Monday

துறவு

முப்பத்திரண்டாம் அதிகாரம் - துறவு
அஃதாவது, (அகப் புறப் பற்றுக்களை) விடுதல்.

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். (311)

பொருள்: யாதனின் யாதனின் நீங்கியான் - (ஒருவன்) எதினின்று எதினின்று நீங்கினானோ, அதனின் அதனின் நோதல் இலன் -அதனால் அதனால் துன்புறுதல் இலன்.

அகலம்: ஒரு பொருளினின்று நீங்கலாவது, அப் பொருளின் பற்றினை விடுதல். தாமத்தர் பாடம் ‘அதனி னிலை’. அதனின் அதனின் என்பன வேற்றுமை மயக்கம், ஐந்தாம் வேற்றுமை யுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால்.

கருத்து: ஒரு பொருளின் மீதுள்ள பற்றை விட்டால், அப் பொருளால் உண்டாகும் துன்பம் இல்லை.

வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல. (312)

பொருள்: துறந்த பின் ஈண்டு இயல் பால பல - (அகப்பற்றுப் புறப்பற்றுக் களை) விடுத்த பின் இவ்வுலகில் பொருந்தல் பகுதியன பல ; உண்டாக வேண்டின் துறக்க -(அவை) உண்டாக (ஒருவன்) விரும்பின் துறக்கக் கடவன்.

அகலம்: அகப்பற்று ‡யாக்கையின் பற்று, புறப்பற்று - பொருளின் பற்று. பொருந்தற் பகுதியன, பெருமை, பேரின்பம், முதலியன. தாமத்தர் பாடம் ‘துறந்த தற்பின்’.

கருத்து: துறவால் பல நன்மைகள் உண்டாம் ; ஒருவன் அவற்றை அடைய விரும்பின் துறக்கக் கடவன்.

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு. (313)

பொருள்: ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - (துறவு நெறி நிற்போர்) ஐம்பொறிகளின் புலங்களை வெல்லல் வேண்டும் ; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - (அதற்கு வழி) ஐம்பொறிகள் விரும்பியன எல்லாவற்றையும் ஒன்றாக விடல் வேண்டும்.

அகலம்: ஐம்பொறிகளாவன: - மெய், வாய்,கண், மூக்கு, செவி. அவற்றின் புலங்களாவன :- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஐந்தின்’.

கருத்து: பொறிகளை வெல்வதற்கு வழி புலங்களை விட்டு நீங்குதல்.

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்ந்து. (314)

பொருள்: நோன்பிற்கு ஒன்று(ம்) இன்மை இயல்பு ஆகும் - (துறவிகளின்) தவத்திற்கு ஒரு பொருட்பற்றும் இல்லாதிருத்தல் இயல்பு ஆகும்; உடைமை மற்றும் பெயர்ந்து மயல் ஆகும் - (யாதானும் ஒரு பொருட் பற்றினை) உடைமையால் துறவும் நீங்கி மயக்கம் உண்டாம்.

அகலம்: ஒன்றின் பற்றினை ஒன் றென்றார். மற்று என்பது துறவைக் குறித்து நின்றது. உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பெயர்த்து’. ‘மயல் ஆகும்’ என்று ஆசிரியர் கூறியிருத் தலான், ‘உடைமை’ என்பதை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு பொருளுரைக்க வேண்டியதாயிருக்கிறது. அவ்வாறு பொருளுரைக்குங்கால் ‘பெயர்ந்து’ என்பதே பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: ஒரு பொருட் பற்றும் இல்லாமை தவத்திற்கு இயல்பு.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை. (315)

பொருள்: பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை- பிறப்பினை ஒழித்தலைப் பொருந்தியவர்க்கு உடம்பின் பற்றும் மிகுதி, மற்றும் தொடர்ப்பாடு எவன் - வேறு பொருளையும் பற்றி நிற்றல் யாது காரணம்?

அகலம்: ‘கொல்’ அசை. ‘உடம்பு’ ஆகு பெயர்.

கருத்து: தவஞ் செய்வார்க்கு உடம்பின் பற்றே மிகை.

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும். (316)

பொருள்: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்- யான் எனது என்னும் மயக்கினை ஒழிப்பவன், வானோர்க்கு(ம்) உயர்ந்த உலகம் புகும் - தேவர்க்கும் எட்டாத வீட்டுலகின்கண் புகுவன்.

அகலம்: யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: ‘யான்’, ‘எனது’ நீத்தவர் வீடு பெறுவர்.

பற்றி விடா அ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (317)

பொருள்: பற்றினை பற்றி விடாதவர்க்கு - (அகப் புறப்) பற்றுக்களைப் பற்றிக் கொண்டு விடாதவரை, இடும்பைகள் பற்றி விடா - துன்பங்கள் பற்றிக்கொண்டு விடா.

அகலம்: ‘விடாதவர்க்கு’ என்பது வேற்றுமை மயக்கம், நான்காம் வேற்றுமை யுருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். அளபெடை இசை நிறைக்க வந்தது.

கருத்து: பற்றுக்களை விடாதவரைத் துன்பங்கள் விடா.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (318)

பொருள்: தீர துறந்தார் தலை பட்டார் - முற்றந் துறந்தார் கடவுளை அடைந்தார்; மற்றையவர் மயங்கி வலை பட்டார் - முற்றத் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையின்கண் சிக்கினார்.

அகலம்: தலை- தலைவன்‡ கடவுள். கடவுளை அடைந்தார்க்கு பிறப்பில்லை என்பது ஒருதலையாகலான், தலை என்பதற்குக் கடவுள் எனப் பொருள் உரைக்கப் பட்டது. தலைப்பட்டார் என்பதற்கு (வீட்டினை) அடைந்தார் என்று உரைப்பினும் அமையும்.

கருத்து: முற்றத் துறந்தார் வீட்டினை அடைந்தார்.

பற்றற்ற கண்ணே பிறப்பறு மற்று
நிலையாமை காணப் படும். (319)

பொருள்: பற்று அற்ற கண்ணே பிறப்பு அறும் - (அகப்புறப்) பற்று நீங்கிய விடத்தே பிறப்பு நீங்கும்; மற்று நிலையாமை (யும்) காணப்படும்‡பற்று நீங்காத விடத்து (பிறப்பு மாத்திரமன்று) இறப்பும் காணப்படும்.

அகலம்: நிலையாமையே இறப்பாகலான் இறப்பினை நிலையாமை என்றார். நிலையாமை என்பதற்குப் பிறப்பு மாறி மாறி வருதல் என்று உரைப்பாரும் உளர். ஏகாரம் உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இறந்தது தழீஇய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பிறப்பறுக்கும்’. பிறப்பறுக்கும் என்பதற்கு எழுவாயாக வருவிக்கும் சுட்டுப் பெயர் ‘கண்ணே’ என்ற பொருட் பொருத்த மற்ற சொல்லையே சுட்டு மாகலானும், பற்று அறாத இடத்தே நிலையாமை காணப்படும் என்று கூறியிருத்தலானும், ‘பிறப்பறும்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: பற்று இல்லார்க்குப் பிறப்பு இல்லை.

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (320)

பொருள்: (பற்று கொளற்கு) பற்று அற்றான் பற்றினை பற்றுக‡ (வேண்டிய) பொருள்களை அடைவதற்குப் பற்று அற்று நிற்பவனது பற்றுக் கோட்டினைப் பற்றுக ; பற்று விடற்கு(ம்) அப் பற்றை(யே) பற்றுக - உலகப் பொருள்களின் பற்றை விடுவதற்கும் அப் பற்றுக்கோட்டினையே பற்றுக.

அகலம்: பற்றுக் கோடு -பற்றும் கொம்பு. அப் பற்றையே என்பதன் ஏகாரமும், விடற்கும் என்பதன் உம்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. ‘அப் பற்றை’ என்றமையால், ‘பற்றுக் கொளற்கு’ என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது. துறவதிகாரத்தின்கண்ணே பொருள்களைக் கொள்ளுதலைக் கூறுவானேன் என்னின், பொருளில் லாதார் துறவார், துறத்தற்கு அவர்பால் ஒன்றும் இன்மையான். பொருள் இல்லாதார் துறக்க வேண்டின், அவர் துறப்பதற்குரிய பொருள்களை முன்னர்க் கொள்ளல் வேண்டும். பற்று என்னும் சொல் மீண்டும் மீண்டும் வருதலால் இது சொற்பொருட்பின் வரு நிலை யணி.

கருத்து: பொருட்பற்றை விடுதற்கும் பொருளைக் கொள்ளுதற்கும் கடவுளைப் பற்றுக.

No comments:

Post a Comment