Sunday

புகழ்

இருபத்தொன்றாம் அதிகாரம் - புகழ்
அஃதாவது, (ஒருவனை அறிவுடையார்) உயர்த்துக் கூறும் மொழி.

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு. (201)

பொருள்: ஈதல் இசை பட வாழ்தல்-(ஒருவன்) ஈதலால் புகழ் உண்டாகும்படி வாழக் கடவன்; அஃது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - புகழ் அல்லாமல் (மனித) உயிர்க்கு ஊதியம் (வேறு) இல்லை.

அகலம்: ஈதல் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது. ஊதியம் - இலாபம். தருமர் பாடம் ‘அவையல்ல’.

கருத்து: இல்லார்க்கு ஈந்து புகழ் பெறுதல் எய்தற்கரிய இம்மைப் பேறு.

உரைப்பா ருரைப்பவை யயல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ். (202)

பொருள்: உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்வோர் சொல்வன வெல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழே- இரப்பவர்க்கு (அவர் விரும்பியது) ஒன்றைக் கொடுப்பவர் மேல் நிற்கும் புகழ்களே.

அகலம்: பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. தன்னினம் கோடல் என்னும் உத்தியால், உரைப்பார் என்பது பாடுவோரையும் அடக்கி நின்றது.

கருத்து: ஈவோர் எல்லாராலும் புகழப்படுவர்.

ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில். (203)

பொருள்: உலகத்து ஒன்றா(க) உயர்ந்த புகழ் அல்லால் - உலகத்தின் கண் ஒப்பற்றதாக உயர்ந்த புகழ் அல்லாமல், பொன்றாது நிற்பது ஒன்று இல் - (என்றும்) அழியாது நிற்பது (வேறு) ஒன்று இல்லை.

அகலம்: ஒன்றாக என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. ஒருவன் பொன்றுங்கால், அவன் புகழ் பொன்றாது நிற்கும் என்றார். ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ - புறநானூறு.

கருத்து: இவ் வுலகத்தின்கண் என்றும் பொன்றாது நிற்பது ஒப்பற்று உயர்ந்த புகழே.

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு. (204)

பொருள்: நிலவரை நீள் புகழ் ஆற்றின் - நிலவுலகின் அளவு (வரையில்) நீண்டு நிற்கும் புகழை (ஒருவன்) செய்யின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது‡ தெய்வ உலகத்தார் புலவரைப் போற்றார்.

அகலம்: நீள் என்பது வினைத் தொகை. உலகு என்பது ஆகு பெயர், உலகினர்க்கு ஆயினமையால். உலகு என்றமையால் அதற்கு ஏற்ப அதன் பயனிலையைப் போற்றாது என்று கூறினார். புகழ் செய்தோரைப் பாடிய புலவரைப் போற்றாமல் அவர் பாடிய பாட்டுடைத் தலைவரையே தேவர் போற்றுவர் என்றவாறு. இதனால், புலவர் தேவரால் போற்றப்படுதற் குரிய ரென்பது பெற்றாம்.

கருத்து: புகழ் செய்தாரைத் தேவரும் போற்றுவர்.

நத்தம்போர் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. (205)

பொருள்: நத்தம் போர் கேடும் - ஆக்கத்தைப் போர்த்த கேடும் உள்ளது ஆகும் சாக்காடும் -(என்றும்) உள்ளது ஆகும் சாவும், வித்தகர்க்கு அல்லால் (ஏனையோர்க்கு) அரிது -அறிஞர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு (ச் செய்தல்) இயலாது.

அகலம்: ஈகை தோற்ற மாத்திரையில் பொருட் கேட்டையும், உண்மையில் பொரு ளாக்கத்தையும் நல்குவதால், அதனை ‘நத்தம் போர் கேடு’ என்றார். பிறர் நன்மைக்காக உயிரை வழங்குதல் தோற்ற மாத்திரையில் சாவையும் உண்மையில் (புகழுடம்போடு கூடி) என்றும் உள்ளதாம் தன்மையையும் நல்குவதால் அதனை (‘உளதாகும் சாக்காடு’) என்றார். ‘உள்ளதாகும்’ என்பது ‘ள’கர வொற்றுக் கெட்டு நின்றது. ‘போர்’ என்பது வினைத்தொகை. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நத்தம்போற்’. இக் குறளின் மூன்றாஞ் சீரின் முதற் சொல்லாகிய ‘உளது’ என்பது ‘ஆகும்’என்னும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல் போல, இக் குறளின் முதற் சீரின் முதற் சொல்லாகிய ‘நத்தம்’ என்பதும் ‘ஆம்’ அல்லது ‘போர்’ என்பது போன்ற பொருள் தரும் ஒரு சொல்லோடு சேர்ந்து நிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததா யிருக்க, அச் சொல்லை விடுத்துப் பொருள் கோளுக்கு வேண்டாத ‘போல்’ என்னும் உரையசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகலின், ‘நத்தம்போற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையயனக் கொள்க. ‘மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கண் மாயா, தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய், வீய்ந்தவ ரென்பர் வீய்ந்தவ ரேனும், ஈய்ந்தவ ரல்ல திருந்தவர் யாரே’ - கம்ப ராமாயணம்.

கருத்து: பிறருக்கு ஈவோரும் பிறருக்காக உயிர் வழங்குவோரும் பெரியர்.

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றிலிற் றோன்றாமை நன்று. (206)

பொருள்: தோன்றின் புகழொடு தோன்றுக - (ஒருவன் பல்லார்முன்) தோன்றில் புகழுடன் தோன்றுக; அஃது இல்லார் தோன்றலின் தோன்றாமை நன்று- புகழ் இல்லாதார் (பல்லார் முன்) தோன்றுதலினும் தோன்றா திருத்தல் நன்மை.

அகலம்: ‘தோன்றல்’ என்பதற்கு ‘பிறத்தல்’ என்று பொருள் உரைப்பாரும் உளர். பிறத்தலும் பிறவாதிருத்தலும் ஒருவன் விருப்பப்படி நிகழ்வன அல்ல ; அவன் முன் வினைப்படியே நிகழ்வன. ஆகலான், அவ்வுரை பொருந்தாது.

கருத்து: புகழ் செய்யாதார் தம் வீட்டை விட்டு வெளியேறாமை நன்று.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன். (207)

பொருள்: புகழ் பட வாழாதார் - புகழ் உண்டாகும்படியாக வாழாதவர், தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்‡ தம்மை நோவாதவராய்த் தம்மை இகழ்வாரை நோவது யாது காரணத்தால்?

கருத்து: புகழ் செய்யாதார் தம்மை இகழ்வாரை நோவலாகாது.

வசையயன்ப வையத்தார்க் கெல்லா மிசையயன்னு
மெச்சம் பெறாஅ விடின். (208)

பொருள்: இசை என்னும் எச்சம் பெறா(து) விடின் ‡புகழ் என்னும் மகவைப் பெறாது விடின், வையத்தார்க்கு எல்லாம் வசை - (அஃது) உலகத்தார்க் கெல்லாம் வசை.

அகலம்: தான் இறந்த பின்னர்த் தன் பெயரைத் தன் மகவு போல் நிறுத்துவ தாகலான், புகழை ‘எச்சம்’ என்றார். மகவைப் பெறாதாரை உலகு இகழாது. ஆனால், புகழைப் பெறாதாரை உலகம் இகழும். எச்சம்-மகவு. வசை- இகழ்.‘என்ப’ அசை. அளபெடை இசை நிறைக்க வந்தது. ‘பெறாது’ ஈறு கெட்டது.

கருத்து: புகழ் பெறாதானை உலகத்தார் இகழ்வர்.

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (209)

பொருள்: இசை இ(ல்)லா(த) யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைத் தாங்கிய நிலத்தின்கண், வசை இ(ல்)லா(த) வண் பயன் குன்றும் - வசையில்லாத வளப்பமான விளைவு குறையும்.

அகலம்: இல்லாத என்பது இரண்டிடத்தும் லகர வொற்றும் ஈறும் கெட்டு நின்றன. நச்சர் பாடம் ‘வண்பயம்’.

கருத்து: புகழ் செய்யாதான் நாட்டில் விளைவு குன்றும்.

வசையயாழிய வாழ்வாரே வாழ்வா ரிசையயாழிய
வாழ்வாரே வாழா தவர். (210)

பொருள்: வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் ‡ வசை நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழ்பவர் ; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் ‡புகழ் நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழாதவர்.

அகலம்: நச்சர் பாடம் ‘வாழ்வானே வாழ்வான்’, ‘வாழ்வானே வாழா தவன்’.

கருத்து: புகழ் இல்லாதார் உயிர் இல்லாதாரை ஒப்பர்.

இல்லறவியல் முற்றிற்று.

No comments:

Post a Comment