Sunday

ஈகை

இருபதாம் அதிகாரம் - ஈகை
அஃதாவது, (இல்லார் வேண்டுவன) ஈதல்

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (191)

பொருள்: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - (பொருள்) இல்லாதார்க்கு (அவர் வேண்டுவது) ஒன்றை ஈதலே ஈகை; மற்று எல்லாம் குறியயதிர்ப்பை நீரது உடைத்து - ஏனையோர்க்கு ஈதலெல்லாம் குறியயதிர்ப்பையின் தன்மையை யுடைத்து.

அகலம்: குறியயதிர்ப்பை - ஒரு பொருளைக் கொள்ளக் குறித்து அதற்கு எதிராகக் கொடுப்பது. அஃதாவது, பண்டமாற்று. ‘நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல், சுரத்திடைப் பெய்த பெயல்’ - பழமொழி நானூறு. ‘ஏற்றகை மாற்றாமை யயன்னானுந் தாம் வரையார், ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின், மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல், பொலிகட னென்னும் பெயர்த்து’- நாலடியார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.

கருத்து: வறியார்க்கு ஈவதே ஈகை.

நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று. (192)

பொருள்: நல் ஆறு என்னினும் கொள்ளல் தீது - (மேல் உலகத்திற்கு) நல்ல நெறி என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறர் பால் ஒன்றை) ஏற்றல் தீமை ; மேல் உலகம் இல் என்னினும் ஈதல் நன்று - மேல் உலகம் இல்லை என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறருக்கு) ஈதல் நன்மை.

அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. கொள்ளல் என்பதன் ளகர வொற்றும் , என்னினும் என்பதன் னகர வொற்றும் கெட்டு நின்றன. ‘வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர் வள்ளியராக வழங்குவ தல்லால், எள்ளுவ வென்சில வின்னுயி ரேனும், கொள்ளுத றீது கொடுப்பது நன்றால்’ என்றார் கம்பர். மேல் உலகம் ‡ வீட்டுலகம்.

கருத்து: ஏற்றல் இழிவு. ஈதல் உயர்வு.

இலனென்று மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (193)

பொருள்: இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - (இவன்) இல்லாதவன் என்னும் இழிவை (ஒருவரிடத்தும்) சொல்லாமல் (அவனுக்கு) ஈதல், குலன் உடையான்கண் உள-நற்குலத்தின்கண் பிறந்தானிடத்து உள்ளன.

அகலம்: இல்லன் என்பது லகர வொற்றுக் கெட்டு நின்றது. உரையாமை என்பது எதிர்மறை வினையயச்சம். இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு இரப்போன் தான் இலன் என்று உரையா முன்னர் அவன் குறிப்பறிந்து எனவும், இரக்கப்பட்டோன் ‘யான் இலன்’ என்னும் இழி சொல்லை உரையாமல் எனவும், இரந்தோன் தன்னிடம் ஏற்ற பின்னர்ப் பிறர்பால் சென்று தான் இலன் என்னும் இழிவை மீண்டும் உரையாத வாறு அவன் வறுமை நீங்கும் படியாக எனவும் உரைத்தலும் அமையும். ஈதல் பல திறத்தனவாகலின், அது பன்மைப் பொருளிற் கூறப்பெற்றது. தருமர் பாடம் ‘இலமென்னும்’. ஏகாரம் அசை.

கருத்து: உயர் குடிக்கு அழகு உவப்புடன் ஈதல்.

இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு. (194)

பொருள்: இரந்தவர் இன் முகம் காணும் அளவு (ம்) -(தன்பால் பொருள் ஏற்று மகிழ்ச்சியுற்ற) இரந்தவரது இனிய முகத்தைக் காணும் வரையிலும், இரக்கப்படுதல் (உம்) இன்னாது - (இரத்தலே போல) இரக்கப்படுதலும் துன்பம் தருவது.

அகலம்: இரக்கப்படுதலும் என்பதன் எச்சவும்மையும், அளவும் என்பதன் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.

கருத்து: ஈவான் தான் ஈயும் வரையில் துன்புறுவன்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின். (195)

பொருள்: ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - (தவம்) இயற்றுவாரது வலிமை (தம்) பசியைப் பொறுத்தல்; (அஃது) அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அஃது (பசித்தோர்க்கு உணவு கொடுத்து) அப்பசியை நீக்குவாருடைய வலிமைக்குப் பின் நிற்பது.

அகலம்: அஃது என்பது தோன்றா எழுவாயாக வருவிக்கப்பட்டது. பின் என்பது ஆகுபெயர், பின் நிற்பதற்கு ஆயினமையால்.

கருத்து: ஈகை தவத்திலும் மேற்பட்டது.

அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (196)

பொருள்: அற்றார் அழி பசி தீர்த்தல் - (இல்வாழ்வான்) பொருள் இல்லாதாரை வருத்தும் பசியைத் தீர்க்கக் கடவன் ; அஃது பொருள் பெற்றான் ஒருவன் வைப்பு உழி - அது பொருளைப் பெற்றவன் ஒருவன் (அதனை) வைத்தற் குரிய இடம்.

அகலம்: அழி என்பது வினைத்தொகை.

கருத்து: வறிஞரது பசியைத் தீர்த்தல் செல்வத்தைப் பத்திரப் படுத்தி வைக்கும் இரும்புப் பெட்டி.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னுந்
தீப்பிணி தீண்ட லரிது. (197)

பொருள்: பாத்து ஊண் மருவியவனை -(தன்னிடத்துள்ளதை இல்லார்க்குப் ) பகுந்து கொடுத்து உண்ணுதலைப் பொருந்தியவனை, பசி என்னும் தீ பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தொடுதல் இன்று.

அகலம்: மருவியவன் என்பது இன்னிசை நோக்கி மரீஇயவன் என நின்றது. நச்சர் பாடம் ‘பார்த்தூண்’.

கருத்து: வறிஞர் பசி தீர்ப்பான் வறுமையுறல் இல்லை.

ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (198)

பொருள்: தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவர் - தாம் செல்வத்தை (ப் பிறருக்கு வழங்காமல்) வைத்திருந்து இழக்கும் கடின உள்ள முடையார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் -(இல்லார்க்கு) ஈந்து (அவர் பெற்று) மகிழ்தலால் (ஈந்தார் அடையும்) இன்பத்தை அறியார் போலும்?

அகலம்: பொருளை ஏற்றவர் உவத்தலைப் பார்த்துப் பொருளை ஈந்தார்க்கு உளதாம் இன்பத்தை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்றார். ‘கொல்’ என்பது ‘போலும்’ என்னும் குறிப்பு வினாப் பொருளில் வந்தது. மணக்குடவர் பாடம் ‘வன்கண் ணவர்’.

கருத்து: வறியார்க்கு ஈயாதார் வன்கண்ணர்.

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். (199)

பொருள்: நிரப்பிய தாமே தமியர் உண்ணல் -(இலையில்) நிரப்பியவற்றைத் தாமே தமியரா யிருந்து உண்ணுதல், இரத்தலின் இன்னாது - இரத்தலைப் போலத் துன்பத்தைத் தருவது.

அகலம்: உண்ணல் என்பது ணகர வொற்றுக் கெட்டு நின்றது. நிரப்பிய என்று கூறியதனான், நிரப்புதற்கு ஒன்றும் இல்லாத வறிஞன் தனியனாய்த் தெண்ணீ ருண்டல் இன்னாதது அன்று எனக் கொள்க. தருமர் பாடம் ‘தாமே தனிய ருணல்’. தாமத்தர், நச்சர் பாடம் ‘தானே தனிய னுணல்’. ‘மன்ற’ அசை.

கருத்து: பகுந்து உண்ணாமை படுந்துயர் விளைக்கும்.

சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை. (200)

பொருள்: சாதலின் இன்னாதது இல்லை -சாதலைப் போலத் துன்பத்தைத் தருவது (வேறொன்று) இல்லை ; ஈதல் இயையா (த) கடை அதுவும் இனிது -ஈதல் இயலாத பொழுது சாவும் (வள்ளலுக்கு) இன்பத்தைத் தருவதாம்.

அகலம்: வள்ளல் - வரையாது கொடுப்பவன். தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஈத லிசையாக் கடை’.

கருத்து: ஈய முடியாத போது சாவும் இன்பமாம்.

No comments:

Post a Comment