Friday

அறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை

திருவள்ளுவர் திருக்குறள்

அறப்பால்
முன்னுரை

எல்லாம் வல்ல இறைவன் அருளால் திருவள்ளுவ நாயனார் திருக்குறளுக்கு யான் இயற்றியுள்ள உரையில், அறப்பாலுரை மூலத்துடன் அச்சாகி முற்றுப் பெற்றது. அதனை அச்சிடத் தொடங்கிய காலையில் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு, அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். இப்போது, திருவள்ளுவ மாலைச்செய்யுள்களும், மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் செய்யுள்களும், அவற்றின் உரைகளும், அறப்பால் மூலமும் உரையும், முந்நூறு பக்கங்கள் ஆகின்றன. பொருட்பால் மூலத்திற்கும் உரைக்கும் முந்நூறு பக்கங்களுக்கு மேலாகு மென்றும், இன்பப்பால் மூலத்திற்கும் உரைக்கும், திருவள்ளுவரது காலம், சாதி, சமயம், திருக்குறளை இயற்றியதற் குரிய காரணம், அக் காலத்துத் தமிழ் நாட்டின் நிலைமை, திருக்குறளுக்கு ஆதாரமான நூல்கள் முதலியவற்றைப் பற்றிய எனது ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் சில ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் ஆகுமென்றும் நினைக்கிறேன். அதுபற்றி, ஒவ்வொரு பாலையும் அதனதன்... தனித்தனி ஒவ்வொரு புத்தகமாக வெளியிடத் துணிந்து, இப்பொழுது அறப்பாலையும் அதன் உரையையும் ஒரு புத்தக மாக்கி வெளியிடுகின்றேன்.

அறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது. 12 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கின்றது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக ஆமோதிக்கின்றது. மீதக் குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருத்தல் கூடும். அறப்பாலில் பரிமேலழகர் கொண்டுள்ள மூலப்பாடங்களுக்கு வேறாக 151 மூல பாடங்களை மணக்குடவரும் மற்றும் மூன்று உரையாசிரியர்களும் கொண்டுள்ளார்கள். பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 74 மூல பாடங்களை யான் கொண்டுள்ளேன். அவற்றில், 30 பாடங்கள் முந்திய உரையாசிரியர்கள் கொண்டுள்ள பாடங்கள். மீதம் 44 பாடங்கள் தான் யானாக கொண்டுள்ள பாடங்கள். அப்பாடங்களை யான் கொண்டதற்குரிய காரணம், அப் பரிமேலழகர் பாடங்கள், ஏடு பெயர்த் தெழுதியோரால் நேர்ந்த பிழைப் பாடங்கள் என யான் கருதியதே. யான் கருதியது போலவே, பழம் பெரும் புலவரான மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளை யவர்களும் பல பிழைகள் அக்காரணத்தால் மூலத்தில் புகுந்துள்ளன என்று கருதியிருக்கிறார்கள். அவர்கள், திருக்குறள்-பரிமேலழகருரை ஆறுமுக நாவலர் பதிப்புக்குக் கொடுத்துள்ள சிறப்புச் செய்யுள்களில் ஒன்றில் ‘ஏட்டுவ.......தெடுத்துணர்ந்து வருநாளி லெங்கணுஞ்சா லெழுத்துக்.....ஒட்டும் வகை யுணராராய்ப் பரம்பரை யயான்றே கருதி யயாழிந்தா ரந்தோ’ என்று கூறியிருத்தல் காண்க.

இந்நூலையாவது அச்சுப் பிழை இல்லாமல் அச்சிடுவிக்க வேண்டுமென்று யான் மிக்கவாக் கொண்டிருந்தேன். அதற்காக அதன் புரூவ்களை என்னுடன் பார்க்க வேண்டுமென்று என் நண்பர்களான மதுர ஆசிரியர் திரு.க.ரா. இராதாகிருஷ்ணயை ரவர்களையும், பிரசங்க ரத்தினம், திரு.மு. பொன்னம்பலம் பிள்ளை யவர்களையும் வேண்டிக் கொண்டேன். ஒவ்வொரு புரூவும் என்னால் மூன்று முறையும், அவர்களால் இரண்டு முறையும் படிக்கப்பட்டது. அவ்வாறு படிக்கப்பட்டும் அச்சுப் பிழைகள் ‘மற்றொன்று சூழினும் தான்முந்துறும்’ என்றபடி எங்கள் மூவர்களுக்கும் தெரியாமல் நூலுள்ளே நுழைந்து, பிழைத்திருத்தம் என்னும் ஒரு பக்கத்தைக் கவர்ந்து விட்டன. இராதாகிருஷ்ண அய்யரவர்கள் என்னுடன் புரூவ் பார்த்ததோடு எனது உரையை ஆங்காங்குச் சரிபார்த்தும் தந்தார்கள். பொன்னம்பிள்ளை யவர்கள் புரூவ் பார்த்ததோடு,அய்யரவர்களும் யானும் எனது உரையில் சிற்சில இடங்களில் பொருத்தமான சொற்களைப் பெய்தற்காக ஆலோசனை செய்துகொண்டிருந்த போது பொருத்தமான சில சொற்களைச் சொல்லியும் உதவினார்கள். அவ்வுதவிகளுக்காக அவ்விருவர்க்கும் எனது மனமார்ந்த வந்தனங்களை அளிக்கிறேன்.

இந்நூலை அச்சிட்டுக் கட்டுதற்கு எனக்குப் பொருள்...... இந்நகரின்கண் பல சீர்களும், சிறப்புக்களும் பெற்று வாழும் புதுக்கோட்டை மிட்டாதாரும் பெரிய நிலச்சுவான்தாரும் , அதி தனவந்தரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், திருச்செந்தூர் திரு. சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான கெளரவ தருமகர்த்தருமாகிய திரு. அ.செ.சு. கந்தசாமி ரெட்டியாராவர்களும், அவர்களது அவிபக்த அருமை மைத்துனரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், தூத்துக்குடி ஸர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி வைஸ் பிரசிடண்டு மாகிய திரு. அ.செ.சு. முத்தைய ரெட்டியா ரவர்களுமே. எனது நண்பற்களிற் சிலர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். மகாத்மா காந்திக்கு ஐமன்லால் பஜாஜி கிடைத்தது போல உங்களுக்கு ரெட்டியார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. அதற்கு நானும் கடவுள் ஞானத்திலும், தேச பக்தியிலும், பாஷாபி மானத்திலும் குறைந்தவ னல்லவே’ என்று பதில் சொல்வதுண்டு. அவ் விரு வள்ளல்களும் இன்னும் பல பெண் மக்களும் ஆண் மக்களும் பெற்றுப் பெருகி, ‘வாழையடி வாழையயன’ இவ்வுலகின்கண் எஞ்ஞான்றும் இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்திருக்கும் படி யாகவும், அவர்கள் வீட்டு வாயில்கள் நித்திய கல்யாண வாயில்களாய் விளங்கும்படியாகவும் அருள்புரிய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை யான் இறைஞ்சுகின்றேன்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளை
9.2.35

திருவள்ளுவர் திருக்குறள்
(வ.உ.சிதம்பரம் பிள்ளை உரையுடன்)
பூவுலகின்கண் தோன்றி நிலவுகின்ற மொழிகள் பல. அவற்றுள் நம் தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட நூல்கள் எண்ணில. அவற்றில், அழிந்து போனவை பல. அழியாது நிற்பவை சில. அச் சிலவற்றில் சிறந்தவை மிகச் சில. சாலச் சிறந்தவை மிக மிகச் சில. அந் நூல்களை ‘மேற் கணக்கு’ எனவும், ‘கீழ்க்கணக்கு’ எனவும் பகுத்துத் தொகுத்துள்ளார் நம் முன்னோர். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை ‘பத்துப்பாட் டி’லுள்ள நூல்கள் பத்தும், ‘எட்டுத்தொகை’ யிலுள்ள நூல்கள் எட்டு மாம். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை ‘பதினெண் கீழ்க் கணக்’ கிலுள்ள நூல்கள் பதினெட்டு மாம்.

அப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப் பெற்றது. அது மக்கள் அடைதற்கரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள் களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயவர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவரென்றும் கூறிவருகின்ற தொன்றாலேயே நன்கு விளங்கும். அவ்வாறு அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அம் மூன்று பகுதிகளையுடைய காரணத்தால், அது முப்பால் எனப் பெயர் பெற்றது.

அம் முப்பால்களில் அறப்பால் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், வீட்டியல், ஊழியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல், குடியியல் என்னும் ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இன்பப் பால் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, இருபாற் கூற்று என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப் பதினைந்து இயல்களும் நூற்றுமுப்பது அதிகாரங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள் வெண் பாக்களைக் கொண்டுள்ளது.

திருக்குறட் சுவடிகளில் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’, ‘நீத்தார் பெருமை’ என்னும் மூன்று அதிகாரப்பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப் பட்டவை யல்ல வென்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை யயன்றும் யான் கருதுகிறேன். அவ்வாறு யான் கருதுவதற் குரிய காரணங்களிற் சில : 1) இம் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப் போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல. 2) இப் பாக்களிற் பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன. 3) ‘மெய்யுணர்தல்’, ‘துறவு’ என்னும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவதில்லை. 4) மெய் யுணர்தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும், கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். அவ்வாறே, துறவின் பாக்களையும், நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டு பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். ‘மழையைச் சிறப்பிற் றணிப்பாரு மில்லை, வறப்பிற் றருவாருமில்’லாகையால் வான்சிறப் பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.

ஆயினும், நம்மவர்களிற் பலர் அம் மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவ ராலே இயற்றப் பட்டவை என்று கருதி வருகின்றமையால், அவர் மனம் நோகும்படியாக அம் மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கிவிட யான் விரும்பாதவனாய், அவை இடைக்காலத்தில் வந்து சேர்ந்த பாயிர மென்று யாவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றிற்கு இடைப்பாயிரம் என்னும் தலைப்பெயர் கொடுத்து, அவற்றை எனது உரையுடன் திருக்குறட் கையயழுத்து ஏடுகளிலும் அச்சுப் புத்தகங்களிலும் அவை காணப்படுகிற இடத்திலேயே சேர்த்துள்ளேன். திருவள்ளுவ மாலைப் பாக்களைத் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரவர்கள் உரையோடும், திரிசிரபுரம் மகாவித்வான் மீனாச்சிசுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் பாக்களை எனது உரையோடும் சிறப்புப் பாயிரம் என்னும் தலைப்பெயருடன் இவ்வுரைப் பாயிரத்திற்கும் இடைப் பாயிரத்திற்கும் இடையில் சேர்த்துள்ளேன்.

திருவள்ளுவ மாலைப் பாக்களிற் சில மேற்கண்ட மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரம் எனக் கூறுகின்றனவே எனின், அப் பாக்களைப் பாடியவர்களாகக் குறிக்கப்பட்டுள்ள புலவர்கள் திருவள்ளுவர் காலத்திற்கு மிகப் பிற்பட்ட காலத்தவர்க ளென்றும், அவர்களிற் சிலர் தாம் திருக்குறளைப் படித்த காலங்களில் அதன் பெருமையைப் பற்றிப் பாக்கள் பாடித் திருக்குறட் சுவடிகளிற் சேர்த்தன ரென்றும்,அவர்களில் வேறு சிலர் தமிழ் நூல்களிற் பல அழிவுற்ற காலத்தில் திருக்குறளில் உள்ளவை இன்னவை யயன்று பிற் காலத்தார் தெரிந்து கொள்ளும் பொருட்டுத் தமக்குக் கிடைத்த திருக்குறட் சுவடிகளில் கண்டபடி, பால், இயல், அதிகாரங்களின் தொகைகளை வரையறை யிட்டுப் பாக்களைப் பாடித் திருக்குறட் சுவடிகளில் சேர்த்தனரென்றும், அப் பாக்களெல்லாம் சேர்ந்து அவர்களுக்குப் பிற்பட்ட காலத்தார் ஒருவரால் கொடுக்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ என்னும் தலைப்பெயருடன் வழங்கி வருகின்றன வென்றும் விடை யளித்திடுக.

திருக்குறளுக்கு உரை சொல்லியவர்களும் , எல்லை மிகுந்தும் எல்லை குறைந்தும் உரை எழுதியவர்களும் பலர் என்பதும், எல்லை மிகாதும் எல்லை குறையாதும் எல்லைப்படி உரை எழுதியவர்கள் பதின்மர் என்பதும், ‘தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி,‡ திருமலையர், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லையுரையயழுதி னோர்’ என்னும் வெண்பாவால் விளங்கும்.

இவ் எல்லை உரைகளுள் பரிமேலழக ருரையும் மணக்குடவ ருரையும் அச்சாகித் தமிழ் நாட்டில் நிலவுகின்றன. இவை தவிர, வேறு மூன்று உரைகள் கையயழுத்துப் பிரதிகளாகத் தமிழ்நாட்டில் சென்னை அரசாங்கக் கையயழுத்துப் புத்தகசாலை முதலிய சிற் சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ்நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவற்றைத் தரும ருரை, தாமத்த ருரை, நச்ச ருரை எனக் கருதுகின்றேன். அவை முறையே அவ்வுரை யாசிரியர்களால் இயற்றப் பெற்றவை என்பதற்கு வேறு சான்று ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ஆயினும், அவ் உரைகளிற் கண்ட குறட் பாடங்களை யான் எனது உரையில் குறிக்கும் இடங்களில் அவ் உரை யாசிரியர்கள் பாடங்கள் எனவே குறித்துள்ளேன். இவ் ஐந்து உரைகளிலும் திருக்குறளின் சில அதிகாரப் பெயர்களும் வரிசைகளும், அதிகாரக் குறள்களின் வரிசைகளும் வெவ்வேறா யிருக்கின்றன.
இவ் உரைகளெல்லாம் கற்றற்குப் பெரியனவாகவும், அறிதற்கு அரிய தமிழ் நடையில் எழுதப் பெற்றன வாகவும், பிழைபட்ட மூல பாடங்கள் சிலவற்றைக் கொண்டனவாகவும், சில குறள்களுக்கு நுண்ணிய அறிவுடையார் ஏற்றுக் கொள்ள இயையாத பொருள்களை உரைப்பனவாகவும் காணப்படுகின்றன. அவைப் பற்றி, திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இயற்றி முடித்துத் திருச்செந்தூர் திரு முருகப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்றினேன் ; இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றேன்.

பரிமேலழகருரை அச்சுப் புத்தகத்தின் இல்லறவியலுள் காணப்படுகின்ற ‘வெஃகாமை’, ‘பயனில சொல்லாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் துறவறயியலுள் சேர்த்தும், துறவற வியலுள் காணப்படுகின்ற ‘வாய்மை’, ‘கள்ளாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் இல்லற வியலுள் சேர்த்தும் இருக்கிறேன். வாய்மையும், கள்ளாமையும் இல் வாழ்வார்க்கும் இன்றி யமையாதன வாகலானும், வெஃகாமையும் பயனில சொல்லாமையும் இல் வாழ்வார் கைக் கொள்வதற்கு அரியன வாகலானும், அவை துறவிகள் கைக் கொள்வதற்கு உரியன வாகலானும், முன்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில இல்வாழ்வாரைக் குறித்தும் பின்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில துறவிகளைக் குறித்தும் பாடப்பட்டிருக்கின்றமையானும் அவ்வாறு செய்தேன். இஃதன்றியும், நேரிய பொருள் கோடலுக்கு இடையூறாக வரிசை யயாழுங்குதவறிக் கிடந்த சிற்சில குறள்களின் வரிசையை ஒழுங்கு படுத்தியுள்ளேன்.

வீடு, இல் வாழ்வார், துறந்தார் ஆகிய இரு திறத்தார்க்கும் உரிய தாகலானும், அறத்துப் பாலில் ‘வீட்டியல்’ என ஓர் இயல் உண்டென்று யான் கேட்டிருக்கின்ற மையானும், ‘நிலையாமை’ முதலிய நான்கு அதிகாரங்களும் வீட்டியலிற் குரியனவாகலானும், அவற்றை ‘வீட்டியல்’ என்று ஓர் இயலாக அமைத் துள்ளேன். முந்திய உரைகளிற் காணும் அதிகாரங்கள் சிலவற்றின் தலைப் பெயர்களிலும், குறள்கள் சிலவற்றின் மூல பாடங்களிலும் சிற் சில எழுத்துக்களும் சொற்களும் ஏடு பெயர்த் தெழுதியோர்களால் நேர்ந்த பிழைகள் என யான் கருதுகின்றமையால், அவற்றைத் திருத்தியுள்ளேன். முந்திய உரையேடுகளிற் காணப்படும் பாடங்களையும் அவற்றை யான் திருத்தியதற்குரிய காரணங்களையும் அவ்வவ் இடங்களில் குறித்துள்ளேன். மற்றைப்படி, பரிமேலழகர் உரைப் புத்தகப்படியே அதிகார வரிசையையும், குறள் வரிசை யையும் அமைத்துள்ளேன்.

‘ஒரா தெழுதினே னாயினு மொண்பொருளை, ஆராய்ந்து கொள்க வறிவுடையார் ‡ சீராய்ந்து, குற்றங் களைந்து குறை பெய்து வாசித்தல், கற்றறிந்த மாந்தர் கடன்’ என்பதும், ‘அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய, தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் ‡ நூலின், அரிலகற்றுங் கேள்வியார் நட்பு இம் மூன்றும், திரிகடுகம் போலு மருந்து’ என்பதும், முந்திய உரையாசிரியர்கள் சில குறள்களில் வேறு வேறு பாடங்கள் கொண்டிருப்பதும் திருக்குறளின் மூல பாடங்களில் புகுந்திருந்த எழுத்துப் பிழைகளையும் சொற் பிழைகளையும் திருத்தும்படியான துணிவை எனக்குத் தந்தன.

எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அவ்வுரையில் வருவிக்கப்பட்ட சொற்களை ( ) இவ் வடையாளங்களுள் அமைத்துள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினா விடை,மேற்கோள் பாடபேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். என் உரையைப் படிக்கத் தொடங்குபவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி யில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் மாத்திரம் படிக்குமாறும் நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்துப் படிக்குமாறும் வேண்டுகிறேன்.

அவையடக்கம் கூறுதல் பேரறிவுடையார் வழக்காகலின், அஃதில்லாத யான் அதனைக் கூறாது விடுகிறேன். தமிழ் மக்களெல்லாம் திருவள்ளுவர் திருக்குறளைக் கற்றும் கேட்டும் உணர்ந்து, அது கூறும் நெறியில் ஒழுகி மேம்பட வேண்டுமென்று யான் கோருகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.
9.1.1935 உரையாசிரியன்
தூத்துக்குடி

No comments:

Post a Comment