Monday

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 5

பிராணமரும் பிரமணரல்லாதாரும்

‘பிராமணரும் பிராமணரல்லாதாரும்’ என்று கூறும்போது, யான் முக்கியமாகச் சென்னை மாகாணப் பிராமணரையும் பிராமணரல்லாதாரை யுமே குறிக்கிறேன். ‘பிராமணரல்லாதார்’ என்னும்போது முகமதியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்னும் நான்கு வகுப்பினர்களையும் குறிக்கின்றேன்.

பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமை யின்மையும், பகைமையும் வளர்ந்து இப்போது துண்டுபட்டுப் பொருள் படியான நிலைமை (Breaking point) க்கு வந்துவிட்டது. உண்மைத் தேசாபிமானிகள் இப்போது விரைந்து முன்வந்து பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதார்களுக்கும் ஏற்பட்டுள்ள, ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்குமுரிய உண்மைக் காரணங்களைக் கண்டுபிடித்து ஒழிக்காத வி­யத்தில், நாம் சுய அரசாட்சி என்ற பேச்சையும் கூட விட்டுவிடும்படியான நிலைமை வெகுவிரைவில் ஏற்பட்டுவிடுமென்று யான் அஞ்சுகிறேன்.

நமது தேசத்தின் வட மாகாணங்களில் ஹிந்துக்களுக்கும் முகமதியர் களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டையையும் நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்று நமது மாகாணத்திலுள்ள சிலர் பேசிக் கொண்டிருக் கின்றனர். என்ன வெட்கக்கேடு! நமது மாகாணத்தில் நம்முடன் வசித்துவரும் பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டிருக்கின்ற ஒற்றுமை யின்மையையும் பகைமையையும் நீக்கி அவ்விரு வகுப்பினர்களுக்கும் ஒற்றுமை உண்டுபண்ண மாட்டாதார் பஞ்சாபு மாகாணத்திலுள்ள முகமதியர் களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையையும் சண்டைகளை யும் நீக்கி அவ்விரு வகுப்பினருள்ளும் ஒற்றுமையை உண்டாக்கப் போகின்றனராம்! இது புதுமையிலும் புதுமை.

பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும் சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் ஜாதிச்சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் ஜாதிச்சண்டைகள் இல்லை என்றும் நம் தேசத்துக்குச் சுய அரசாட்சி வந்துவிட்டால் ஜாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய். 

பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத் தாராலோ, மற்றவராலோ, அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ணமுடியாது. சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் ஜாதிச்சண்டைகள் இல்லாமல் இல்லை. 

அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல்வழி நமது தேசத்தினர்களெல்லாம் ஒற்றுமைப்படுதல், உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்துவிட்டால் நம்  தேசத்தினர்களுள் ஒற்றுமை உண்டாய் விடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுபோல நம் தேசத்தார் களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை.

தேசாபிமானிகளென்றும், தேசத் தலைவர்களென்றும் சொல்லப்படும் பிராமணர்களிற் சிலர் தமது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நடக்கைகளிலும் பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகள் இங்கு இல்லாதது போலக் காட்டிக்கொண்டு வருகின்றனர். இவர் இவ்வாறு செய்வதின் நோக்கம். இவர் ஜாதியாருக்கும் மற்றை ஜாதியார்களுக்குமுள்ள சண்டைகளைப் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத் தலைவர்களும் அறிவாளிகளாயின், தம்மை மதிக்கமாட்டார்கள் என்ற நினைப்போ, அல்லது அச்சண்டை களுக்குரிய காரணங்களை விசாரித்து நீக்கத் தலைப்படுவார்களாயின், நம் ஜாதியார்களே இச்சண்டைகளுக்குக் காரணஸ்தர்கள் என்பதை அறிந்து கொள்ளுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. இவர் நோக்கம் எதாயினும் ஆகுக. நமது தேச ஒற்றுமைக்கு ஒரு பெரு நோயாய்த் தோன்றியுள்ள பிராமணர் -பிராமணரல்லாதார் சண்டைகளை ஒழிப்பதற் குரிய வழிகளை நாம் சிந்திப்போமாக.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்றார் நம் பெரியார். பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டை நோயோ அளவு கடக்கும் நிலைமைக்கு வந்துவிட்டதென்பது இம் மாகாணத்திலுள்ள ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பெண் மகளுக்கும் நேரில் தெரிந்த வி­யம். ஆதலால் அச்சண்டைகளைப் பற்றியோ, அவற்றின் தற்கால நிலைமை களைப் பற்றியோ நாம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அச்சண்டை நோயின் முதல் (காரணங்கள்) கூடப் பிராமணரல்லாதார்களிற் பலர்க்கும், பிராமணர்களிற் சிலர்க்கும் நன்றாகத் தெரியும். அக்காரணங்களைத் தெரியாமல் இருக்கிற பிராமணரல்லாத சிலரும் பிராமணர் பலரும் பிற மாகாணத் தேசாபிமானிகளும் தேசத் தலைவர்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்குக் கூறுகின்றேன்.

1. பிராமண ஜாதியார்களெல்லாம் மேலானவர்களென்றும், மற்றை ஜாதியார்களெல்லாம் கீழானவர்களென்றும் தங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டி மற்றை ஜாதியார்களை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

2. பிராமணர்களே பிராமணரல்லாதார்கள் கடவுளை அடைவதற்குரிய வழியைக் காட்டும் குருமார்களென்றும், பிராமணரல்லாதார்களின் குடும்பங் களில் நிகழும் சகல மங்கல அமங்கலச் சடங்குகளையும் நடாத்துவிப்பதற் குரிய ஆச்சாரியார்கள் என்றும் கூறிப் பிராமணரல்லாதார்களின் பொருள்களை அவர்கள் தாய் வயிற்றில் உற்பவித்த காலம் முதல் அவர்கள் இறக்கும் வரையிலும், அவர்கள் இறந்த பின் அவர்கள் மக்கள் உயிரோடிருக் கும் காலம் முடியும் வரையிலும் கவர்ந்து கொண்டு வருகிறார்கள்.

3. சர்க்கார் உத்தியோகங்களையும் ஸ்தல ஸ்தாபன உத்தியோகங் களையும் பொது ஸ்தாபன உத்தியோகங்களையும் வகிப்பதற்குரிய அறிவும் திறமையும் உரிமையும் தங்களுக்கே உண்டென்று சொல்லி அவ்வுத்தி யோகங்களையயல்லாம் தாங்களே கொண்டு அவற்றின் சம்பளம், அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றை எல்லாம் அபகரித்து வருகின்றார்கள் பிராமணர்கள்.

இம்மூன்றும் பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டை நோயின் முதல்கள் (காரணங்கள்). இக்காரணங்களை ஒழிப்பதற்கு வழிகளை ஆராய்வோமாக.

முதலாவது காரணம் எப்படி ஏற்பட்டதென்றால், பிராமணரல்லாதார் களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை ‘மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றை யயல்லாம் தின்பவர்களென்றும் நினைத்தவற்றையயல்லாம் செய்பவர் களென்றும், சொல்லியும் நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும் அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்த போது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள்.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலைக்கலக்கிக் கீழிடு வானும் - தான்; தன்னை

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் 

தலையாகச் செய்வானும் தான்

என்ற உண்மையைக் கண்டார்கள்.

உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள் ; அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார்கள் என்றும் நடக்கையிலும் காட்டினார்கள். சிறிது காலத்தில் அவர்கள் மேலான ஜாதியாராகவும், தமிழர்கள் கீழான ஜாதியார்களாகவும் அறியார் பலரால் கருதப்படமாட்டார்கள். தமிழர்களின் முன்னோர்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழிவுநோய் தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கூறிய மருந்தால் நீங்கிப் போயிற்று. அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம். அதாவது பிராமணரல்லாத ஜாதியர்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியார்களை நடத்துகிறது போலப் பிராமணர் களை நடத்தி வருவாராயின், தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டுவதில்லை.

இரண்டாவது காரணம், மேற்கண்டபடி தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை ஜாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனை. அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர வர்கள் பிராமணரல்லாதார்களுக்கு கூறி அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தி தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்களென்று நம்புகிறேன்.

பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டைக்குரிய மூன்றாவது காரணத் தைப் போக்குவதுதான் மிகக் கஷ்டமான காரியம். இக்காரண வி­யத்தைப் பற்றித் தேசத் தலைவர்களென்று சொல்லப்படுகிற பிராமண சகோதரர்களில் சிலர் பேசுகிற பேச்சுக்களைப் பார்க்கும் போது மிக வியப்புத் தோற்றுகின்றது. இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்ற (பிராமணரல்லாதார் அடங்கிய) ஒரு கட்சியாரை ஒழிப்பதற்காக காங்கிரஸ்காரர்கள் இரட்டையாட்சிக்கு உதவிபுரிய வேண்டியவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு பிராமணத் தலைவர் சில தினங்களுக்கு முன் பேசியிருக்கிறார். 

ஆ! என்ன ஆச்சரியம்! நமது தேசத்தில் நூறு பேர்களுக்கு மூன்று பேர்களாயிருக்கின்ற நம் பிராமண சகோதரர்கள் நமது தேசத்து இராஜாங்க உத்தியோகங்களில் நூற்றுக்குத் தொண்ணூற் றேழு வீதமும் அவ்வுத்தியோகங்களில் இந்தியர்கள் பெறும் சம்பளத் தொகையில் நூற்றுக்குத் தொண்ணூற்றேழு வீதமும் (இக் கணக்குச்சிறிது ஏறத்தாழ இருக்கலாம்) அடைந்து வருகிற போது, பிராமணரல்லாதார்கள் இராஜாங்க உத்தியோகங்களைக் கவருவதற்காக இராஜாங்கத்தாரோடு சேர்ந்து அவரைப் பலப்படுத்துகின்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் என்னும் பிராமணர் ஒருவர் பேசுவராயின், மற்றைப் பிராமணர்கள் என்னென்ன பேசத் துணிய மாட்டார்கள்? 

பிராமணர்கள் நம் தேசத்தில் சிறு தொகையினரா யிருத்தலால், தம்முடைய உரிமைகளை மற்றை ஜாதியார்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்ற அச்சத்தால், சுய அரசாட்சியை உள்ளூர விரும்ப மாட்டார்கள் என்றும், அவர்கள் சுய அரசாட்சிக்குப் பாடுபடுவது வோல் நடிப்பதெல்லாம் தம் உறவினருக்கும் ஜாதியாருக்கும் இராஜாங்க உத்தியோகங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்டே என்றும் பிராமண ரல்லாதார் சொல்வது உண்மைதானோ என்றும் யானும் இப்பொழுது ஐயம் உறுகின்றேன்.

இராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தாபன உத்தியோகங்களும் பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப் பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதேயில்லை யயன்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதே இல்லையயன்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மையை மாறாக பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர், அல்லது ‘பகலை இரவென்று கூறும் பாதகர்’ என்று நாம் கொள்ளக் கடவோம். பிராமணர்களும் பிராமணரல்லாதார்களும் ஒத்துழைப்பின் அவ்விரு வகுப்பினருள்ளும் இப்போது நிலவும் பகைமையை விரைவில் ஒழித்து, ஒற்றுமையை எளிதில் ஏற்படுத்திவிடலாம். இவ்வொற்றுçயை உண்டு பண்ணுவதற்காக பிராமணரல்லாதார்களுடன் ஒத்துழைக்கப் பிராமணர்கள் முன் வரவில்லையானால் மேல் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்னும் தலைப்பின் கீழ் யான்கூறியபடி இப்பொழுது பிராமணர்கள் வகித்துக் கொண்டிருக்கிற உத்தியோகங்களில் பிராமண ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்களுக்குரிய உத்தியோகங்களைத் தவிர மற்றைய ஜாதியார்களுக்கு அவரவர் எண்ணிக்கை விகிதப்படி கொடுக்க வேண்டுமென்று சட்டம் ஒன்று பிராமணரல் லாதார் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அச்சட்டத்தை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவரும்படி இராஜாங்கத்தாரை வற்புறுத்த வேண்டும்.

இராஜாங்க உத்தியோகங்கள் முதலியவற்றில், தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், தாழ்த்துகின்ற ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், இந்தியக் கிறித்துவர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும், முகமதியர்களின் எண்ணிக்கை விகிதப்படி அவர்கள் அடைய வேண்டிய உத்தியோகங்களை அவர்களும் அடையும் படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். 

அந்த ஏற்பாட்டைச் செய்வதற்கு இந்த நான்கு வகுப்புத் தலைவர்களும் ஒன்றுகூடி உத்தியோகங்களின் எண்ணிக்கையையும் அவற்றில் ஒவ்வொன்றன் சம்பளத் தொகை யையும் கணக்குப் பார்த்தும், அவ்வுத்தியோகங்களின் அதிகாரம், செல்வாக்கு முதலியவற்றைக் கவனித்தும், ஒவ்வொரு ஜாதியாருக்கும் இன்னின்ன உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று ஒரு பட்டி தயார் செய்ய வேண்டும். 

உத்தியோகங்களின் எண்ணிக்கை குறைந்தும், ஜாதிகளின் எண்ணிக்கை கூடியும் இருக்குமாயின், சற்றேறக்குறைய ஒரு தன்மையான பழக்க வழக்கங்களையும் உடைய இரண்டு மூன்று ஜாதிகளை ஒன்று சேர்த்து ஒரு ஜாதியாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜாதியார்களிலும் இன்னின்னார்க்கு இன்னின்ன உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்ற வி­யத்தைத் தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு ஜாதியாரிலும் நடுவு நிலைமையுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்துப் பஞ்சாயத்துச் சபையாக கட்டுப் படாத உத்தியோக வேட்டைக்காரர்களை அந்தந்த ஜாதியிலிருந்து விலக்குதல் முதலிய காரியங்கள் செய்து பஞ்சாயத்தார் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்யலாம். இவ்வாறு சம்பள உத்தியோகங்களையும் கெளரவ உத்தியோகங்களையும் அந்தந்த ஜாதியார்களின் எண்ணிக்கை விகிதப்படி பகுந்து கொடுத்துவிட்டால், இப்பொழுதுள்ள ஜாதிச் சண்டைகளில் பெரும்பகுதி நீங்கிவிடும்.

பின்னர், ஒவ்வொரு ஜாதியாரும் மற்றை ஜாதியார்களிடமிருந்து அடைய விரும்பும் உரிமைகள் என்னென்னவென்பதற்கு அந்தந்த ஜாதிப் பஞ்சாயத்தார் மூலமாக ஒரு பட்டி தயார் செய்ய வேண்டும். 

பிற்பாடு, அவ்வுரிமைகளின் சம்மந்தமுள்ள பல ஜாதிப் பஞ்சாயத்தார்களும் ஒன்று கூடிப் பேசி இன்னின்ன உரிமைகள் இன்னின்ன ஜாதியார்களுக்கு யாதொரு நிபந்தனையும் இல்லாமல், அல்லது இன்னின்ன நிபந்தனைகளின் பேரில், கொடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்து முடிவு செய்து விளம்பரப்படுத்தி ஒவ்வொரு ஜாதியாருக்கும் ஏற்பட்டுள்ள உரிமைகளை அவரவர் அடைந்து அநுபவிக்கும்படி பல ஜாதிப் பஞ்சாயத்தார்களுக்கும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

இவ்வாறாக, பிராமணரல்லாதார்களில் அடங்கியுள்ள நான்கு வகுப்பினர்களும் தங்கள் தங்கள் ஜாதி உரிமைகளை வரையறுத்துப் பிரித்து அடைந்து அனுபவித்து ஒற்றுமையான பின்னர்ப் பிராமணர்களிடமிருந்து பிராமணரல்லாதார்களுக்கு வரவேண்டிய உரிமைகளை அடைவதற்கு வேண்டுவன செய்யலாம். 

நமக்குள் ஏற்பட்டுள்ள ஜாதிச் சண்டைகளும், மதச் சண்டைகளும் நீங்கி நமக்குள் ஒற்றுமை ஏற்படும் வரையில் நாம் சுய அரசாட்சி அடைய வேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும், ஆகாயக் கோட்டை கட்டவேண்டுமென்று பேசுதலும், முயற்சித்தலும் போலாம்.

இராஜாங்கத்துக்கு வரிகொடாமை முதலிய கீழ்ப்படியாமை (Civil disobedience) யைப் பற்றிச் சிலர் பேசுகின்றனர். ஒவ்வொரு ஜாதியாருக்கும் உரிய சிறு சிறு உத்தியோகங்களையும், உரிமைகளையும் கொடுப்பதற்குச் சம்மதியாமல் சண்டையிடுவோர், தேசத்தார் முழுவதும் ஒன்றுபட்டுச் செய்ய வேண்டிய வரிகொடாமை முதலியவற்றைப் பற்றிப் பேசுதலைப் பார்த்து நம்மை ஆள்வோரும், அவர்கள்இனத்தாரும், ஏனையோர்களும் நகைக்கின்றனர்.

இது வெறும் பேச்சு என்பதை அவர்களெல்லாம் அறியார்களென்று கருதுதல் எவ்வளவு பெரிய அறியாமை! இந்தியர்களெல்லாம், அல்லது இந்தியத் தலைவர்களெல்லாம், ஒன்றுபடும் வரையில் நாம் சுய அரசாட்சி அடையவேண்டுமென்று பேசுதலும், நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி இத்தன்மைத்தாயிருக்க வேண்டுமென்று பேசுதலும், அந்த சுய அரசாட்சி அடைவதற்கு உரிய வழிகளைப் பற்றி பேசுதலும் வெறும் பயனற்ற பேச்சுக்கள். அவற்றைப் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பினால் நம் தேசத்துப் பல மதத்தினர்களும், ஜாதியார்களும் அவரவர்கள் உரிமைகளை அடையும்படி செய்து நம் தேசத்தாருள் ஒற்றுமையை உண்டுபண்ணும் வேலை ஒன்றிலேயே உண்மைத் தேசாபிமானிகளெல்லாம் தங்கள் முழுக் கவனத்தையும் பலத்தையும் செலுத்த வேண்டுமென்று யான் பன்முறை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன். எனது தேசத்தினர்களாகிய உங்கள்பால் தெரியப் படுத்த வேண்டியவற்றை ஒருவாறு தெரியப்படுத்திவிட்டேன். இனி, நமது தேசத்தை ஆள்வோராகிய இராஜாங்கத்தார் (Government) க்குத் தெரியப்படுத்த வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லி என் பேச்சை முடித்துவிடுகிறேன்......5

No comments:

Post a Comment