Friday

அன்புடைமை

ஐந்தாம் அதிகாரம் - அன்புடைமை

அஃதாவது, அன்பை உடையரா யிருத்தல்.

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூச றரும். (41)

பொருள்: அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ - (அகத்தினின்று வெளிப்படாமல்) அடைத்து வைக்கும் (வலிய) கதவு அன்பிற்கும் உண்டோ? ஆர்வலர் புன்கண் ஈர் பூசல் தரும் -அன்பு செய்யப்பட்டாரது துன்பம் (அக் கதவை) பிளக்கும் தாக்குதலை உண்டாக்கும்.
அகலம்: அன்பு செய்யப்பட்டாரது துன்பம் அன்புடையார் அகத்தினின்று வெளிப்படாமல் அன்பை அடைத்து வைத்திருக்கும் கதவினை உடைத்து அன்பை வெளிப்படுத்திவிடும் என்றவாறு. தாழ் என்பது ஆகுபெயர், அதனை யுடைய கதவிற்கு ஆயினமையால். ஈர் என்பது வினைத்தொகை. ஆர்வம்-அன்பு செய்யப்படுந் தன்மை. பூசல்-பொருதல்‡தாக்குதல். ஆர்வம் என்னும் பண்புப்பெயர் ஈறும் ஈற்றயலும் கெட்டு, வலர் என்பதனோடு புணர்ந்து ஆர்வலர் என்றாயிற்று. வலர் - வல்லவர். ‘ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ என்பதற்குத் ‘தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பங் கண்டுழி’ என்ற சொற்களை வருவித்து, ‘அன்புடையார் (கண் பொழிகின்ற) புல்லிய கண்ணீரே (உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத்) தூற்றும்’ என்று உரைப்பாரும் உளர். அவர் ‘ஆர்வலர்’என்பதற்கு ‘அன்பு செய்யப்பட்டார்’ என்பதே பொருள் என்பதை அறியார். அன்றியும், ‘துன்பம்’ என்னும் பொருள் தரும் ‘புன்கண்’ என்ற சொல்லைப் புன், கண் எனப் பிரித்தும், அடைக்கும் தாழ் உண்டோ? என்ற வினாவிற்கு விடையில்லாதும் பொருள் உரைத்து இடர்ப்பட்டனர்.

கருத்து: அன்பு செய்யப்பட்டார் துன்ப முறுதலைக் காணப்பொறார் அன்புடையார்.

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு. (42)

பொருள்: அன்பு இல்லார் எல்லாம் தமக்கே உரியர் - அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியர் ; அன்பு உடையார் என்பும் பிறர்க்கே உரியர் - அன்பினை உடையவர் (தம்) உடம்பையும் பிறர்க்கே உரியர்.

அகலம்: இல்லார் என்பதன் லகர வொற்றும், ஏகார மிரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. என்பு என்பது ஆகு பெயர், அதனை உடைய உடம்பிற்கு ஆயினமையால். பிறர்க்கே-பிறர்க்காகவே. உரியர்‡உடையர். நச்சர் பாடம் ‘உரிய பிறர்க்கு’.

கருத்து: அன்புடையார் தமது உடைமைகளை யயல்லாம் துன்புற்ற பிறர்க்கு வழங்குவர்.

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு. (43)

பொருள்: உயிர்க்கு ஆர் என்போடு இயைந்த தொடர்பு‡உயிர்க்கு அருமையான (மக்கள்) உடம்போடு கூடிய சேர்க்கை, அன்போடு இயைந்த வழக்கு என்ப (ஆன்றோர்)- (முற் பிறப்பில்) அன்புடன் பொருந்திய பயன் என்பர் ஆன்றோர்.

அகலம்: ‘வழக்கு’ என்பதும் ‘அன்பு’ என்பதும் ஆகு பெயர்கள். ‘ஆர்’ என்பதனை ‘உயிர்’ என்பதினின்று பிரித்து ‘என்பு’ என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. அருமையான உடம்பு‡ மக்கள் உடம்பு. ‘ஆன்றோர்’ என்பது சொல்லெச்சம். ‘இயைந்த’ என்பதற்கு ‘பொருந்துவதற்கு வந்த’ என்று உரைப்பார் சிலர். அச் சொற்கு அப் பொருள் இல்லை யயன்று அவ்வுரையை மறுக்க. முற் பிறப்பில் கன்று முதலியவை மீது அன்பு செலுத்திய பசு முதலியன இப் பிறப்பில் மக்களாய்ப் பிறந்துள்ளன என்று அறிக.

கருத்து: அன்பு செய்ததின் பயனே மக்கட் பிறப்பு.

அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாத் துணை. (44)

பொருள்: அன்பு ஆர்வம் உடைமை ஈனும் - அன்பு (பிறரால்) அன்பு செய்யப்படுந் தன்மை உடையனாதலை நல்கும் ; அது நண்பு என்னும் நாடா(த) துணை ஈனும்‡அவ் வுடைமை நட்பு என்று சொல்லப்படும் தேடுதற்கு அரிய துணையினை நல்கும்.

அகலம்: பிறரால் அன்பு செய்யப்படுதலே ஆர்வம் என்பதற்கு இக்குறள் ஒரு சான்று. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நாடாச் சிறப்பு’. நட்பினைத் துணை யயன்றே ஆசிரியர் பிறாண்டும் கூறுகின்ற மையானும், சிறப்பு என்பது ஈண்டுப் பொருத்த மற்ற சொல்லாகலானும், ‘துணை’ என்பதே ஆசிரியர் பாடம் என்று கொள்ளப்பட்டது. நாடாத - தேட முடியாத- தேடுதற்கு அரிய.

கருத்து: அன்புடைமை யாவரையும் நட்பின ராக்கும்.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (45)

பொருள்: வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு‡ உலகத்தில் இன்பத்தை அடைந்தவர் பெறும் வீடு, அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப (ஆன்றோர்)- அன்பைப் பொருந்தி நின்ற பயன் என்று சொல்வர் ஆன்றோர்.

அகலம்: இன்புற்றார் என்றமையால், அவர் அறமும் பொருளும் முன்னரே பெற்றமை தெற்றென விளங்கும். வழக்கு என்பது ஆகு பெயர், அதன் பயனுக்கு ஆயினமையால். தருமர் பாடம் ‘அன்புற் றமைந்த’; ‘ஆருயிர்க் கின்புற்றார்’. நச்சர் பாடம் ‘ஆருயிரென்புற்றா ரெய்தும் பிறப்பு’.

கருத்து: அன்புடைமை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் அளிக்கும்.

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை. (46)

பொருள்: அறியார் அன்பு அறத்திற்கே சார்பு என்ப- (அன்பின் தன்மையை) அறியாதார் அன்பு அறத்தைச் செய்தற்கே துணை என்று சொல்லுவர் ; அஃதே மறத்திற்கும் துணை - அன்பே மறத்தைச் செய்தற்கும் துணை.

அகலம்: ஓர் உயிர் அல்லது ஒரு பொருள் மீது கொண்டுள்ள அன்பே பிறி தோரு யிர்க்குத் தீங்கிழைத்தற்குக் காரண மாதலால், அன்பே மறத்திற்கும் துணை என்றார். தருமர் பாடம் ‘சால் பென்ப’.

கருத்து: மாந்தர் செயல்கட் கெல்லாம் அன்பே காரணம்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம். (47)

பொருள்: என்பு இல் அதனை வெயில் போல அன்பு இல் அதனை அறம் காயும்‡ எலும்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்) போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

அகலம்: இல்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றன. ஏகாரம் அசை.

கருத்து: அன்பு இல்லாதார் துன்பம் உறுவர்.

அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிரத் தற்று. (48)

பொருள்: அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை‡ அன்பு உள்ளத்தின் கண் இல்லாத உயிர் (செழித்து) வாழுதல், வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று - பாலை நிலத்தின் கண் வற்றலான மரம் தளிர்த்தாற் போலும்.

அகலம்: வற்றல் மரம் பாலை நிலத்தின்கண் தளிர்க்காதது போல, அன்பிலாத மாந்தர் செல்வம் முதலியன பெற்றுச் செழித்து வாழார் என்ற வாறு. வன்பால் - பாலை நிலம். வற்றலான- வற்றுதலை யடைந்த. தளிர்த்தற்று என்பது வினையயச்சத் தொகை. அது தளிர்த்தால் அற்று என விரியும். மணக்குடவர், தாமத்தர், நச்சர் பாடம் ‘வன்பார்க்கண்’.

கருத்து: அன்பு இல்லாதார் செழிப்புற்று வாழார்.

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு. (49)

பொருள்: யாக்கை அக உறுப்பு அன்பு இல்லவர்க்கு - உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, புற உறுப்பு எல்லாம் எவன் செய்யும்- (உடம்பின்) வெளி யுறுப்பு(க்களாகிய கண், காது, கை, கால் முதலியன) எல்லாம் யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையும் செய்யா).

அகலம்: புற வுறுப்புக்களாகிய கண்,கை,காது,கால் முதலியவை இருந்தும் அக வுறுப்பாகிய அன்பு இல்லாதவழி அறம் நிகழாது என்ற வாறு. ‘அகம்’, ‘புறம்’ அத்துச் சாரியை பெற்று நின்றன.

கருத்து: அன்பு இல்லாதார் அறம் புரியார்.

அன்பின் வழிய துயிர்நிலை யஃதில
தென்புதோல் போர்த்த வுடம்பு. (50)

பொருள்: அன்பின் வழியது உயிர்நிலை‡ அன்பைப்பற்றி நிற்கும் உடம்பு உயிர்நிலை ; அஃது இல்லது என்பு தோல் போர்த்த உடம்பு‡ அன்பு இல்லாதது எலும்புகளைத் தோல் போர்த்த (உயிரில்லாத) உடம்பு.

அகலம்: தாமத்தர் பாடம் ‘அன்பின் வழிய னுயிரின னஃதிலான்’. நச்சர் பாடம் ‘அஃதிலார்’. மற்றை மூவர் பாடம் ‘அஃதிலார்க்கு’. அன்புள்ளது இன்னதெனக் கூறியவர் அன்பில்லாதது இன்னதெனக் கூறுதலே இயற்கையும் முறையு மாகலானும், ‘அஃதிலார்க் கென்பு தோல் போர்த்த வுடம்பு’ என்பதன் பொருளினும் ‘அஃதில தென்பு தோல் போர்த்த வுடம்பு’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலானும், ‘அஃதிலது’ என்பதே ஆசிரியர் பாட மெனவும், ‘அஃதிலார்க்கு’ என்பது பிழைப் பட்ட பாட மெனவும் கொள்க.

கருத்து: அன்பு இல்லாதார் பிணத்தை ஒப்பர்.

No comments:

Post a Comment