Friday

பிறனில் விழையாமை

பன்னிரண்டாம் அதிகாரம் - பிறனில் விழையாமை.

அஃதாவது, பிறனது மனைவியைக் காதலியாமை. ‘இல்’ என்பது ஆகுபெயர், அதன்கண் வாழும் இல்லாளுக்கு ஆயினமையால்.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில். (111)

பொருள்: பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுடைய பொருளாகிய மனையாளைக் காதலித்து நடக்கும் மடமை, ஞாலத்து அற(மோ) பொரு(ளோ) கண்டார்கண்
இல் - உலகத்தில் அற நூலை யாவது பொருள் நூலையாவது அறிந்தாரிடத்து இல்லை.

அகலம்: ஒருவன் மனைவி அவனுடைய பொருளானபடியால், அவளைப் ‘பிறன் பொருள்’ என்றார். அறம், பொருள் என்பன ஆகுபெயர்கள், அவற்றைக் கூறும் நூல்களுக்கு ஆயினமையால். ஓகாரம் இரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.

கருத்து: பிறன் மனையாளைக் காதலித்தல் களவும், பாவமுமாம்.

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில். (112)

பொருள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் - மறத்தின்கண் நின்றவர் களுள் எல்லாம், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் (வீட்டுப்) புறவாயி லின்கண் நின்றவரைப் போல மடையர் இல்லை.

அகலம்: கடை - புறம். அறத்திற்குப் புறம் மற மாதலின், அதனை ‘அறன்கடை’ என்றார். பிறன் மனையாளிடம் செல்பவர் அவன் வீட்டு முன்வாயில் வழியாகச் செல்லாமல் ஒளிந்து பின் வாயில் வழியாகச் செல்வது வழக்காகலின், ‘பிறன்கடை நின்றார்’ என்றார்.

கருத்து: பிறன் மனையாளைக் காதலிப்பவர் மற்றைய பாவங்களைச் செய்பவரினும் பெரு மடையர்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார். (113)

பொருள்: மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் -(தம்மை) மிகத் தெளிந்து கொண்டவருடைய இல்லாளிடத்தே தீமை புரிந்து நடப்பவர், விளிந் தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறு அல்லர்.

அகலம்: தெளிந்தார் - (தம்மை நல்லொழுக்க முடையவரென்று தமது நண்பராகவோ தொழிலாளராகவோ) தெளிந்து கொண்டவர்.

கருத்து: தெளிந்தாருடைய இல்லாளிடத்துத் தீமை புரிபவர் செத்தா ராவர்.

எனைத்துணைய னாயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகில். (114)

பொருள்: தினை துணையும் தேரான் பிறன் இல் புகில் - (ஒருவன்) சிறிது அளவும் ஆராயாதவனாய்ப் பிறனுடைய இல்லின்கண் நுழையின், எனை துணையன் ஆயினும் என் ஆம் -எவ்வளவு பெருமை யுடையவ னானாலும் யாது பயன் ஆம்? (ஒரு பயனும் இல்லை).

அகலம்: தேரான் - (பிறன் இல்லின்கண் தீமை புரியச் செல்வதனால் தனக்கு உண்டாகும் கேடுகளை) ஆராயாதவனாய். மணக்குடவர் பாடம் ‘எனைத் துணை யனாயினும் ’, ‘புகில்’ . முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘எனைத் துணைய ராயினும்’, ‘புகல்’. எனைத் துணையனாயினும், என்பது தேரான் என்பதற்கு ஒப்ப ஒருமையாயிருத்தலானும், ‘புகில்’ என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், அவையே ஆசிரியர் பாடங்கள் எனக் கொள்ளப் பட்டன.

கருத்து: பிறன் மனையாள்பாற் செல்பவன் தனது பெருமையை யயல்லாம் இழப்பன்.

எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (115)

பொருள்: எளிது என இல் இறப்பான் - (பிறனது இல்லின்கண் செல்லுதல்) எளிது என்று கருதி (ப்பிறன்) இல்லினுள் செல்பவன், எ ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும் - எஞ்ஞான்றும் அழியாது நிற்கும் பழியை அடைவான்.

கருத்து: பிறன் மனையாள்பாற் செல்பவன் அழியாத பழியை அடைவன்.

பகைபாவ மச்சம் பழியயன நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண். (116)

பொருள்: பகை பாவம் அச்சம் பழி என நான்கும் - பகைமை பாவம் பழி பயம் என்று சொல்லப்பட்ட நான்கும், இல் இறப்பான்கண் இகவா ஆம் -பிறனது இல்லின்கண் செல்பவன் இடத்து (நின்று) நீங்கா வாம்.

அகலம்: ‘அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும், பிறன்றார நச்சுவார்ச் சேரா - பிறன்றார, நச்சுவார்ச் சேரும் பகை பழி பாவமென், றச்சத்தோ டிந்நாற் பொருள்’ - நாலடியார். ‘இல்லிறப்பான்கண்’ என்பது வேற்றுமை மயக்கம், ஏழாம் வேற்றுமை யுருபு ஐந்தாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையான்.

கருத்து: பிறன் மனையாள்பாற் செல்பவனை விட்டுப் பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் நீங்கா.

அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (117)

பொருள்: பிறன் இயலாள் பெண்மை நயவாதவனே - பிறனது இயல்புக்குத் தக்கபடி ஒழுகுகின்றவளது பெண்மையினை விரும் பாதவனே, அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறத்தின் இயல்போடு கூடி இல்வாழ்பவன் என்று சிறப்பித்து (அறிவுடையோரால்) சொல்லப்படுவான்.

அகலம்: ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. பிறன் இயல்புக்குத் தக்கபடி ஒழுகக் கடமைப் பட்டவளாதலால், பிறன் இயலாள் என்றார். பெண்மை - பெண்ணோடு கூடி நுகரும் இன்பம். ‘ஆன்’ என்பது ‘ஓடு’ என்னும் உருபுப் பொருளைத் தந்து நின்றது.

கருத்து: பிறன் மனையாளைக் காதலியாதவன் அற நெறியில் இல் வாழ்க்கையை நடாத்துபவன்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு. (118)

பொருள்: பிறன் மனை நோக்காத பேராண்மை - பிறனது மனையாளைத் (தீய எண்ணத்துடன்) பாராத பெரிய ஆண்மைத் தன்மை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கும் - சால்புடையார்க்கு அறம் மாத்திரமா? நிறைந்த ஒழுக்கமும் ஆம்.

அகலம்: ஒழுக்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மனை’ ஆகுபெயர், மனையாளுக்கு ஆயினமையால். ‘பிறன்மனை பின்னோக்காப் பீடினிது’ - இனியவை நாற்பது.

கருத்து: பிறன் மனையாளைக் காதலியாமை அறமும் ஒழுக்கமுமாம்.

நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியா டோடோயா தார். (119)

பொருள்: நாமம் நீர் வைப்பில் நலத்துக்கு உரியார் யார் என்னின் - அச்சத்தைத் தரும் கடல் சூழ்ந்த உலகின்கண் நன்மைக்கு உரியவர் யார் என்னின், பிறற்கு உரியாள் தோள் தோயாதார் -பிறனுக்கு உரியவளது தோளினைச் சேராதவர்.

அகலம்: செய்யுள் விகாரத்தால் ‘நலத்துக்கு’ என்பது ‘அத்து’ச் சாரியை கெட்டும், ‘நாம்’ என்பது ‘அம்’ சாரியை பெற்றும் நின்றன. நாம் - அச்சம்.

கருத்து: பிறன் மனையாளைக் காதலியாதவர் எல்லா நன்மைகளையும் பெறுதற்குரியர்.

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (120)

பொருள்: அறன் வரையான் அல்ல செய்யினும் - (ஒருவன்) அறத்தைக் கைக்கொள்ளாதவனாய் மறங்களைச் செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறனுடைய வரைக்கண் நின் றொழுகுவாளது பெண்மை யினை விரும்பாமை நன்மை.

அகலம்: பிறன் வரையும் வரைக்குள் நின்றொழுகுவாளைப் பிறன் வரையாள் என்றார். ‘செய்யினும்’ என்பது யகர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து: ஒருவன் அறத்தைச் செய்யாது மறத்தையே செய்யினும், பிறன் மனையாளைக் காதலியாதிருத்தல் நன்மை.

No comments:

Post a Comment