின் அதிகாரம், செல்வாக்கு, சம்பளம் முதலியவற்றையும் விரும்புவார்களென்பது வெள்ளிடை மலை போல் விளங்கத்தக்கது. ஆதலால், இராஜாங்க உத்தியோகங்கள் வேண்டா என்னும் வெறும் பேச்சை விட்டுவிட்டு நாம் இராஜாங்க உத்தியோகங்கள் எல்லாவற்றையும் அடையும்படியான மார்க்கத்தில் செல்வோமாக. இராஜாங்கத்தோடு கோபித்துக் கொண்டு இராஜாங்க உத்தியோகங்கள் வேண்டா என்றால், குளத்தோடு கோபித்துக் கொண்டு குளியாமல் போதலை ஒக்கும். அதனால் இராஜாங்கத்தார் நஷ்டம் அடையப் போவதில்லை. நாம்தான் நஷ்டம் அடைவோம்.
சுய அரசாட்சி என்பதுதான் யாது? நாம் நம் தேசத்தை ஆளுதல்தானே? கவர்னர் உத்தியோகம் முதற்கொண்டு, வெட்டியான் உத்தியோகம் வரையிலுள்ள சகல உத்தியோகங்களையும் நம் தேசத்தார்களே வகிப்பார்களாயின், நம் தேசத்தார்களே நம் தேசத்தை ஆள்பவர்களா கின்றார்கள் என்பதில் என்ன தடை?
கல்வி, அறிவு, தேசாபிமானம், இராஜீய ஞானம் முதலியவை நிறைந்து விளங்கிய ஸ்ரீதிலகர், நம் தேச அரசாட்சி சம்பந்தமான சகல உத்தியோகங் களையும் நம் தேசத்தார்கள் அடைதலே நாம் சுய அரசாட்சி அடைதலாகு மென்று அவர் ஆயுள்காலமெல்லாம் கூறிவந்தார். இராஜீய வியங்களில் அவரைப் பின்பற்றுகிற யானும் அதனையே கூறுகின்றேன். நம் தேசத்தின் மாகாணத்தின் கவர்னராக நமது லார்டு சின்னா நியமிக்கப்படவில்லையா? அவ்வாறு நம் தேசத்தின் பல மாகாணங்களுக்கும் லார்டுகளான பல இந்தியர்கள் கவர்னராக நியமிக்கப்படுவார்களாயின், நம் தேச அரசாட்சியை நாம் அடைந்துவிட்டோமென்பதில் என்ன ஐயமுளது? அவ்வாறு நம் தேசத்து எல்லா மாகாணங்களுக்கும் இந்தியர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுவார் களா என்று சிலர் வினவலாம். லார்டு சின்னா கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு காரணம் யாது? அப்போது தேசத்தலைவர்களுள் காணப்பட்ட ஒற்றுமை யன்றோ? லார்டு சின்னா உத்தியோகத்தை விட்டதற்கக் காரணம் யாது? அப்போது தேசத் தலைவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மை யன்றோ நம் தேசத் தலைவர்கள் எல்லாருள்ளும் பூரண ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதென்று நம்மை ஆள்வோர் எந்த நிமிம் காண்பரோ, அந்த நிமிமே நமது தேசத்தின் பல மாகாணங்களும் நம்மவர்களையே கவர்னர்களாக நியமித்து நமது தேசத்தை நாமே ஆளும்படி செய்துவிடுவர் என்பது நிச்சயம்.
இராஜாங்க உத்தியோகங்களைக் கொடுப்போர்கள் இராஜாங்க அதிகாரி களாயிருக்கும் போது, இராஜாங்க உத்தியோகங்களில் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ நிலவும்படி நாம் செய்வது எப்படி என்று சிலர் வினவுகின்றனர்.
ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், பொது ஸ்தாபன உத்தியோகங் களிலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியாக நிலவும்படி நாம் செய்து விட்டோமென்றால், இராஜாங்க உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியாக நிலவும்படி நம் இராஜாங்க அதிகாரிகள் செய்து விடுவார்கள். இராஜாங்க உத்தியோகங்களிற் பெரும்பாலானவற்றைத் தற்காலம் ஒன்றிரண்டு ஜாதியார்கள் மாத்திரம் கைக் கொண்டிருக்கிறார்கள். அவ்வுத்தியோகங்களை நம் தேசத்திலுள்ள எல்லா ஜாதியார்களுக்கும் பகிர்ந்துகொடுப்பது எவ்வாறென்று சிலர் வினவுகின்றனர். கவர்ன்மென்ட் அதிகாரிகள் ஒன்று செய்ய வேண்டுமென்று நினைப்பார்களாயின், அவர்கள் அதனை எப்படியும் செய்து முடித்துவிடுவார்கள்.
அதற்குரிய வழிகளெல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இப்பொழுதுள்ள இராஜாங்க உத்தியோகங்களில் எந்தெந்த ஜாதியார்களுக்கு எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டுமென்று கணக்கிடப்படுகிறதோ, அந்தக் கணக்குப்படி அந்தந்த ஜாதியார்கள் அத்தனை அத்தனை உத்தியோகங்கள் அடையும் வரையில் காலியாகும் உத்தியோகங்களுக்கு வேறு ஜாதியார்கள் நியமிக்கப்படக் கூடாதென்று கவர்ன்மென்ட் உத்தரவு (G.O.) ஒன்று பிறப்பித்து ஊர்ஜிதத்திற்குக் கொண்டுவந்துவிடுவார்கள். ஆனால் இவ்வுத்தரவு நாம் விரும்பும் பலனை விரைவில் அளிக்கமாட்டாது. மற்றை ஜாதியார்களுக்காக என்னென்ன உத்தியோகங்களில் எத்தனை எத்தனை கொடுக்கப்பட வேண்டுமென்று கணக்கிடப்படுகின்றனவோ, அத்தனை உத்தியோகங்களையும் இராஜாங்கத்தார் உடனே காலி செய்விக்க வேண்டும். அதற்கு வருத்திற்கு மேற்பட்டு இன்னின் உத்தியோகங்களை வகிக்கின்றவர்கள் உடனே அவ்வுத்தியோகங்களை விட்டு ஓய்வுச் சம்பளம் வாங்கிக் கொண்டு விலகிவிட வேண்டுமென்றும், இத்தனை வருத்திற்குட்பட்டு இன்னின்ன உத்தியோகங்களை வகிக்கின்றவர்க ளெல்லாம் கவர்ன்மென்ட்டுக்குத் தேவையில்லையயன்றும் ஒரு சட்டம் (Bill) சட்டசபையிற் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அந்தச் சட்டப்படி முந்தியவர்களையும், பிந்தியவர் களையும் அவரவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டுக் காலியான அவ்வுத்தி யோகங்களை மற்றை ஜாதியார்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இராஜாங்க அதிகாரிகள் அவ்வாறு சட்டம் உண்டுபண்ண முற்பட வில்லையானால், சட்டசபையிலுள்ள நமது பிரதிநிதிகள் மூலமாக அவ்வாறான சட்டமொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றும்படி செய்து அந்தச் சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவரும்படி கவர்ன்மென்ட் அதிகாரிகளை நாம் வற்புறுத்த வேண்டும்.