Sunday

வாய்மை

பதினாறாம் அதிகாரம் - வாய்மை
அஃதாவது, மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி சொல்லுதல்.

தன்னெஞ் சறிந்தது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும். (151)

பொருள்: தன்னெஞ்சு அறிந்தது பொய்யற்க - தன் மனச் சான்று அறிந்ததனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க ; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னை சுடும் - அறிந்ததற்கு மாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும்.

அகலம்: தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடியே கூறுதல் வாய்மை என்றும், அறிந்ததற்கு மாறாகக் கூறுதல் பொய்ம்மை என்றும், பொய்ம்மை கூறுவதால் இன்னது விளையு மென்றும் கூறினார். ‘நெஞ்சு’ ஆகு பெயர், அதன் சான்றுக்கு ஆயினமையால். மனச் சான்று - மனத்தின்கண் சான்றாய் நிற்கும் அறிவு. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அறிவது’. ‘அறிந்தது’ என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், இன்னோசை பயத்தலாலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. பரிமேலழகர் இக் குறளை மூன்றாங் குறளாகவும், இரண்டு, மூன்றாம் குறள்களை முறையே ஒன்று, இரண்டாம் குறள்களாகவும் கொண்டனர். இக் குறள் வாய்மைக்கு விதி கூறுகின்றமையாலும், இரண்டு மற்றும் மூன்றாம் குறள்கள் முறையே வாய்மைக்கு விலக்கும் பொய்மைக்கு விலக்கும் கூறுகின்ற மையாலும் இது முதற் குறளாகவும், அவை இரண்டு, மூன்றாம் குறள்களாகவும் அமைக்கப்பட்டன.

கருத்து:தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி வெளியிடுதல் வாய்மை.

வாய்மை யயனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல். (152)

பொருள்: வாய்மை எனப்படுவது யாது என்னின்- வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்றால், தீமை யாது ஒன்றும் இல்லாத சொல்லல் - (குற்றமற்ற உயிர்க்குத்) தீங்கு யாதொன்றையும் பயவாத சொற் களைச் சொல்லுதல்.

அகலம்: மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி உரைத்தல் வாய்மை யாயினும், அது குற்றமற்ற உயிர்க்குத் தீங்கு பயக்குமாயின், அது வாய்மை எனச் சொல்லத் தக்கதன்று. இக் குறள் வாய்மைக்கு விலக்கு. இல்லாத என்பதும் சொல்லல் என்பதும் லகர வொற்றும், என்னின் என்பது னகர வொற்றும் கெட்டு நின்றன.

கருத்து: குற்றமற்ற உயிர்க்குத் தீங்கு விளைக்குமாயின், வாய்மையும் பொய்ம்மை யாம்.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின். (153)

பொருள்: புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்னின் - குற்றமற்ற நன்மையைக் கொடுக்கும் என்றால், பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மை (களும்) வாய்மையின் இடத்தன(வாம்).

அகலம்: இக் குறள் பொய்ம்மைக்கு விலக்கு. வாய்மையின் இடத்தன‡ வாய்மையின் இடத்தில் வைக்கப்படத் தக்கவை. பொய்ம்மை பல திறத்தன வாகலான், அதனைப் பன்மைப் பொருளிற் கூறினர்.

கருத்து: புரை தீர்ந்த நன்மையைப் பயப்பின், பொய்ம்மையும் வாய்மை யாம்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன். (154)

பொருள்: உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் -(ஒருவன்) மனச் சான்றுக்குப் பொய்யாமல் ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - உலகத்திலுள்ளவர்கள் உள்ளத்துளெல்லாம் உளன் (ஆவன்).

அகலம்: உள்ளம் என்பது ஆகுபெயர், உள்ளச் சான்றுக்கு ஆயினமையால். உள்ளத்தால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு நான்காம் வேற்றுமைப் பொருள் தந்து நின்றமையால்.

கருத்து: பொய் கூறாதான் உலகத்தா ரெல்லாராலும் போற்றப் படுவான்.

மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை. (155)

பொருள்: மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) உள்ளத்தோடு பொருந்தி உண்மையைக் கூறின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை‡தவமும் தானமும் செய்பவருள் தலையானவன்.

அகலம்: பிந்திய ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது. தானமும் என்பது உம்மை கெட்டு நின்றது.

கருத்து: மனத்தோடு கூடி வாய்மை மொழிவோன் அகத் துறவியினும் சிறந்தவன்.

பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை
யயல்லா வறமுந் தரும். (156)

பொருள்: பொய்யாமை அன்ன புகழ் இல்லை - பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை ; பொய்யாமை எல்லா அறமும் தரும் - (அன்றியும்) பொய்யாமை எல்லா அறங்களையும் தரும்.

அகலம்: புகழ் என்பது ஆகுபெயர், அதன் காரணத்திற்கு ஆயினமையால். ஒருவன் வாய்மையைக் கைக்கொள்ளின், அவன் மறங்களை யயல்லாம் விட நேரும்; மறங்களை யயல்லாம் விடவே, அவன் அறங்களை யயல்லாம் புரிய நேரும். அது பற்றியே ‘பொய்யாமை எல்லா வறமுந் தரும்’ என்றார். மணக்குடவர் பாடம் ‘பொய்யாமை யயல்லா அறமும்’. மற்றைய உரையா சிரியர்கள் பாடம் ‘எய்யாமை யயல்லா வறமும்’. எய்யாமை என்பது எவ்வகைப் பொருத்தமான பொருளையும் தாராமையான், மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடமெனக் கொள்ளப்பட்டது.

கருத்து: வாய்மை கூறுதல் எல்லா அறங்களையும் புகழையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (157)

பொருள்: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - (ஒருவன்) பொய் யாமையைப் பொய்யாமல் ஆற்றின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று -மற்றை அறங்களைச் செய்யாமையைச் செய்யாமை நன்மை.

அகலம்: பொய்யாமையைப் பொய்யாமல் ஆற்றல் - வாய்மையைச் சிறிதும் மாற்றாமல் கூறுதல். செய்யாமையைச் செய்யாமை‡செய்தல். இரண்டு எதிர்மறைச் சொற்கள் சேர்ந்து ஓர் உடன்பாட்டுப் பொருளைத் தந்தன.

கருத்து: ஒருவன் வாய்மையைக் கூறின் மாத்திரமே,அவன் பிற அறங்களைச் செய்தலால் பயன் உண்டு.

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். (158)

பொருள்: புறம் தூய்மை நீரான் அமையும் - உடம்பினது தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் - உள்ளத்தினது தூய்மை வாய்மையால் அறியப்படும்.

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘நீரால்’. அகந் தூய்மை காட்சி யளவையான் அறியப்பட முடியாத தொன்றாகலான், அதனை வாய்மையால் அறிய லாகும் என்றார்.

கருத்து: வாய்மை அகத்தைத் தூயதாக்கும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (159)

பொருள்: சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கு அல்ல- சான்றோர்க்கு எல்லா ஒளிகளும் ஒளிகள் அல்ல; பொய்யா விளக்கே விளக்கு- பொய்யாமை (யால் வரும்) ஒளியே ஒளி.

அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. பொய்யாமையின் காரியமாகிய விளக்கைப் பொய்யா விளக்கு என்றார்.

கருத்து: பொய்யாமையாகிய விளக்கு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டும்.

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யயனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற. (160)

பொருள்: மெய்யா (க) யாம் கண்டவற்றுள் - உண்மையாக யாம் கண்டவற்றுள், வாய்மையின் நல்ல எனைத்து ஒன்றும் இல்லை - வாய்மையைப் போல நல்லவை எத்தன்மைத்தாய ஒன்றும் இல்லை.

அகலம்: ‘பிற’ அசை. மெய்யாக என்பது ஈறு கெட்டு நின்றது. இக் குறள் ‘ஒன்றாக நல்லது’ என்னும் தொடக்கத்துக் குறளுக்கு மாறு படாதோ என்னின், மாறு படாது. என்னை? இக் குறள் கொள்ள வேண்டிய அறங்களில் தலையாயதைக் கூறுகின்றது. அக் குறள் தள்ள வேண்டிய மறங்களில் தலையாயதைக் கூறுகின்றது.

கருத்து: வாய்மை கூறுதலைப் போன்ற நல்லொழுக்கம் வேறொன்றும் இல்லை.

No comments:

Post a Comment