Sunday

வெஃகாமை

இருபத்தாறாம் அதிகாரம் - வெஃகாமை.
அஃதாவது, பிறரது பொருளை விரும்பாமை.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றுங்
குற்றமு மாங்கே தரும். (251)

பொருள்: நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் -(ஒருவன்) நடுவு நிலைமை இல்லாமல் (பிறரது) நல்ல பொருளை (க் கவர) விரும்பின், (அது) குடி பொன்றும் குற்றமும் தரும் - அது தனது குடும்பத்தோடு அழிவதற்கு ஏதுவாகும் குற்றமும் தரும்.

அகலம்: குற்றமும் என்பதன் உம்மை இழிவு சிறப்பு. குடி பொன்றுவதற்கு ஏதுவாய குற்றத்தைக் குடிபொன்றும் குற்றம் என்றார். ‘ஆங்கு’, ‘ஏ’ என்பன அசைகள். தருமர் பாடம் ‘நடுவன்றி’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘குடிபொன்றி’. இப் பாடத்தை ஆசிரியர் பாடமாகக் கொண்டு, பொன்றி என்னும் தன்வினை பொன்றுவித்து என்னும் பிறவினைப் பொருள் தந்து நின்றது என்பர் தொல்காப்பியர் சூத்திர விருத்திகாரர்.

கருத்து: பிறர் பொருளைக் கவர விரும்புவோன் தன் குடும்பத்தோடு அழிவன்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவின்மை நாணு பவர். (252)

பொருள்: நடுவு இன்மை நாணுபவர் - நடுவு நிலைமையின்மைக்கு அஞ்சு கின்றவர், படு பயன் வெஃகி பழி படுவ செய்யார் - அழியும் பயனை விரும்பிப் பழியின்கண் படுஞ் செயல்களைச் செய்யார்.

அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் நடுவன்மை. முந்திய குறளில் ‘நடுவின்றி’ என ஆசிரியர் கூறி யிருத்தலின், ‘நடுவின்மை’ என்பதே அவர் பாடம் எனக் கொள்ளப் பட்டது.

கருத்து: நடுவு நிலைமையைக் கைக் கொண்டவர் பிறரது பொருளை வெஃகார்.

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (253)

பொருள்: சிறு இன்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - (பொருளால் வரும்) சிற்றின்பத்தை அவாவி அறம் அல்லாத செயல்களைச் செய்யார், மற்று இன்பம் வேண்டுபவர் -பேரின்பத்தை அவாவுகின்றவர்.

அகலம்: அறம் அல்லாத செயல்கள் -மறங்கள். சிறிது நேரத்தில் கழியும் இன்பத்தைச் சிற்றின்பம் என்றார். சிறு+இன்பம்=சிற்றின்பம். ஏகாரம் ஈற்றசை. தருமர் பாடம் ‘சிற்றின்பம் வேண்டி’.

கருத்து: சிற்றின்பங்களை வெஃகி மறங்கள் செய்யார் பேரின்பம் வேண்டு பவர்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (254)

பொருள்: புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் -ஐம் புலங்களையும் வென்ற புன்மை இல்லாத மெய்யறிவுடையார், இலம் என்று வெஃகுதல் செய்யார்-(யாம் பொருள்) இல்லேம் என்று (பிறர் பொருளை) விரும்புதல் செய்யார்.

அகலம்: ஐம்புலங்களாவன -சுவை, ஒளி,ஊறு, ஓசை, நாற்றம்.

கருத்து: வறுமை காரணமாகப் பிறர் பொருளை வெஃகார் மெய்யறி வுடையார்.

அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (255)

பொருள்: வெஃகி யார்மாட்டும் வெறிய செய்யின் -பொருளை விரும்பி எவரிடத்தும் வெறிச் செயல்களைச் செய்யின், அஃகி அகன்ற அறிவு என் ஆம் - நுண்ணியதாய் (நூல்களிற் சென்று) விரிந்த அறிவு யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையும் செய்யாது).

அகலம்: வெறிச் செயல்கள்- மூர்க்கச் செயல்கள். தருமர் பாடம் வெரிய செயின்.

கருத்து: பிறர் பொருளை வெஃகி வெறிச் செயல்களைச் செய்தல் அறி வில்லாதார் செயல்.

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (256)

பொருள்: அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் -அருளை (அடைய) விரும்பி (அதற் குரிய துறவு) நெறியின்கண் நின்றவன், பொருள் வெஃகி பொல்லாத சூழ கெடும் -(பிறன்) பொருளை (அடைய) விரும்பித் தீய வினைகளை எண்ணக் கெடுவான்.

கருத்து: துறவி பிறன் பொருளை வெஃகின் அழிவன்.

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (257)

பொருள்: வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -(ஒருவன் பிறன் பொருளை) விரும்பி (அதனால்) ஆகும் செல்வத்தை விரும்பற்க, விளைவயின் ஆம் பயன் மாண்டற்கு அரிது -(வெஃகல்) விளையும் இடத்து உண்டாகும் பயன் மாட்சிமைப் படுதற்கு அரியது (ஆகலான்).

அகலம்: மாட்சிமைப் படுதற்கு அரியது -பெருமைப்படுதற்கு முடியாதது.

கருத்து: பிறன் பொருளைக் கவர விரும்புதல் பின்னர்ச் சிறுமையைத் தரும்.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (258)

பொருள்: செல்வம் அஃகாமைக்கு (வழி) யாது என்னின் - செல்வம் சுருங்காமைக்கு வழி யாது என்றால், பிறன் கை பொருள் வெஃகாமை வேண்டும் -பிறனது கைப் பொருளைக் கவர விரும்பாதிருத்தல் வேண்டும்.

அகலம்: செல்வத்திற்கு என்பதி லுள்ள நான்காம் வேற்றுமை யுருபைப் பிரித்து, அஃகாமை என்பதனுடன் சேர்த்துப் பொருள் உரைக்கப்பட்டது. வழி என்பது அவாய் நிலையான் வந்தது.

கருத்து: பிறன் பொருளை வெஃகாதான் செல்வம் மேன்மேலும் வளரும்.

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு. (259)

பொருள்: அறன் அறிந்து வெஃகா (த) அறிவுடையார்‡அற நூலை அறிந்து (பிறன் பொருளை) விரும்பாத அறிவுடையவரை, திறன் அறிந்து திரு சேரும்- (அவர்) செவ்வி தெரிந்து திருமகள் சேர்வள்.

அகலம்: செவ்வி -சமயம். ஆங்கு, ஏ என்பன அசைகள்.

கருத்து: பிறன் பொருளை வெஃகாரைத் திருமகள் சேர்வள்.

இறலீனு மெண்ணாது வெஃகல் விறலீனும்
வேண்டாமை யயன்னுஞ் செருக்கு. (260)

பொருள்: எண்ணாது வெஃகல் இறல் ஈனும் - (பின் விளையும் பயனை) எண்ணாமல் (பிறன் பொருளைக்) கவர விரும்புதல் அழிவைக் கொடுக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் -(பிறன் பொருளை ) விரும்பாமை என்னும் செருக்கு வெற்றியைக் கொடுக்கும்.

அகலம்: தருமர் பாடம் ‘இறலீனு மின்னாத’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வெஃகின்’. வெஃகின் என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘அது’ என்னும் தோன்றா எழுவாயை வருவிக்க வேண்டிய திருத்தலானும், ‘வேண்டாமை யயன்னுஞ் செருக்கு விறலீனும்’ என்று கூறியிருத்தல் போல ‘வெஃகல் இறலீனும்’ என்று கூறுதலே பொருத்த மாகலானும், ‘வெஃகல்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: பிறன் பொருளை வெஃகுதல் அழிவைத் தரும். வெஃகாமை வெற்றியைத் தரும்.

No comments:

Post a Comment