Sunday

கூடா வொழுக்கம்

இருபத்தைந்தாம் அதிகாரம் - கூடா வொழுக்கம்
அஃதாவது, பொருந்தாத ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும். (241)

பொருள்: வஞ்ச மனத்தான் படிறு ஒழுக்கம் - வஞ்சக மனத்தை யுடையவனது பொய்யான (தவ) ஒழுக்கத்தை, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் -உடம்போடு பொருந்திய பொறிகள் ஐந்தும் உள்ளே சிரிக்கும்.

அகலம்: படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம். படிறு -பொய். பூதங்கள் என்பது ஆகுபெயர், அவற்றைத் தன்மாத்திரையாக வுடைய பொறி களுக்கு ஆயினமையால். பொறி -அறிகருவி. ஐம்பொறிகளாகிய மெய், வாய்,கண், மூக்கு, செவி என்பவற்றிற்கு முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் தன் மாத்திரைகள். அதனால், பொறிகளைப் பூதங்கள் என்றார்.

கருத்து: பொய்யயாழுக்கம் உடையானை அவன் மனச்சான்றே வருத்தும்.

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றம் படின். (242)

பொருள்: தன் நெஞ்சம் தான் அறி குற்றம் படின் - தனது மனம் தான்அறிந்த குற்றத்தின்கண் பொருந்தின், வான் உயர் தோற்றம் எவன் செய்யும் -வான் போல் உயர்ந்த தவ வேடம் யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையுஞ் செய்யாது)

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘குற்றம் படின்’, மற்றை மூவர் பாடம் ‘குற்றப் படின்’.

கருத்து: தீய ஒழுக்க முடையானுக்கு அவன் தவ வேடம் யாதொரு பயனையும் தாராது.

வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (243)

பொருள்: வலி இல் நிலைமையான் வல் உருவம் (கொள்ளல்)- (தீய நெறிகளில் செல்ல விடாது மனத்தை அடக்கும்) வலிமை யில்லாத நிலைமையை யுடையவன் வலிய தவ வேடத்தைக் கொள்ளுதல், பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று - பசு புலியினுடைய தோலை (த்தன் மீது) போர்த்துக் கொண்டு (பைங் கூழை) மேய்ந்தாற் போலும்.

அகலம்: ‘மேய்ந்து’ என்றமையால், ‘பைங்கூழ்’ என்பது வருவித்து உரைக்கப் பட்டது. மேய்ந்தற்று என்பது வினைத் தொகை. அது மேய்ந்தால் அற்று என விரியும். கொள்ளல் என்பது அவாய் நிலையான் வந்தது.

கருத்து: மனத்தை அடக்கும் வலி இல்லாதான் தவ வேடம் புனைதல் உலகத்தாரை வஞ்சித்தற்காகவே.

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (244)

பொருள்: தவம் மறைந்து அல்லவை செய்தல் -(ஒருவன்) தவ வேடத்தின்கண் மறைந்து (நின்று) மறங்களைச் செய்தல் வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்து அற்று - வேடன் புதலின்கண் மறைந்து (நின்று) பறவைகளைப் பிணித்தாற் போலும்.

அகலம்: தவம் என்பது ஆகு பெயர், தவ வேடத்திற்கு ஆயினமையால். புதல் - நாணல்,புல். புள் என்பது சாதி ஒருமைப் பெயர். சிமிழ்த்தற்று என்பது வினையயச்சத் தொகை.

கருத்து: தவவேடம் புனைந்து பாவம் புரிதல் கொலை செய்தலை ஒக்கும்.

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும். (245)

பொருள்: பற்று அற்றேம் என்பார் படிறு ஒழுக்கம் -(அகத்தின்கண் யாதொரு பற்றினின்றும் நீங்காதாரா யிருக்கப் புறத்தில்) பற்றுக் களினின்று நீங்கினேம் என்று கூறும் துறவு வேடத்தவரது பொய் யயாழுக்கம், எற்று எற்று என்ற ஏதம் பலவும் தரும் - கொல் வெட்டு என்று சொல்லுதற்குக் காரணமாய குற்றங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

அகலம்: எற்று எற்று என்பது துறவு வேடத்தான் தீயன புரிதற்காகப் பிறன் இல்லின்கண் சென்று பிறன் கைப்பட்ட பொழுது அப் பிறன் தன் பக்கத்தில் நிற்பானைப் பார்த்துக் கூறும் கூற்று. ‘என்ற ஏதம்’ என்பது செய்யுள் விகாரத்தால் ‘அ’கரங் கெட்டு என்றேதம் என்று ஆயிற்று. தருமர் பாடம் ‘பற்றற்றோ மென்பான்’ தாமத்தர் பாடம் பற்றற்றே மென்பான்’. நச்சர் பாடம் ‘பற்றற்றோ மென்பார்’.

கருத்து: தவ வேடம் புனைந்து தீயன புரிவோர் கொலையுண்டு இறப்பர்.

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில். (246)

பொருள்: நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - மனத்தில் (ஒரு பொருளினின்றும்) துறவாதவராய் (எல்லாப் பொருள்களினின்றும்) துறந்தவர் போல (உலகத்தாரை) வஞ்சித்து வாழ்வாரினும், வன் கண்ணார் இல் - கொடுமையாளர் (வேறு) இல்லை.

அகலம்: வன் கண்ணார் என்பது ணகர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து: அவ்வாறு வாழ்பவர் மிக மிகக் கொடியர்.

புறங்குன்றிக் கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. (247)

பொருள்: புறம் குன்றி கண்டு அனையர் ஏனும் -புறத்தில் குன்றி உருண்டை (யின் செம்மை நிறத்தை) ஒப்பவரேனும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து- அகத்தில் குன்றி மூக்கைப் போலக் கரிய தன்மையை யுடையவரை (இவ்வுலகம்) உடையது.

அகலம்: நூற்கண்டு என்பது போலக் குன்றிக் கண்டு என்பது குன்றி உருண்டை என்று பொருள் தந்து நின்றது. கரிய தன்மை‡மறங்கள் நிறைந்த தன்மை. குன்றிக் கண்டு என்பது ஆகு பெயர், அதன் நிறத்திற்கு ஆயினமையால். தருமர், தாமத்தர் பாடம் ‘புறங்குன்றிக் கண்டனையர்’, மற்றை மூவர் பாடம் ‘புறங்குன்றி கண்டனையர்’.

கருத்து: ஒருவனை அவனது புற வேடத்தாற் கொள்ளற்க.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (248)

பொருள்: மனத்தது மாசு ஆக - மனத்திலுள்ளது குற்றமாயிருக்க, மாண்டார் நீர் ஆடி -மாட்சிமைப்பட்ட தவத்தினர் (மூழ்கும் தூய) ஆறுகளில் மூழ்கி, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் (உண்டு) -ஒளித்து ஒழுகும் மாந்தர் பலர் (இவ் வுலகத் தின்கண்) உண்டு.

அகலம்: நீர் என்பது ஆகுபெயர், அதனையுடைய ஆற்றுக்கு ஆயின மையால். ஒளித்து ஒழுகலாவது, தீய வினைகளைப் பிறர் அறியாமல் செய்தல். தூய ஆறாவது, தன்கண் மூழ்கினவரைத் தூயராக்கும் ஆறு. அஃதாவது, கங்கை போன்ற புண்ணிய நதி.

கருத்து: ஒருவனை அவனது புறச் செயல்களால் கொள்ளற்க.

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (249)

பொருள்: கணை கொடிது -அம்பு (உருவத்தால் நேரியதாயினும் செயலால்) கொடியது. யாழ்கோடு செவ்விது - யாழின் கோடு (உருவத்தால் கோடிய தாயினும் செயலால்) நேரியது ; ஆங்கு அன்ன - அவ்வாறு போல, வினை படு பாலால் கொள்ளல் -(ஒவ்வொருவரையும் அவரவர்) வினைகள் படும் பகுதியால் கொள்க.

அகலம்: கொள்ளல் என்பது ளகர வொற்றுக் கெட்டு நின்றது. நேரியது‡ நல்லது. கோடு-கொம்பு. அஃதாவது, யாழின் நரம்பின் குச்சுகள் செருகப் பட்டிருக்கும் தலைப் பாகம்.

கருத்து: தீய வினையுடையாரைத் தீய ரென்றும், தூய வினையுடையாரைத் தூய ரென்றும் அவரவர் வினைகளை நோக்கி ஒவ்வொருரையுங் கொள்க.

மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின். (250)

பொருள்: உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் பழித்ததாகிய தீய ஒழுக்கத்தை ஒழித்து விட்டால், மழித்தலும் நீட்டலும் வேண்டா - (ஒருவன்) மொட்டை யடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.

அகலம்: மழித்தலும் நீட்டலும் துறவிகள் பூணும் வேடமாகலான், அவை ஈண்டுக் கூறப்பட்டன. ‘உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ப வாகலான், உலகம் என்பதற்கு உயர்ந்தோர் எனப் பொருள் உரைக்கப் பட்டது. தருமர் பாடம் ‘வழித்தலும்’.

கருத்து: தவத்திற்கு வேடம் இன்றி யமையாத தன்று; தீய ஒழுக்கத்தை விடுதலே இன்றியமையாதது.

No comments:

Post a Comment