Sunday

பயனில சொல்லாமை

இருப்பத்தேழாம் அதிகாரம் - பயனில சொல்லாமை.
அஃதாவது, பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை.

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும். (261)

பொருள்: பல்லார் முனிய பயன் இல சொல்லுவான் -(அறிஞர்) பலர் வெறுக்கும்படியாகப் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுபவன், எல்லாரும் எள்ள படும் - எல்லாராலும் இகழப் படுவன்.

அகலம்: தருமர் பாடம் ‘பயனில் சொல்’. ‘எல்லாரும்’ என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: பயன் இல்லாத சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப் படுவன்.

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது. (262)

பொருள்: பல்லார்முன் பயன் இல சொல்லல் -பலர் முன் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதல், நட்டார்கண் நயன் இல செய்தலின் தீது - நட்பினர்மாட்டு (அவர்க்கு) விருப்பம் இல்லாத செயல்களைச் செய்தலினும்தீது.

கருத்து: பலர் முன் பயன் இல்லாத சொற்களைச்சொல்லுதல் நட்டார் விரும்பாத செயல்களைச் செய்தலினும் தீது.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (263)

பொருள்: பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன இல்லாத சொற்களை விரித்துப் பேசும் பேச்சு, நயன் இலன் என்பது சொல்லும் - (அவ்வாறு பேசுவோன்) நன்மை இல்லாதவன் என்பதைக் கூறும்.

கருத்து: பயனில சொல்லுவான் நல்லவன் அல்லன் என்று கருதப்படுவான்.

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து. (264)

பொருள்: பல்லார் அகத்து பயன் சாரா(த) பண்புஇல் சொல் - பலர் நடுவில் (சொல்லிய) பயன் பொருந்தாத குணமற்ற சொற்கள், நயன் சாரா நன்மையின் நீக்கும் - இன்பம் பொருந்தாதனவாய் (அச் சொற்களைச் சொல்லியவனை) அறத்தினின்று நீக்கும்.

அகலம்: சொல்லிய என்பது அவாய் நிலையான் வந்தது. தருமர், தாமத்தர் பாடம் ‘நயஞ்சாரா’. நச்சர் பாடம் ‘நயஞ்சாரா நன்மையு நீங்கும் பயஞ்சாரா’. மணக்குடவர் பாடம் ‘நீங்கும்’.

கருத்து: பயனில சொல்வார் அறமும் இன்பமும் இழப்பர்.

சீர்மை சிறப்பொடு னீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (265)

பொருள்: நீர்மை யுடையார் பயன் இல சொல்லின்-(துறவுத்) தன்மையை யுடையார் பயன் இல்லாத சொற்களைச் சொல்லின், சீர்மை சிறப்போடு நீங்கும்- (அவருடைய) சீரிய ஒழுக்கமும் பெருமையும் (அவரை விட்டு) நீங்கும்.

அகலம்: ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது.

கருத்து: துறவிகள் பயனில சொல்லின் தமது ஒழுக்கத்தையும் பெருமை யையும் இழப்பர்.

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யயனல். (266)

பொருள்: பயன் இல் சொல் பாராட்டுவானை - பயன் இல்லாத சொற்களைப் பாராட்டுவானை, மகன் என்னல் ‡மனிதன் என்று சொல்லற்க ; மக்கள் பதடி என்னல் - மனிதரில் பதர் என்று சொல்லுக.

அகலம்: பாராட்டுதல் -கொண்டாடுதல். அஃதாவது, பிரியமாகப் பேசுதல். என்னல் இரண்டும் னகர வொற்றுக் கெட்டு நின்றன.

கருத்து: பயனில சொல்லுவான் மக்களுட் பதர்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (267)

பொருள்: சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - (துற வொழுக்கங்களால்) நிறைந்தோர் இன்பம் இல்லாத சொற்களைச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று - பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நன்மை.

கருத்து: துறவிகள் பயனில சொல்லற்க.

அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல். (268)

பொருள்: அரு பயன் ஆயும் அறிவினார் - (ஆராய்தற்கு) அரிய பொருளை ஆராயும் அறிவை யுடையவர், பெரு பயன் இல்லாத சொல் சொல்லார் - பெரிய பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

அகலம்: அரிய பொருளாவது, மெய்ப் பொருள்.

கருத்து: மெய்ப் பொருளை ஆராய்வார் பயனில சொல்லற்க.

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர். (269)

பொருள்: மருள் தீர்ந்த மாசு அறு காட்சி அவர் - மயக்கம் தீர்ந்த குற்றமற்ற அறிவினை யுடையார், பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயன் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்.

அகலம்: தருமர் பாடம் ‘பொய்ச்சார்ந்தும்’. நச்சர் பாடம் ‘பொய்ச்சாந்தும்’. அறு என்பது வினைத் தொகை.

கருத்து: மெய்யறி வுடையார் மறந்தும் பயனில சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (270)

பொருள்: சொல்லின் பயன் உடைய சொல்லுக - (ஒருவன்) பேசின் பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயன் இல்லா(த) சொல் சொல்லற்க - சொற்களுள் பயன் இல்லாத சொற்களைச் சொல்லற்க.

அகலம்: இல்லாத என்பது ஈறும் லகர வொற்றும் கெட்டு நின்றது.

கருத்து: பயனில சொல்லற்க; பயனுடைய சொல்லுக.

No comments:

Post a Comment