Monday

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 2

சுய அரசாட்சி

நல்லாண்மை யயன்ப தொருவற்குத்          தான்பிறந்த

இல்லாண்மை யாக்கிக் கொளல்

என்று நமது முன்னோர் கூறியுள்ளார். 

அதாவது, ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த தேசத்தின் ஆள்கையைத் தன்னது ஆக்கிக் கொள்ளுதல். சுய அரசாட்சி அடைதலே நமது நோக்கம் என்று நமது காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ‘சுய அரசாட்சி’ என்றால் என்ன? சுய அரசாட்சி எது போலிருக்கும்? என்று அறிவாளிகளும் அடிக்கடி வினவக் கேட்டிருக்கிறேன். அவர் அதனை அறியாமல் வினவுகின்றனரா? அல்லது அறிந்திருந்தும் ஏனையோர் அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக வினவுகின்றனரா? என்பது தெரியவில்லை. 

அது யாதாயினும் ஆகுக. சுய அரசாட்சியைப் பற்றி யான் அறிந்துள்ள வற்றைச் சொல்லுகின்றேன். 

சுய அரசாட்சி நான்கு வகைப்படும்.

1. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம் மகாஜனங்களால் அல்லது, அப்பிரதிநிதிகளால், (தேச அரசாட்சியை நடாத்துவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்று) தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். (‘மகா ஜனங்களால்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களால்’ எனவும், ‘பிரதிநிதிகளின்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களின்’ எனவும் பொருள்படும். ஆண்பால் பெண்பாலையும் குறிக்கும்). 

இவ்வரசு தன் தேசத்து அகக் காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல், முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும் சவாதீனமுமுடையது. இவ்வரசாட்சி பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும், தற்காலம் நடைபெறுகின்ற அரசாட்சி போன்றது. இதனைக் ‘குடியாட்சி’ (Republic Government) என்று கூறுவர் அறிஞர்.

2. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத்தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆலோசனை முடிவுப்படி தன்னை நெடுங்காலம் ஆண்டுவந்த, அல்லது ஆளவந்த அரசன் ஒருவனால் ஆளப்படுதல். 

இவ்வரசும் தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் (நொதும்பல் -விருப்பு வெறுப்பின்மை) என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும், சுவாதீன முடையது. இவ்வரசாட்சி இங்கிலாந்து தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. இதனை ‘கோனாட்சி’ (Monarchical Government)  என்பர் அறிஞர்.

3. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆலோசனை முடிவுப்படி அம்மகாஜன மக்களால், அல்லது பிரதிநிதிகளால் (தேச அரசாட்சி நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவனென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். 

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையது. 

பிறதேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய அரசுகளில் முதலாவது வகை அரசைச் சார்ந்தது. அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வகையான அரசாட்சி தற்காலம் எந்த தேசத்திலாவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

இதனைச் ‘சார்ந்த குடியாட்சி (Dependent Republican Government) என்பர் அறிஞர்.  

4. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்க தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அத்தேசத்தை நெடுங்காலம் ஆண்டு வந்த, ஆள வந்த, அரசன் ஒருவனால் ஆளப்படுதல்.

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும், சுவாதீனமுடையது. பிற தேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொது மலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய மூவகை அரசு களில் இரண்டாவது வகை அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வரசாட்சி ஆஸ்திரேலியா தேசத்திலும், கானடா தேசத்திலும், தென் ஆப்பிரிக்காத் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. 

இதனைச் ‘சார்ந்த கோனாட்சி’(Dependent Monarchical Government) என்பர் அறிஞர். முந்திய அரசு இரண்டும் ‘பேரரசு‘’ எனவும், பிந்திய அரசு இரண்டும் சிற்றரசு எனவும் வழங்கப்படும்.

மகாஜனங்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி நடைபெறா ஆட்சிகள் ‘அரசாட்சி’ என்று சொல்லப்படும் தகுதியுடையன அல்ல. ஆதலால் அவற்றின் கூறுபாடுகள் முதலியவற்றைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விரும்பும் சுய அரசாட்சி

மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால், அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளிவிடுகின்றேன். 

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுயஅரசாட்சியே. 

அவ்வரசாட்சி தான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்கும் பொருத்தமானதென்று கொள்ளத் தக்கது. 

நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகை சுய அரசாட்சிகளில் முதலாவது வகை சுய அரசாட்சி ஒன்றே நாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன். 

அக்கூற்றுத் தற்கொல்லியும் பயனிற் சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். 

ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக் காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன்  (Great Britain) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே. 

இத்தகைய அரசாட்சியைச் ‘சுய அரசாட்சி’ எனச் சொல்லலாமோ? எனின், சொல்லலாம். என்னை? 

நமது தேசத்து அகப்புறக்காப்பு முதலிய காரியங்களிலெல்லாம் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராகலான்.

இச்சுய அரசாட்சிக்கே நாம் தகுதியுடையவரல்லர் என்று நம்மை ஆள்வோரும் நம் கிழவர் சிலரும் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்களிற் சில வருமாறு:

1. இச்சுய அரசாட்சிக்கு நாம் உண்மையில் தகுதியுடையோராயிருப்பின், அவரவர் தகுதிக்குத் தக்க ஸ்தாபனங்களை அவரவர்க்கு அளிக்கும் சர்வ நியாயாதிபதியான எல்லாம் வல்ல இறைவன் நம்மை நமது தற்கால சுதந்திர மற்ற நிலைமையில் வைத்திருப்பாரா?

2. நம்மிற் பெரும்பாலார் (Majority) பிறர் பொருள்களையும் உரிமை களையும் அபகரிக்க விரும்பாத நடுநிலைமையிலுள்ளரா யிருக்கினறரா? எளியோரை வலியோர் வருத்துங்கால், எளியோருக்கு உதவியாய் வலியோரை எதிர்க்க நம்மிற் பெரும்பாலார் சித்தமாயிருக்கின்றனரா? மதங்களை அழிப்பதிலும், அறங்களை வளர்ப்பதிலும், நம்மிற் பெரும்பாலார் விருப்ப முடையோரா யிருக்கின்றனரா? 

பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறுதொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருத்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலார் விட்டுவிட்டனரா?

3. நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின், நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார்கள் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? 

அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விரு வகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றவர்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா?

4. நம் தேசத்திலுள்ள பல மதஸ்தர்களும் தத்தம் மதச் செயல்கள் பிற மதஸ்தர்களைப் பாதிக்காதவாறு தத்தம் மதக் கோட்பாடுகளைத் திருத்திக் கொண்டனரா? 

இம்மதக் கோட்பாடுகள் மேற்சொல்லியபடி திருத்தப்படாத வரையில் நம்மவர்களுள் நெடுங்காலமாக நடந்து வருகின்ற மதச் சச்சரவு களும் சண்டைகளும் கொலைகளும் நீங்குமா? அவை நீங்காத வரையில் நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வொற்றுமை ஏற்படாத வரையில் நமக்குச் சுய அரசாட்சி வேண்டுமென்று நம்மை ஆள்வோரிடம் இரக்கவாவது நாம் அருகரா?

 இவர்கள் இவ்வாறு சொல்வதையும் நமது தற்கால நிலைமை யையும் கவனிக்குங்கால், நாம் விரும்பத்தக்கது மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியேயாம்.

No comments:

Post a Comment