Sunday

வ.உ.சி.யின் அரசியல் பெருஞ்சொல்-6

இராஜாங்கத்தார்க்குச் சில சொற்கள்

அறிகென் றறியான் எனினும்,  உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

இந்தியர் தமது தேசத்துக்குச் சுயஅரசாட்சி வேண்டுமென்று விரும்பியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று தேசத்தார்களிற் பெரும்பாலார் வறுமையால் வாடுதல். மற்றொன்று தேச நீதிபதிகளிற் சிலர் செய்யும் கொடுஞ்செயல்கள், இவ்விரு காரணங்களும் பரிகரிக்கப்பட்டுவிட்டால், தேசத்திற்குச் சுய அரசாட்சி வேண்டும் என்பவரின் எண்ணிக்கை, ‘பஞ்ச பாண்டவர்களை யான் அறியேனா? கட்டில்கால் போல மூன்று பேர்’ என்று சொல்லி இரண்டு விரலைக் காட்டிப் பூமியில் ஒன்று எழுதி அதனை அழித்து விட்டனன் என்று கதைபோல் ஆய்விடும்.

ஜனங்களின் வறுமை

தேசத்திலுள்ள சுமார் முப்பத்திரண்டு கோடி ஜனங்களில் பசியால் உழன்று சாகின்றவர்கள் சுமார் ஒரு கோடி யயன்றும், அரை வயிறுக் கஞ்சியுடன் வருந்துகின்றவர்கள் சுமார் இரண்டு கோடியயன்றும், தொழில் கிடையாமல் திண்டாடுகின்றவர்கள் பல கோடியயன்றும் தேசாபிமானிகள் கணக்கிட்டுக் கூறுகின்றார்கள். அவர்களது அந்நிலைமைக்குக் காரணம் இராஜாங்கப் பரிபாலனக் குறைவு என்றுதானே யாரும் சொல்வர்?

அவர்கள் வறுமைத் துன்பத்தைப் போக்குவதற்கு இராஜாங்கத்தார் செய்யத் தக்கவை இரண்டு. ஒன்று இந்தியாவில் விவசாயத்துக்கு இதுவரையில் கொண்டுவரப்படாத மலைப்பக்க நிலங்களையும், ஏனைய தரிசு நிலங்களையும் விரைவில் விவசாயத்துக்கு கொண்டு வருவதற்காக ஆங்காங்கு இராஜாங்க விவசாயப பண்ணைகள் ஏற்படுத்தி வேலை கிடையாது திண்டாடும் ஜனங்களைக் கொண்டு விவசாயம் செய்வித்து அவர்களுக்குக் கூலி கொடுத்தல், தேசத்தில் எந்தெந்த இடத்தில் எந்தெந்த தொழில் செய்வதற்கு செளகரியங்கள் அமைந்திருக்கின்றனவோ, அந்தந்த இடத்தில் அந்தந்த தொழிலைச் செய்வதற்கு இராஜாங்கத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலை கிடையாது திண்டாடும் ஜனங்களைக் கொண்டு அத்தொழிற்சாலைகளில் தொழில் செய்வித்து அவர்களுக்குக் கூலி கொடுத்தல் மற்றொன்று.

இராஜாங்கத்தார் மேற்கண்டபடி விவசாயப் பண்ணைகளையும் தொழிற் சாலைகளையும் ஏற்படுத்தி வேலைகிடையாது திண்டாடும் இந்தியர்களுக் கெல்லாம் வேலை கொடுத்து அவர்கள் வறுமையை நீக்கினும், அவர்கள் மதுபானம் செய்ய வழியில்லாமற் செய்தாலன்றி அவர்களது வறுமை நீங்கப் போவதில்லை. அவர்கள் வறுமை நீங்காத வரையில் இராஜாங்கத்தாரையே குறை கூறுவர். அன்றியும், மது பானத்தால் இராஜாங்கத்தார் வரும்படி அடைந்துவருகிறதைப் பற்றி இராஜாங்கத்தாரை அறிவுடையோர்களெல்லாம் மிக மிக இழிவாகப் பேசி பழிக்கின்றனர். 

அவ்விழிவையும், பழிப்பையும் நீக்குவதற்காகவும் இராஜாங்கத்தார் மது பானத்தைத் தேசத்தை விட்டு அடியோடு ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

சில நீதிபதிகளின் கொடுஞ்செயல்கள்

1. இப்பொழுதுள்ள சப்மேஜிஸ்டிரேட்களிற் பலரும் டிவி­னல் மேஜிஸ்டிரேட்டுகளிற் சிலரும் போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கு அடிமை களாயிருக்கின்றனர். தமது கோர்ட்டில் சப் இன்ஸ்பெக்டரைக் கண்டால் நடுங்குகின்றனர். அவ்வச்ச நடுக்கங்களின் பயன்போலீஸ் உத்தியோகஸ் தரால் சார்ஜ் செய்யப்படும் கேஸ்களில் பெரும்பாலானவற்றில் எதிரிகள் தண்டனையடைதலும், தண்டனை உறுதி செய்யப்படுதலும், செ­ன்ஸ் கோர்ட்டுக்கு கமிட் (commit) செய்யப்படுதலுமே.

2. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்படாத கேசுகளிற் பெரும்பாலான ‡ அவை எத்தன்மையனவாயிருந்தாலும் சரி ‡ கிரிமினல் புரோசீஜர் கோடு 203 வது பிரிவுப்படியும் 253, 209 வது பிரிவுகளின்படியும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

3. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட கேசுகளில் அப்போலீசு உத்தியோகஸ்தர்கள் அனுமதி தந்தாலன்றி வக்கீல்கள் பிராஸிக்கூ­ன் (வாதி) பக்கத்தில் ஆஜராகக் கூடாதென்று அப்போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வற்புறுத்துகின்றனர். அவ்வற்புறுத்தலை மேஜிஸ்டிரேட்டுகள் அங்கீகரிக் கின்றனர். அதனால் நேரிடும் அநீதிக்கு அளவேயில்லை. உதாரணமாக வாதியால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கொடுமை அதிகம் புரிந்த சிலரை விட்டுவிட்டுக் கொடுமை புரிந்த சிலரை மாத்திரம் சார்ஜ் செய்கின்றனர்; வாதியார் கோரப்பட்ட முக்கியமான சாட்சிகளை கோருகின்றனர் போலீஸ் உத்தியோகஸ்தர். இந்த நிலைமையில் வாதி என்ன செய்வது? வாதி பக்கத்துக்கோ போலீஸ் உத்தியோகஸ்தர் அனுமதியின்றி வக்கீல்கள் ஆஜராகக் கூடாது. தாம் விட்டுவிட்ட எதிரிகளையும் சாட்சிகளையும் சேர்ப்பதற்குப் போலீஸ் உத்தியோகஸ்தர் சம்மதிக்க மாட்டார். வாதி தன் கேசை இழக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. கிரிமினல் புரோசீஜர் கோடு 495 (1) பிரிவில் ஒரு கேசை விசாரணை செய்யும் மேஜிஸ்திரேட்டு எந்த மனிதனுக்கும் (வக்கீல் அல்லாதவனுக்குக் கூட அந்தக் கேசின்   பிராஸிக் கூ­ன் பக்கத்தை நடத்தும்படி) அனுமதி கொடுக்கலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் அவ்வதிகாரம்  போலீஸ் உத்தியோகஸ்தரின் அனுமதி யின்றி மேஜிஸ்டிரேட்டுகளால் செலுத்தப்படுவதில்லை.

4. எதிரியை ஜாமீன் பேரில் விடலாகாதென்று குறிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்காகப் போலீஸ்  உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட கேஸ்களில எதிரியை ஜாமீன் பேரில் விட வேண்டுமென்று கிரிமினல் புரோசிஜீர் கோடு 497 வது பிரிவுப்படி மனுச் செய்யப்படுமானால், எதிரியை ஜாமீன் பேரில் விடலாமாவென்று போலீஸ் உத்தியோகஸ்தரிடம் மேஜிஸ்டிரேட்டுகள் கேட்கின்றனர். அவர் ‘விடலாம்’ என்றால், எதிரி ஜாமீன் பேரில் விடப் படுகிறான். ‘விடக்கூடாது’ என்றால், எதிரி ஜாமீன் பேரில் விடப்படுவதில்லை. போலீஸ் உத்தியோகஸ்தரைக் கேட்டுதான் எதிரியை ஜாமீன் பேரில் விடவேண்டுமென்று சில டிஸ்டிரிக்ட் மேஜிஸ்டிரேட்டுகள் சப் மேஜிஸ்டிரேட்டுகளுக்கு சுற்றத்தரவு (circular) பிறப்பித்திருக்கிறதாகத் தெரிகிறது. கிரிமினல் புரோசீஜர் கோடு 497 வது பிரிவுப்படி மேஜிஸ்டிரேட்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட யுக்தம் (ம்ஷ்விஉreமிஷ்லிஐ) போலீஸ்  கேஸ்களில் பெரும்பாலும் உபயோகிக்கப் படுவதில்லை. 

5. போலீஸ் உத்தியோகஸ்தரால் சார்ஜ் செய்யப்பட்ட செ­ன் கோர்ட்டு பரிசீலனைக் கேஸ்களில் சப்மேஜிஸ்டிரேட்கள் எதிரியை விடுதலை (Discharge) செய்வது அருமையினும் அருமை, கேஸின சாட்சியம் எவ்வளவு அற்பமாயிருந்தாலும் சரி, நம்பக்கூடாததாயிருந்தாலும் சரி எதிரி செ­ன்ஸ் கோர்ட்டுக்குக் கமிட்டி செய்யப்படுகிறான். அதனால் அவன் அநியாயமாக ஒன்றிரண்டு மாதம் சிறையில் இருப்பதுடன் செ­ன்ஸ் கோர்ட்டில் தன் கட்சியை நடத்துவதற்காகப் பெருந்தொகை செலவு செய்யும்படியாகவும் ஏற்படுகிறது. கிரிமினல் புரோசிஜர் கோடு 209 வது பிரிவு அநேகமாக அடிக்கப்பட்ட எழுத்து (Dead letter) ஆகவேயிருக்கிறது.

6. மேஜிஸ்டிரேட்டுகள் செ­ன்ஸ் கோர்ட்டுக்குக் கமிட்டி செய்யும் கேஸ்களில் எதிரியை ஜாமீன் பேரில் விடக்கூடாதென்று சில டிஸ்டிரிக்ட்டு மேஜிஸ்ட்ரேட்டுகள் சுற்றுத்தரவு விடுத்திருக்கிறதாகத் தெரிகிறது. இச்சுற்றுத் தரவால் கிரிமினல் புரோசீஜர் கோடு 496,497, 220 பிரிவுகள் அடிக்கப்பட்ட எழுத்து (Dead letter) ஆகிவிட்டன.

7. சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் சிலர் லஞ்சம் (Illegal gratification) வாங்குகிறார்கள் என்பது பலரும் அறிந்த ஓர் அந்தரங்க விசயம் (open secret). இப்பொழுதுள்ள சட்டப்படி அவ்வுத்தியோகஸ்தர்களைத் தண்டனைக் குக் கொண்டுவருவது மிகக் கஷ்டமான காரியம். ஏனெனில், லஞ்சம் கொடுத்தவன் லஞ்சம் வாங்குவதலாகிய குற்றத்திற்கு உடந்தைக் குற்றம் (Abetment) செய்தவனாவான் என்று  இந்தியன் பினல்கோடு கூறுகின்றது. பெரும்பாலும் எதிரிதான் லஞ்சம் கொடுப்பவன். அவன் பேரில் ஏற்பட்ட ஒரு கேசிலிருந்து தப்புவதற்காக அவன் லஞ்சம் கொடுக்கிறான். அவ்வாறு லஞ்சம் கொடுத்தவன் ‘உடந்தைக் குற்றவாளி’ என்று சட்டம் சொல்லும் போது அவன் லஞ்சம் கொடுத்த வி­யத்தை வெளியில் சொல்வானா? சர்க்கார் அதிகாரிகளிடம் பிரியாது கொடுப்பானா? பொய்ப் பிரியாது செய்தவனைத் தண்டிப்பதற்கு இந்தியன் பினல் கோடு 211 முதலிய பல பிரிவுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் லஞ்சம் கொடுத்தவன் உடந்தைக் குற்றவாளி என்று விதிக்கும் சட்டம் இருப்பானேன்? அப்படியிருப்பது நீங்கள் லஞ்சம் கொடுங்கள், ஆனால் அதனை வெளியில் சொல்லாதேயுங்கள் என்று கட்டளையிட்டது போலாகிறது.

8. 1979ம் வரு­த்து வக்கீல்களின் சட்டம் (Legal Practitioner's) 3 வது பிரிவு ஒரு வக்கீலிடமிருந்து கிடைக்கும் பொருளுக்காக ஒரு வக்கீலுக்கு ஒரு கக்ஷிக்காரனைக் கொண்டு போய்விடுகிறவனும், அல்லது ஒரு வக்கீலிட மிருந்தாவது ஒரு கக்ஷக்காரனிடமிருந்தாவது தனக்குக் கிடைக்கும் பணத்திற்காக ஒரு வக்கீலுக்கு ஒரு கக்ஷிக்காரனை கொண்டுபோய்விடுவதாக அல்லது ஒரு கக்ஷிக்காரனுக்கு ஒரு வக்கீலைத் திட்டம் செய்து கொடுப்பதாகச் சொல்லுகின்றவனும், மேற்கண்ட வக்கீலுகளுக்கும் கக்ஷிக்காரனை கொண்டு போய்ச் சேர்ப்பதற்காக அல்லது கக்ஷிக்காரர்களுக்கு வக்கீலைத் திட்டம் பண்ணிக் கொடுப்பதற்காகச் சிவில் அல்லது கிரிமினல் திட்டம் பண்ணிக் கொடுப்பதற்காகச் சிவில் அல்லது கிரிமினில் அல்லது ரெவினியூ கோர்ட்டு எல்லைகளிலாவது ரயில்வே ஸ்டே­ன்கள், கக்ஷிக்காரர்கள் இறங்கும் அல்லது தங்கும் இடங்கள், அல்லது பொது ஜனங்கள் தங்கும் சத்திரம் முதலியவற்றிற்காவது அடிக்கடி போகிறவனும் ‘டெளட்’ ஆவான் என்று கூறுகின்றது.

ஆகஸ்ட் 13 வது பிரிவு ‘தனக்குக் கிடைத்த, அல்லது கிடைக்கும் பீஸிலிருந்து கேசை தனக்குக் கொடுத்ததற்காக அல்லது கொடுப்பதற்காக ஏதேனும், பணம் கொடுக்கும் அல்லது கொடுப்பதற்கு சம்மதிக்கும் ஒரு வக்கீலை வேலையி லிருந்து நீக்கிவிடலாம் Dismiss செய்யலாம். ஒரு குறித்த காலத்திற்கு நீக்கி வைக்கலாம் (Suspend) செய்யலாம்’ என்று கூறுகிறது.

க்ஷ ஆக்டு 36  வது பிரிவு ஹைக்கோர்ட்டும், டிஸ்டிரிக்டு ஜட்ஜும், செ­ன்ஸ் டிஸ்டிரிக்டு மேஜிஸ்டிரேட்டும், டிஸ்டிரிக்டு கலெக்டரும் தாம் நேரிலாவது, தமக்குக் கீழ்ப்பட்ட உத்தியோகஸ்தர் மூலமாகவாது, விசாரணை செய்து சாக்ஷியத்தால் அல்லது பொதுப் பிரஸ்தாபத்தால் ‘டெளட்டு’களின் தொழிலை வழக்கமாகச் செய்யும் மனிதர்களைத் தெரிந்து ஒரு ஜாப்தா தயார் செய்வித்துத் தம் கோர்ட்டிலும் தமக்குக், கீழ்ப்பட்ட கோர்ட்டுகளிலும் பிரசுரம் செய்யலாம்’ என்றும், ‘அந்த ஜாப்தாவில் கண்ட நபர்களை அந்தந்தக் கோர்ட்டார் தமது கோர்ட்டு எல்லைக்குள் வரக்கூடாதென்று உத்தரவு செய்யலாம்’ என்றும் கூறுகின்றது.

க்ஷ சட்டம் மேற்கண்டவாறு சொல்லியிருந்தும், வக்கீல்களிற் பலர் ‘டெளட்’களுக்குத் தாம் வாங்கும் பீஸிலிருந்து இரண்டிலொரு பங்கு மூன்றிலொரு பங்கு, நான்கிலொரு பங்கு வீதம் கமி­ன் கொடுத்து அந்த டெளட்டுகள் மூலமாக கக்ஷிக்காரர்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஊரில் சர்ட்டிபிக்கேட்ப் பெற்ற வக்கீல்கள் 10 பேர் இருந்தால் ‘டெளட்டுகள்’ 20 பேருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அந்த ‘டெளட்டு’கள் மேற்கண்ட கோர்ட்டு முதலிய இடங்களில் மாத்திரமல்லாமல், டெளட்டுகளுக்குக் கமி­ன் கொடாத வக்கீல்களின் ஆபீஸ்களின் முன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கண்ட வக்கீல்களின் சட்டம் 36வது பிரிவானது ஜாப்தா தயார் செய்வித்துப் பிரசுரிக்கலாம் (May prepare and publish)  என்று சொல்லுகிற காரணத்தாலோ, அல்லது உதாசீனத்தாலோ, ‘டெளட்டு’களால் அநேக கக்ஷிக்காரர்களின் பொருள்கள் அநியாயமாகக் கவரப்படுகின்றது. அநேக வக்கீல்கள் மிக இழிவாகக் கருதப்படுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் நீதி தவறுவதற்கும் இடம் ஏற்படுகிறது. க்ஷ 36 வது பிரிவிலுள்ள ‘May’ என்பதற்குப் பதிலாக‘Shall’ என்று போட்டு க்ஷ சட்டத்தைத் திருத்தினாலன்றி க்ஷ மூன்று பிரிவுகளும் க்ஷ சட்டத்தில் இருப்பதால் யாதொரு பயனும் இல்லை.

தமிழர்களுக்கு விரைவில் வேண்டியவை

நம் தமிழ்நாடு மிகப்பரந்த நாடு. சேரன்,சோழன், பாண்டியன் என்னும் மூன்று பேரரசர்களும் பல சிற்றரசர்களும் கூடி ஆண்டு வந்த பெரிய நாடு. தமிழ்நாட்டில் ஏறக்குறைய நான்குகோடி ஜனங்கள் இருக்கிறார்கள். தமிழ் மொழி (பாஷை) மிகத் தொன்மையானது. அது மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு முதலிய பல பாஷைகளுக்குத் தாய்ப் பாஷையாய் விளங்குவது. ஒப்புயவர்வற்ற தொன்னூல் எண்ணிறந்தவற்றை உடையது. பேசுவதற்கும், எழுதுவதற்கும், பாடுவதற்கும் மிகப் பொருத்தானது. இந்நாட்டில் பாஷையும் தொழிலும் கற்கத்தக்க ஆண்மக்கள் பெண்மக்கள் சுமார் ஒரு கோடி (நூறு லெக்ஷம்) பேர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறிருந்தும், இந்நாட்டில் இதுவரையில் தமிழ் சர்வகலா சாலை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டிலும் மிக மிகச் சிறியதாகிய ஆந்திர நாட்டிற்கு ஆந்திர சர்வகலாசாலை ஏற்பட்டுவிட்டது. இதுவரையில் தமிழ் சர்வ கலாசாலை ஏற்படாததற்குக் காரணம் சட்டசபையிலுள்ள தமிழ் அங்கத்தினர் களின் ஊக்கக் குறைவும் இராஜாங்கத்தாரின் கவனக் குறைவுமே என்று யான் கருதுகின்றேன். அவ்விரு திறத்தாரையும் என் போன்றோர் இனி மேலும் குறைகூறாத வண்ணம் அவர்கள் ‘தமிழ் சர்வ கலாசாலை’யை வெகு விரைவில் ஸ்தாபிப்பார்களாக.

தமிழ்நாட்டிலுள்ள சில நகரங்களிலும் பல கிராமங்களிலும் வேண்டிய அளவு வைத்திய உதவிகள் கிடையாமல் ஜனங்கள் படும்பாடு பெரும்பாடா யிருக்கிறது. எனது நீண்ட கால அனுபவத்தில் தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கும், தமிழ் நாட்டினரின் சரீர இயற்கைக்கும் பொருத்தமான வைத்தியம் தமிழ்ச் சித்த வைத்தியமே என்று யான் கண்டுள்ளேன். தமிழ்ச் சித்தர்கள் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து வசித்துத் தமிழ்நாட்டினுடைய நிலைமைகளையும் தமிழ் மக்களுடைய பழக்க வழக்க ஒழுக்கங்களையும் நேரில் அறிந்து வைத்தியம் செய்து வைத்திய நூல்கள் எழுதி வைத்தவர்களான படியால், அவர்கள் வைத்தியம் தமிழ்நாட்டிற்கு மிகப் பொருத்தமா யிருக்கிறது. 

இவ்வுண்மையினைக் கண்டு இராஜாங்கத்தாரும் தமது சென்னை நகர வைத்தியக் கல்லூரியில் தமிழ் சித்த வைத்தியத்தைக் கற்றுக் கொடுக்கும் படியான ஏற்பாடு செய்திருக்கின்றனர். சில நகர பரிபாலன சங்கத்தினரும், ஜில்லா நிர்வாக சபையினரும், சில தாலுகா நிர்வாக சபையினரும் சிற்சில இடங்களில் தமது செலவில், அல்லது தமது பொருளதவியில், தமிழ்ச் சித்த வைத்திய சாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

இன்னமும் தமிழ் நூல்களெல்லாம் பாக்களாகவே இருக்கின்றன. அவற்றை வசன நடையில் எழுதி வெளிப்படுத்துவதற்கும், தமிழ்ச்சித்த வைத்திய மாணவர்களுக்கு ரண வைத்தியம் (Surgery) தற்கால மேனாட்டு முறையில் இன்னம் அதிகமாகக் கற்பிக்கும்படிக்கும் இராஜாங்கத்தார் ஏற்பாடு செய்தல் வேண்டும். இராஜாங்கத்தாரும் ஸ்தலஸ்தாபன சபையார்களும் சேர்ந்து தமிழ் நாட்டிலுள்ள பெரிய கிராமம் ஒவ்வொன்றிலும், சிறு கிராமங்கள் சில சிலவாகச் சேர்ந்து அவற்றின் மத்தியிலுள்ள கிராமத்திலும் தமிழ்ச் சித்த வைத்தியசாலைகளை அமைத்து ஜனங்களுக்கு வேண்டும் சமயத்திலும் எளிதாகவும் வைத்திய உதவி கிடைக்கும்படி செய்வார்களாக.

சேலம் ஜில்லா வி­யங்கள்

நமது தேசம் சுய அரசாட்சி பெறுவதற்கு நாம் என்யன்ன செய்ய வேண்டுமென்றும், நமது இராஜாங்கத்தார் என்னென்ன வி­யங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், நமது தமிழ்நாட்டிற்கு விரைவில் வேண்டியவற்றையும் இங்குச் சொன்னேன். இந்த சேலம் ஜில்லா மாநாட்டில் இந்த ஜில்லாவின் நன்மைக்காகச் செய்யப்பட வேண்டியவற்றைப் பற்றி ஒன்றும் யான் சொல்லவில்லையே என்று சிலர் நினைக்கலாம். அந்த ஜில்லா வி­யம் ஒன்றும் எனக்குத் தெரியாது. அவ்வி­யங்களைத் தெரிந்தவர்கள் வி­யாலோசனைச் சபைக் கூட்டத்திலும் இம்மகாநாட்டிலும் பேசி வேண்டுவன செய்யுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

முடிவுரை

எனது பேச்சு மிக வளர்ந்துவிட்டபடியாலும், நாம் இம்மகாநாட்டில் செய்ய வேண்டிய முக்கிய வேலைகள் பல இருப்பதாலும், என் பேச்சை இம்மட்டில் நிறுத்திவிடுகின்றேன். இம்மகாநாட்டின் தலைமையான யான் வகிக்கும் படியான பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படிச் செய்ததற்காகச் சேலம் ஜில்லாவாசிகளாகிய உங்கள் எல்லோருக்கும் என் நன்றியறிதலைத் தெரியப்படுத்தி என் நமஸ்காரத்தை அளிக்கின்றேன். இந்த மகாநாடு இனிது நடைபெற்று முடிவதற்கும், இந்த மகாநாட்டில் நமது தேசம் விரைவில் சுய அரசாட்சி பெறுவதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கும், நீங்கள் எல்லோரும் எனக்கு உதவி புரிவதுடன் எல்லாம் வல்ல இறைவனும் எனக்குத் துணை புரியும்படியாக யான் வணங்கிப் பிரார்த்திக்கிறேன்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை, 

தலைவன்

No comments:

Post a Comment