Monday

இன்னாசெய்யாமை

இருபத்தொன்பதாம் அதிகாரம் - இன்னாசெய்யாமை
அஃதாவது, பிற உயிர்களுக்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல்.

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (281)

பொருள்: மாசு அற்றார் கோள் -குற்றம் அற்றவரது கோட்பாடு, சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை - வீட்டினை நல்கும் செல்வத்தைப் பெறினும் பிறர்க்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல்.

கருத்து: பிறர்க்கு இன்னா செய்யாமை நல்லவரது கடமை.

கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (282)

பொருள்: மாசு அற்றார் கோள் - குற்றம் அற்றவரது கோட்பாடு,கறுத்து இன்னா செய்தவன்கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை-வெகுண்டு (தமக்குத்) துன்பங்கள் செய்தவனுக்கும் திரும்பித் துன்பங்கள் செய்யா திருத்தல்.

அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘செய்தவற் கண்ணும்’. பரிமேலழகர், நச்சர் பாடம் ‘செய்தவக் கண்ணும்’. அகரச் சுட்டு வேண்டாத தொன்றா கலானும், மறுத்து எனப் பின்னர்க் கூறுதலானும், முந்திய மூவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. செய்தவற் கண்ணும் என்பது வேற்றுமை மயக்கம், ஏழாம் வேற்றுமை யுருபு நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்தமை யால்.

கருத்து: தமக்குத் துன்பஞ் செய்தவனுக்கும் தாம் துன்பஞ் செய்ய லாகாது.

செய்யார்மற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும். (283)

பொருள்: செற்றார்க்கும் இன்னாத செய்யார் -(அறிவுடையார்) பகைவர்க்கும் துன்பந் தரும் செயல்களைச் செய்யார், செய்த பின் உய்யா விழுமம் தரும் -(இன்னாத) செய்த பின்னர் (அச் செயல்) தப்ப முடியாத துன்பத்தைத் தரும் (ஆகலான்).

அகலம்: ‘மன்’ என்பது அசை. பரிமேலழகர் பாடம் ‘செய்யாமற்’. தருமர், மணக்குடவர், தாமத்தர் , நச்சர் பாடம் ‘செய்யாமை’. துறந்தார் பிறர்க்கு இன்னா செய்யார் என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனைச் ‘செய்யாமல்’ என்று விதந்து கூற வேண்டா. பிறர்க்கு யாதொரு தீங்கும் செய்யாதிருக்கத் துறந்தார் மேல் பிறர் செற்றங் கொள்வது இயற்கைக்கு மாறு. ஆகலான், ‘செய்யார்மன்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. உய்ய முடியாத விழுமத்தை உய்யா விழுமம் என்றார்.

கருத்து: பிறர்க்கு இன்னா செய்யின் , தமக்கு இன்னா வரும்.

இன்னாசெய் தாரை யயாறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (284)

பொருள்: இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்குத் துன்பஞ் செய்தவரை ஒறுத்தல், அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் நாணும்படியாக நல்ல இன்பம் தருஞ் செயல்களைச் செய்து (அவரை விட்டு) நீங்குதல்.

அகலம்: நயம் தருஞ் செயல்களை நயம் என்றார். ஒறுத்தல்- தண்டித்தல். தாமத்தர் பாடம் ‘நன்மையே’.

கருத்து: இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க.

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. (285)

பொருள்: பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றா(த) கடை - (அறிவுடையார்) பிறிது (ஒர்) உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் (கருதிக்) காவாத விடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ-(அவரது) அறிவுடைமையினால் ஆகும் பயன் உண்டோ? (இல்லை).

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தன்னோய்போல்’.

கருத்து : அறிவுடைமைக்கு அழகு பிற உயிர்க்கு இன்னா செய்யாமை.

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல். (286)

பொருள்: இன்னா என தான் உணர்ந்தவை - துன்பங்கள் எனத் தான் உணர்ந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன்மாட்டுச் செய்தலைப் பொருந்தாமை வேண்டும்.

அகலம்: ‘தனக்கின்னா வின்னா பிறர்க்கு’. - பழமொழி நானூறு.

கருத்து: தனக்குந் துன்பந் தரும் செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யற்க.

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானு
மாணாசெய் யாமை தலை. (287)

பொருள்: எனைத்தானும் எ ஞான்றும் யார்க்கும் - எவ்வளவேனும் எந் நாளும் யார்க்கும் , மாணா மனத்தானும் செய்யாமை தலை - துன்பந்தரும் செயல்களை உள்ளத்தாலும் செய்யாதிருத்தல் தலையாய துறவறம்.

அகலம்: தலை என்பது ஆகு பெயர், தலையாய துறவறத்திற்கு ஆயினமை யால். நச்சர், பரிமேலழகர் பாடம் ‘மனத்தானாம்’. மற்றை மூவர் பாடம் ‘மனத்தானும்’. மனத்தானாம் என்பது பொருத்தமான பொரு ளொன்றையும் தாராமையின், மனத்தானும் என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: மனத்தானும் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யாமை தலையாய துறவறம்.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். (288)

பொருள்: தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான்-(பிறன் செய்யும் இன்னா) தன் உயிர்க்குத் துன்பம் தருதலைத் தான் உணர்பவன். மன் உயிர்க்கு இன்னா செயல் என்?-(மற்றை) நிலைபேறுடைய உயிர்களுக்குத் துன்பஞ் செய்தல் யாது காரணம்?

அகலம்: கொல், ஒ என்பன அசைகள்.

கருத்து: துன்பம் எனத் தான் உணர்ந்தவற்றைப் பிற உயிர்க்குச் செய்தல் மடமையே.

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றனக்கின்னா
பிற்பகற் றாமே வரும். (289)

பொருள்: பிறர்க்கு இன்னா முற் பகல் செய்யின் -(ஒருவன்) பிறர்க்குத் துன்பந் தரும் செயல்களை முற்பகலின்கண் செய்யின், தனக்கு இன்னா தாமே பிற்பகல் வரும் ‡தனக்குத் துன்பங்கள் தாமேயாகப் பிற்பகலின்கண் வரும்.

அகலம்: ஞாயிறு தோன்றியது முதல் பத்து நாழிகை வரையில் முற்பகல் எனவும், அப் பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரையில் பகல் எனவும், அவ் விருபது நாழிகை முதல் ஞாயிறு படும் வரையில் பிற்பகல் எனவும் சொல்லப்படும். மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘தமக்கின்னா’. தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தானே வரும்’. ‘முன்பகல் கண்டான் பிறன்கேடு, தன்கேடு,பின்பகல் கண்டு விடும்’. - பழமொழி நானூறு. ‘தமக்கு’ என்னும் சொல்லால் குறிக்கப்படுவோர் யாவரெனச் சொல்ல இயலாமையின், தனக்கு என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: பிறர்க்குத் துன்பஞ் செய்யின், தனக்குத் துன்பம் தானே வரும்.

நோயயல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (290)

பொருள்: நோய் எல்லாம் நோய் செய்தார் மேல ஆம் - துன்பங்களெல்லாம் (பிற உயிர்களுக்குத்) துன்பங்கள் செய்தார் மேலனவாம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - (ஆகலான், தமக்குத்) துன்ப மின்மையை விரும்புவர் பிற உயிர்களுக்குத் ) துன்பம் செய்யார்.

அகலம்: தருமர் பாடம் ‘நோயயல்லா நோய்செய்வார்’.

கருத்து: துன்பமுற வேண்டாதார் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யற்க.

No comments:

Post a Comment