Sunday

அழுக்கறாமை

பதினான்காம் அதிகாரம் - அழுக்கறாமை

அஃதாவது, பொறாமை கொள்ளாமை.
தருமர் பாடம் அழுக்கறாமை. மணக்குடவர், நச்சர், பரிமேலழகர் பாடம் ‘அழுக்காறாமை’. தாமத்தர் பாடம் ‘அழுக்காறுறாமை’.

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு. (131)

பொருள்: தன் நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பு - தன் உள்ளத்தின்கண் பொறாமை இல்லாத தன்மையை, ஒருவன் ஒழுக்கு ஆறா(க) கொள்க - ஒருவன் ஒழுக்கத்தின் நெறியாகக் கொள்க.

அகலம்: பொறாமை -பிறர் ஆக்கங் கண்டு புழுங்குதல்.

கருத்து: பொறாமை யில்லாமை ஒழுக்கத்தின் நெறி.

விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின். (132)

பொருள்: யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - எவரிடத்தும் (ஆக்கங் கண்டு) மனம் மகிழ்தலைப் பெற்றால், விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - (ஒருவன் பெறும்) விழுமிய பேறுகளுள் அதனை ஒப்பது இல்லை.

அகலம்: விழுமிய - சிறந்த. அதனை - அப்பெறுதலை - அப் பேற்றை. அன்மை என்பது இன்மையை உணர்த்தாது, மற்றொரு பொருளாதலை உணர்த்தும் ஒரு சொல். அழுக்காறு - பிறர் ஆக்கங் கண்டு மனம் புழுங்குதல். அழுக்காறன்மை அல்லது அழுக்காற்றின் அன்மை ‡பிறர் ஆக்கங் கண்டு மனம் மகிழ்தல். பிறன் ஆக்கங்கண்டு மனம் மகிழ வேண்டு மென்பது ‘பிறனாக்கம் பேணா தழுக்கறுப்பான்’ என்பதனானும் விளங்கும்.

கருத்து: பிறர் ஆக்கங் கண்டு மனம் மகிழ்தல் ஓர் ஒப்பற்ற பேறு.

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (133)

பொருள்: பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வத்தை (க் கண்டு) மகிழாமல் பொறாமை கொள்பவன், அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - அறமும் பொருளும் வேண்டாதவன் என்று (பெரியோரால்) சொல்லப்படுவான்.

அகலம்: அழுக்கறு என்பது பகுதி. அழுக்கறு - பொறாமை கொள். ‘பேணாது’ என்பது ஈண்டு மகிழாமல் என்னும் பொருட்டு.

கருத்து: அழுக்காறு உடையவனுக்கு அறமும் பொருளும் இல்லை.

அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து. (134)

பொருள்: இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - தப்பு நெறியில் துன்பம் உண்டாதலைத் தெரிந்து, அழுக்காற்றின் அல்லவை செய்யார் (அறிவுடையார்) - பொறாமையால் மறங்களைச் செய்யார் அறிவு டையார்.

அகலம்: முதல் ‘இன்’, ‘ஆன்’ உருபின் பொருள் தந்து நின்றது. பாக்கு என்பது தொழிற் பெயர் விகுதி.

கருத்து: அழுக்காறு பல பாவங்களுக்கும் துன்பங்களுக்கும் ஏதுவாகும்.

அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (135)

பொருள்: ஒன்னார் வழுக்கியும் - பகைவர் (கேடு செய்யத்) தவறியும், அழுக்காறு உடையார்க்கு கேடு ஈன்பது -பொறாமை யுடையவர்க்குக் கேடு பயப்பதற்கு, அதுவே சாலும் -பொறாமையே போதும்.

அகலம்: பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘கேடீன்பது’ நான்காம் வேற்றுமைத் தொகை.

கருத்து: அழுக்காறு உடையானை அழித்தற்கு வேறு பகை வேண்டா; அதுவே போதும்.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (136)

பொருள்: கொடுப்பது அழுக்கறுப்பான்-(ஒருவனுக்கு மற்றொருவன்) கொடுப்பதன்கண் பொறாமை செய்பவன், சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் - சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவன்.

அகலம்: கொடுப்பது அழுக்கறுப்பானுடைய சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் என உரைப்பாரும் உளர்.அவ்வாறு உரைத்தல் ஒவ்வொருவனும் செய்த வினைகளின் பயன்கள் அவனவனையே சேரும் என்ற வடமொழி தென்மொழி நூல் வழக்கிற்கு முரண்படும். அதனால் அவ்வுரை பொருந்தாது. உடுப்பது ‡ உடுக்கும் துணி. உண்பது ‡ உண்ணும் உணவு. சுற்றம் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. அளபெடை இரண்டும் இன்னிசைக்கண் வந்தன.

கருத்து: கொடுப்பது அழுக்கறுப்பான் தன் ஆக்கத்திற்கு ஆதாரமான சுற்றத்தையும், தன் உடையையும் உணவையும் இழப்பன்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும். (137)

பொருள்: அவ்வித்து அழுக்காறு உடையானை‡ (உள்ளத்தைக்) கோடுவித்துப் பொறாமையை உடையவனை, செய்யவள் தவ்வையை காட்டி விடும் - திருமகள் (தன்) தமக்கைக்குக் காட்டி விடுவள்.

அகலம்: தவ்வையை என்பது வேற்றுமை மயக்கம், இரண்டாம் வேற்றுமை யுருபு நான்காம் வேற்றுமைப் பொருள் தந்து நின்றமையால்.

கருத்து: பொறாமையை உடையவன் வறுமையை அடைவன்.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும். (138)

பொருள்: அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, திரு செற்று தீயுழி உய்த்து விடும் - செல்வத்தைக் கெடுத்து நரகத்தின்கண் புகுத்தி விடும்.
அகலம்: தருமர் பாடம் ‘பாவம்’.

கருத்து: பொறாமை செல்வத்தைக் கெடுத்து நரகத்திற் புகுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கக் கெடும். (139)

பொருள்: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் - கோடிய உள்ளத்தானது செல்வமும் நேரிய உள்ளத்தானது வறுமையும், நினைக்க கெடும் - (ஒருவன்) நினைக்கும் (கால) அளவில் அழியும்.

அகலம்: மணக்குடவர் பாடம் ‘நினைக்கக் கெடும்’. மற்றை நால்வர் பாடம் ‘நினைக்கப்படும்’. ‘பொல்லாதவர் நன்மை பொருந்துவதும், நல்லார் மிகவன் றுயர் நண்ணுவதும், தொல்லார் வினையால் வரினுந் தொடர்பாய், நில்லா தெனும்வாய் மொழிநிச் சயமே’ - பிரபோத சந்திரோதயம்.

கருத்து: இவ் விரண்டும் வெகு விரைவில் நீங்குவன.

அழுக்காற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். (140)

பொருள்: அழுக்காற்று அகன்றாரும் இல்லை - பொறாமையின்கண் (நின்று) செல்வ ராயினாரும் இல்லை. அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - பொறாமை இல்லாதாருள் செல்வத்தின் நீங்கினாரும் இல்லை.

அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘அழுக்காற் றகன்றாரும்’. பரிமேலழகர் பாடம் ‘அழுக்கற் றகன்றாரும்’. நச்சர் பாடம் ‘அழுக்கற் றகன்றதும்’, ‘பெருக்கத்திற் றீர்ந்ததும்’. இல்லார் என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை.

கருத்து: அழுக்காறு வறுமையையும், அழுக்காறின்மை செல்வத்தையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment