Friday

வாழ்க்கைத் துணை நலம்

மூன்றாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணை நலம்

அஃதாவது, இல் வாழ்க்கைத் துணையாகிய மனையாளது மாட்சி.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (21)

பொருள்: மனை தக்க மாண்பு உடையாளாகி தன் கொண்டான் வள தக்காள்‡ இல் வாழ்க்கைக்குத் தக்க மாட்சிமை யுடையவளாகித் தன்னைக் கொண்ட (கண) வனது வரும்படிக்குத் தக்கபடி வாழ்கின்றவள், வாழ்க்கை துணை ‡ இல் வாழ்க்கைக்குத் துணை(யாவள்).

அகலம்: மனை, வளம் என்பன நான்காம் வேற்றுமைத் தொகைகள். மாட்சிமை‡நற் குண நற்செய்கைகள். மனை என்பது ஆகுபெயர், மனை வாழ்க்கைக்கு ஆயினமையால். தாமத்தர் பாடம் ‘வாட்கை’.

கருத்து: இல் வாழ்க்கைக்குத் தக்க மாண்பும் கணவன் வரும்படிக்குத் தக்க வாழ்வும் உடையவள் வாழ்க்கைத் துணை.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யயனைமாட்சித் தாயினு மில். (22)

பொருள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்‡ இல் வாழ்க்கைக்குரிய நற்குண நற் செய்கைகள் மனையாளிடத்து இல்லையாயின், வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல்‡ (அவ்) இல் வாழ்க்கை எவ்வளவு பெருமையை யுடையதாயினும் (அஃது) இன்றாம்.
கருத்து: இல் வாழ்க்கைக்குத் தக்க மாண்பு இல்லாளிடம் இல்லையேல், இல் வாழ்க்கை தனது பெருமையை இழந்து விடும்.

இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை. (23)

பொருள்: இல்லவள் மாண்பானால் இல்லது என் ‡ இல்லாள் நற்குண நற்செய்கைகளை உடையளானால் (அவள் கணவனுக்கு) இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் ‡ இல்லாள் தீக்குணம் தீச்செயல் உற்றவிடத்து (அவள் கணவனுக்கு) உள்ளது யாது?
அகலம்: தருமர் பாடம் ‘மாண்பாயின்’. மாண்பு என்னும் குணத்தை இல்லாள் என்னும் குணியின் மேல் ஏற்றி உபசரித்தார்.

கருத்து: இல்லாள் நற்குணம் நற்செய்கை உடையளாயின், கணவன் எல்லாச் செல்வங்களையும் பெறுவன் ; தீக்குணம் தீச் செய்கை உடையளாயின், கணவன் எல்லாச் செல்வங்களையும் இழப்பன்.

பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின். (24)

பொருள்: கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்‡கற்பு என்று சொல்லப் படும் உறுதிப்பாடு உண்டாகப் பெற்றால், பெண்ணின் பெறும் தக்கயா உள‡ பெண்ணைப் போல (ஒருவன்) பெறும் தகுதியான பேறுகள் யாவை யுள்ளன? (ஒன்றும் இல்லை)

அகலம்: பெறப்படுவது பேறு. நச்சர் பாடம் ‘பெண் பிறப்புத் தெய்வப் பிறப்பாகும்’. மற்றை நால்வர் பாடம் ‘பெருந்தக்க’ . ‘தக்க’ என்னும் சொற்குத் ‘தகுதியான பேறுகள்’ என்பது பொருள். ‘பெருந்தக்க’ என்பதற்குப் ‘பெரிய தகுதியான பேறுகள்’ என்பது பொருள். ‘தகுதியான பேறுகள்’ என்பதே போதும். ‘பெரிய தகுதியான பேறுகள்’ என்பது மிகை. அன்றியும், ‘தகுதி’ என்னும் சொல் அத்தகைய அடை மொழியை ஏற்காது. ‘பெறுமவற்றுள்’ எனவும், ‘மக்கட் பேறு’ எனவும் ஆசிரியர் பின்னர்க் கூறுதல் காண்க. இக் காரணங்களால், ‘பெருந்தக்க’ என்பது ஒருவன் படித்து மற்றொருவன் கேட்டு ஏடு பெயர்த்தெழுதியதால் நேர்ந்த பிழை என்று கொள்க.

கருத்து: கற்புடைய இல்லாளைப் பெறுதலே ஒருவன் பெறுந்தகுதியான பேறு.

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யு மழை. (25)

பொருள்: தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் ‡ (துயில் நீங்குங்கால்) கடவுளை வணங்காளாய்க் கணவனை வணங்கிக் கொண்டே எழுபவள், பெய் என மழை பெய்யும் ‡ பெய் என்று சொல்ல மழை பெய்யும்.

அகலம்: துயில் நீங்குங்கால் கொழுநனைத் தொழுது கொண்டே எழுவாள். எனவே, துயில் கொள்ளுங்காலும் துயிலுங்காலும் கொழுநனைத் தொழுது கொண்டே துயில்வாள் என்பதும் தெய்வந் தொழுதல் மற்றைய காலத்திலே என்பதும் பெறப்பட்டன.
தொழுதல் ‡ முக் கரணங்களால் வணங்குதல். முக் கரணங்கள் ‡ உளம், நா, உடம்பு. இவற்றை வட நூலார் முறையே மனம், வாக்கு,காயம் என்பர்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (26)

பொருள்: தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வு இல்லாள் ‡ தனது கற்பைக் காத்துத் தன்னைக் கொண்ட (கண)வனைப் பேணித் தகுதி நிறைந்த சொல்லைக் காத்து (ஏனைய இல்லறங்களில்) மறதி இல்லாதவள், பெண்‡(இல் வாழ்க்கைக் குரிய) பெண்.

அகலம்: ‘தன்’ என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அஃது ஆகு பெயராய்த் தனது கற்பை யுணர்த்தி நின்றது. தகுதி நிறைந்த சொல்லாவது, தன் ஊரில் வாழ்வார் தன்னைக் கற்புடையவள் என்று சொல்லும் சொல். ‘நாலாறு’ என்னும் தொடக்கத்துச் செய்யுளில் ‘வாழுமூர் தற்புகழு மாண்கற்பி னில்லாள்’ என்றார் நாலடியார்.

கருத்து: தன் கணவனைப் பேணித் தன் கற்பைக் காத்துத் தான் கற்புடையா ளென்று தன்
ஊரார் சொல்லும்படியாக வாழ்பவளே இல்லாள்.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (27)

பொருள்: சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் ‡ அரணால் காக்கும் காப்பு யாது (பயனைச்) செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை‡ பெண்கள் (தமது) கற்பால் (தம்மைக்) காக்கும் காப்பே தலையாய காப்பு.

அகலம்: தலையாய காப்பைத் தலை என்றார். தலையாய காப்பு‡ சிறந்த காப்பு. நச்சர் பாடம் ‘கற்பெவன்’, ‘கற்பே தலை’. ‘உண்டியு’என்னும் தொடக் கத்துச் செய்யுளில் ‘பெண்டிரைக் காப்ப திலமென்று, கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே’ என்றார் வளையாபதியார். ‘நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச், சிறையா னகப்படுத்த லாகா’ என்றார் பழமொழியார்.

கருத்து: இல்லாளை வீட்டினுள் வைத்துப் பூட்டி அவள் கற்பைக் காக்கலா மென்று நினைத்தல் மடமை.

பெற்றாற்பே ணிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு. (28)

பொருள்: பெற்றான் பேணின்‡(தம்மை வாழ்க்கைத் துணையாகப்) பெற்றவனை (மேற்கூறியபடி) பேணின், பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்பு பெறுவர் ‡ மகளிர் தேவர் வாழும் (வான்) உலகின்கண் (தேவர்களால்) பெரிய சீரினைப் பெறுவர்.

அகலம்: பெண்டிர் என்பது உயர்வுப் பன்மைப் பெயர். முந்திய உரையாசரியர்கள் பாடம் ‘பெற்றாற் பெறின்’. பெற்றான் பெறின் என்பதற்குப் ‘பெற்றானைப் பெறின்’ என்பதே பொருள். அப் பொருள் ஈண்டு ஒரு பொருத்தமும் இன்று. ‘பெற்றாற் பெறின்’ என்பதற்குத் ‘தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின்’ எனப் பொருளுரைத்து, ‘வழிபடுதல்’ என்பது சொல்லெச்சம் எனக் கூறிப் போந்தார்கள் முன்னுரையாசிரியர்கள். எச்சமாகக் கொள்ளும் சொல் செய்யுளுக்கு இன்றியமையாத தாயும், ஒன்றேயாயும் இருத்தல் வேண்டும். உதாரணமாகப் ‘பிறவிப் பெருங்கடல்’ என்னும் தொடக்கத்துக் குறளில் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்பது சொல் லெச்ச மாதல் காண்க. இக் குறளில் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்பதைச் சொல் லெச்சமாகக் கொள்ளாமலும், அது தவிர வேறு ஒரு சொற் றொடரையாவது, சொல்லையாவது சொல் லெச்சமாகக் கொள்ளவும் முடியாது. ‘பெற்றாற் பெறின்’ என்னும் பாடத்தைக் கொள்ளின், எச்சமாக ஒரு சொல்லைக் கொள்ளுதல் இன்றியமையாதது தான். ஆனால், ‘தெய்வமாக’ அல்லது ‘ஆசிரியனாக’ என்பது போன்ற வேறு ஒரு சொல்லை எச்சமாகக் கொள்ளினும் அமையும். ஆகலான், ‘வழிபடுதல்’ என்பது சொல் லெச்சம் என்று கூறுதல் பொருந்தாது. பழைய ஓலை ஏடுகளில் ‘உயிர் மெய் எகரமும்’ ‘உயிர் மெய் ஏகாரமும்’ ‘உயிர் மெய் ஏகாரமாகவே’ எழுதப்பட்டிருத்தலையும், ‘ணிகரம்’ சுழிகள் இல்லாமல் ‘றிகரம்’ போல எழுதப் பட்டிருத்தலையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆதலான், ஏடு பெயர்த் தெழுதியோன் ‘பெற்றாற்பே ணிற்பெறுவர்’ என்பதிலுள்ள பேகாரத்தைப் பெகரமாகவும், ணிகரத்தை றிகரமாவும் படித் தெழுதியதால் ‘பெற்றாற் பெறின்’ என்ற பிழைப் பாடம் ஏற்பட்ட தெனக் கொள்க. பேகாரம் புதியது புகுதல்.

கருத்து: கணவனை மேற்சொல்லிய வாறு பேணியவள் தேவ ருலகத்தில் பெருஞ் சிறப்புப் பெறுவள்.

புகழ்புரிந்த லில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை. (29)

பொருள்: புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு ‡ (கற்புடையாள் என்னும்) புகழைச் செய்த இல்லாள் இல்லாத (கண)வர்க்கு, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை‡ பகைவர் முன் சிங்க வேறு போல (நடக்கும்) பெருமித நடை இல்லை.

அகலம்: இல்லோர் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. ஏறு ‡ ஆண். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘புகழ்புரிந் தில்’. ‘புகழ்புரிந்த வில்’ என்பது போலப் ‘புகழ்புரிந் தில்’ என்பது தொடை யின்பம் பயவாமையானும், அப்பாடத்தைக் கொள்ளுங்கால் அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கதாகக் கொள்ள வேண்டிய திருத்தலானும், ‘புகழ்புரிந்த வில்’ என்பதே ஆசிரியர் பாட மெனவும், ‘புகழ்புரிந் தில்’ என்பது ஒருவன் படித்து மற்றொருவன் கேட்டு ஏடு பெயர்த் தெழுதியதால் நேர்ந்த பிழையயனவும் கொள்க.

கருத்து: புகழ் புரிந்த இல்லாள் இல்லாதார் பகைவர் முன் பெருமையோடு நடக்க நாணுவர்.

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு. (30)

பொருள்: மனைமாட்சி மங்கலம் ‡ மனையாளது நற் குண நற் செயல்கள் மங்கல நாணாம். நல் மக்கட் பேறு அதன் நன் கலம் ‡ நல்ல மக்களைப் பெறுதல் அம் மங்கல நாணின் நன் கலமாம்.

அகலம்: மங்கல நாண் பெண்ணின் கழுத்திற்கு அழகு செய்வது போல நன் மக்கட் பேறு மனையாளுக்கு அழுகு செய்யும் என்ற வாறு. மங்கலம், மனை என்பன ஆகு பெயர்கள், அவை முறையே மங்கல நாணுக்கும் மனையாளுக்கும் ஆயினமையால். நன் கலம் ‡ தாலி. மங்கல நாண் ‡ தாலிக் கொடி. ‘என்ப’, ‘மற்று’ அசைகள். ‘மனைக்கு விளக்க மடவார் ; மடவார், தமக்குத் தகைசால் புதல்வர்’ என்றனர் நான்மணிக்கடிகையார். பேறு என்பது விகுதி புணர்ந்து கெட்டு முதனிலை திரிந்த தொழிற்பெயர். அஃதாவது, ‘பெறு’ என்னும் முதனிலையோடு ‘தல்’ என்னும் விகுதி புணர்ந்து கெட்டுப் ‘பெறு’ என்னும் முதனிலை ‘பேறு’ எனத் திரிந்து நின்றது.

கருத்து: மனையாளது நற்குண நற்செயல்கள் குடும்பத்திற்கு அழகு; நல்ல மக்களைப் பெறுதல் மனையாளுக்கு அழகு.

No comments:

Post a Comment