Sunday

தீவினை யச்சம்

பதினெட்டாம் அதிகாரம் தீவினை யச்சம்
அஃதாவது, தீவினை செய்தற்கு அஞ்சுதல்.

தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யயன்னுஞ் செருக்கு. (171)

பொருள்: தீவினை என்னும் செருக்கு - தீய வினையை விளக்கும் செருக்கினை, தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் - தீய வினைகளைச் செய்து கொண்டிருக்கிறவர் அஞ்சார்; நல்ல வினைகளைச் செய்து கொண்டிருக் கிறவர் அஞ்சுவர்.

அகலம்: தீய வினை புரிதற்குக் காரணம் செருக்கு என்றும், அச் செருக்கிற்கு இடங்கொடுக்க லாகாதென்றும் கூறியவாறு. விழுமம் - நன்மை-நல்வினை. தாமத்தர் பாடம் ‘என்னுஞ் செயற்கு’. தீவினையாகிய காரியத்தைச் செருக்காகிய காரணமாக உபசரித்தார்.

கருத்து: தீவினை புரிதற்கு அஞ்சுதல் வேண்டும்.

தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும். (172)

பொருள்: தீய தீயவே பயத்தலால் - தீ வினைகள் தீய பயன்களையே விளைத்தலால், தீயவை தீயினும் அஞ்ச படும்-(ஒருவன்) தீய வினைகளைத் தீயினும் மிக அஞ்ச வேண்டும்.

அகலம்: தீயானது தீயவும் நல்லவும் பயத்தலானும், தீய வினை தீயவே பயத்தலானும், தீய வினைகளைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தீயவை தீய’. அது பிழைபட்ட பாடம், ‘ஏ’ இன்றியமை யாத தாகலான்.

கருத்து: தீய வினை தீயினுங் கொடிது.

அறிவினு ளெல்லாந் தலையயன்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல். (173)

பொருள்: செறுவார்க்கும் தீய செய்யா(து) விடல் - பகைவர்க்கும் தீங்குகள் செய்யாது விடுதல், அறிவினுள் எல்லாம் தலை - அறிவினு ளெல்லாம் தலையாய அறிவு.

அகலம்: ‘செய்யாது’ என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. ‘என்ப’ அசை.

கருத்து: தீ வினை புரியாமை சிறந்த அறிவு.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. (174)

பொருள்: மறந்தும் பிறன் கேடு சூழற்க - (ஒருவன்) மறந்தும் பிறனது கேட்டை எண்ணற்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - (பிறனது கேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள் எண்ணும்.

கருத்து: பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு நினைப்பர்.

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து. (175)

பொருள்: இலன் என்று தீயவை செய்யற்க- (தான் பொருள் இல்லாதவன் என்று நினைத்து (ப் பொருள் ஈட்டுதற்காகத்) தீய வினைகளை (ஒருவன்) செய்யாதி ருக்கக் கடவன்; செய்யின் மற்றும் பெயர்த்து இலன் ஆகும் - (தீய வினைகளைச்) செய்யின் உள்ளதும் நீங்கி இல்லாதவன் ஆவன்.

அகலம்: உள்ளதாவது, தான் பொருள் இல்லாதவன் என்று அறிந்த அறிவு. மணக்குடவர் பாடம் ‘இலமென்று’. இல்லது காரணமாகத் தீவினை செய்யின் என்றமையால், மற்றும் என்பதற்கு உள்ளதும் என்று பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து: தீய வினை புரிபவன் தன்அறிவையும் இழப்பன்.

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான். (176)

பொருள்: நோய் பால தன்னை அடல் வேண்டாதான்- பிணிப் பகுதியன தன்னை வருந்துதலை விரும்பாதவன், தீ பால பிறர்கண் செய்யற்க - தீமைப் பகுதியனவற்றைப் பிறர் மாட்டுச் செய்யாதிருக்கக் கடவன்.

அகலம்: பிணிப் பகுதியன - பிணி வகையிற் சேர்ந்தவை. தீமைப் பகுதியன - தீமை வகையிற் சேர்ந்தவை. ‘தான்’ அசை.

கருத்து: தீவினை புரிவார் நோய்பல கொள்வர்.

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். (177)

பொருள்: எனை பகை உற்றாரும் உய்வர் - எத்தகைய (பெரிய) பகையை அடைந்தவரும் தப்புவர் ; வினை பகை வீயாது பின் சென்று அடும் - (தீய) வினை யாகிய பகை நீங்காது (தன்னைச் செய்தவன்) பின்னே சென்று (அவனை) வருத்தும்.

கருத்து: தீய வினை புரிவாரைக் கெடுத்தற்கு வேறு பகைவர் வேண்டா; அதுவே போதும்.

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. (178)

பொருள்: தீயவை செய்தார் கெடுதல் - தீய வினைகளைச் செய்தவர் அழிதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - (ஒருவன்) நிழல் அவனை (விட்டு) நீங்காது (அவன்) அடிகளின் கீழ்த் தங்கினாற் போலும்.

அகலம்: அடி என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. ‘உறைந்தற்று’ என்பது வினையயச்சத் தொகை. அஃது ‘உறைந்தால் அற்று’ என விரியும். மணக்குடவர் பாடம் ‘தீவினை செய்தார்’.

கருத்து: தீவினை புரிவார் கேடுறுதல் திண்ணம்.

தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால். (179)

பொருள்: தன்னை தான் காதலன் ஆயின் - தன்னைத் தான் காதலிப் பவனாயின், தீவினை பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினைப் பகுதிகளில் எவ்வளவு சிறியதான ஒன்றையும் நெருங்கா திருக்கக் கடவன்.

கருத்து: தன்னைக் காதலிப்பவன் தீவினையை அணுகற்க.

அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்வா னெனின். (180)

பொருள்: மருங்கு ஓடி தீ வினை செய்வான் என்னின் - (ஒருவன் அற நெறியை விட்டுப்) பக்கத்தில் ஓடித் தீய வினைகளைச் செய்வான் என்றால், அரு கேடன் என்பது அறிக - நீக்குதற்கு அரிய கேட்டை யுடையவன் என்று அறியக் கடவன்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செய்யா னெனின்’. அது பிழைபட்ட பாடம், ‘அருங் கேடன்’ என்பதற்கு ‘நீக்குதற்கரிய கேட்டை யுடையவன்’ என்பதே பொருளாகலானும், ஒன்றைச் செய்தற்கே ஓடுதல் இயற்கை யாகலானும்.

கருத்து: தீவினை செய்பவன் நீங்காத கேட்டை அடைவன்.

No comments:

Post a Comment