Friday

செய்ந்நன்றி யறிதல்

எட்டாம் அதிகாரம் - செய்ந்நன்றி யறிதல்

அஃதாவது, (தமக்குப் பிறர்) செய்த நன்றியை உணர்தல்.

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது. (71)

பொருள்: செய்யாமல் செய்த உதவிக்கு ‡ (பிறர்க்குத் தாம் ஓர் உதவியும்) செய்யாமலிருக்க த் தமக்குப் பிறர்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - பூவுலகமும் வானுலகமும் சமமாதல் இன்று.

கருத்து: தமது உதவியை முன் பெறாதார் தமக்குச் செய்த உதவி ஒப்பற்றது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (72)

பொருள்: காலத்தினால் செய்த நன்றி - (ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிறன்) செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாண பெரிது - (செயலால்) சிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது.

அகலம்: காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். ‘என்னினும்’ என்பது ‘ன’கர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து : சமயத்திற் செய்த உதவியும் ஒப்பற்றது.

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது. (73)

பொருள்: பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - (தாம் செய்யும் உதவிக்கு யாது) பயன் (தமக்கு வரும் என்று) ஆராயாதவராய் (ப் பிறர் தனக்குச்) செய்த உதவியின் நன்மையைச் சீர் தூக்கிப் பார்ப்பின், நன்மை கடலின் பெரிது- அந் நன்மை கடலினும் பெரிது.

அகலம்: தாமத்தர் பாடம் ‘பயன் தூக்கா செய்த’.

கருத்து: கைம்மாறு கருதாது செய்த உதவியும் ஒப்பற்றது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். (74)

பொருள்: தினை துணை நன்றி செய்யினும் - (தமக்குப் பிறர்) சிறிய அளவு உதவி செய்யினும், பயன் தெரிவார் பனை துணையா(க) கொள்வர் - (உதவியின்) பயனை அறிபவர் (அதனைப் )பெரிய அளவினதாகக் கருதுவர்.

அகலம்: ‘தினைத் துணை’, ‘பனைத் துணை’ என்பன மிக மிகச் சிறிய அளவையும் மிக மிகப் பெரிய அளவையும் குறிப்பதற்காகத் தமிழ் நூலார் வழங்கும் சொற்கள். ‘செய்யின்’ என்பதும், ‘துணையாக’ என்பதும் செய்யுள் விகாரத்தால் முறையே ‘ய’கர வொற்றும், ‘க’கரமும் கெட்டு நின்றன. ‘தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டாற், பனை யனைத்தா வுள்ளுவர் சான்றோர்’ என்றார் நாலடியார்.

கருத்து: செய்த உதவி அளவால் சிறிய தாயினும் பயனால் பெரிய தாம்.

உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (75)

பொருள்: உதவி உதவி வரைத்து அன்று - உதவியின் பயன் (செய்யப்பட்ட) உதவியின் அளவினது அன்று; உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து - அவ்வுதவி செய்யப்பட்டாரது பெருமையின் அளவிற்று.

அகலம்: ‘செய்யப்பட்டார்’ என்பது செய்யுள் விகாரத்தால் யகர வொற்றுக் கெட்டு நின்றது. பெருமையாவது கல்வி, அறிவு, ஒழுக்கங்களின் மேம்பாடு. இரண்டாம் ‘உதவி’ ஆகுபெயர், உதவியின் பயனுக்கு ஆயினமையால். ‘உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி, யிறப்ப நிழற்பயந்தாஅங்‡ கறப்பயனுந், தான் சிறிதாயினுந் தக்கார் கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்’ நாலடியார்.

கருத்து: உதவியின் பயன் உதவி பெற்றாரது பெருமையின் அளவினதாம்.
மறவற்க மாசறுத்தார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு. (76)

பொருள்: மாசு அறுத்தார் கேண்மை மறவற்க - (தன்பாலிருந்த) குற்றத்தை ஒழித்தவரது நட்பினை (ஒருவன் எஞ்ஞான்றும்) மறவாதிருக்கக் கடவன்; துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - (தான்) துன்பமுற்ற காலத்தில் (தனக்குத்) துணையாயினாரது நட்பினை (ஒருவன் எஞ்ஞான்றும்) விடாதிருக்கக் கடவன்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘மாசற்றார் கேண்மை’. மாசற்றார் கேண்மைக்கும் செய்ந்நன்றி யறிதலுக்கும் யாதாமோர் இயைபும் இன்மையால், அப்பாடம் பிழைபட்ட பாடம் என்றும், மாசறுத்தலே செய்ந்நன்றி யயல்லா வற்றுள்ளும் சிறந்ததாகலான், ‘மாசறுத்தார்’ என்பதே ஆசிரியர் பாடமென்றும் கொள்க. அன்றியும், மாசற்றார் கேண்மையைக் கொள்ளல் வேண்டுமென்பதை ‘மருவுக மாசற்றார் கேண்மை’ என்று ஆசிரியர் பின்னர்க் கூறுதலால், அதனை ஈண்டுங் கூறார்.

கருத்து: தமது குற்றங்களை நீக்கிய ஆசிரியர் நட்பையும், தமது துன்ப காலத்தில் உதவியோர் நட்பையும் விடற்க.

எழுமவ் வெழுபிறப்பு முள்ளுவர் தங்கள்
விழுமந் துடைத்தவர் நட்பு. (77)

பொருள்: தங்கள் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்முடைய துன்பத்தை நீக்கியவரது நட்பினை, எழும் அ எழு பிறப்பும் (அறிவுடையோர்) உள் ளுவர் - (மேல்) உண்டாகும் ஏழு பிறப்பின்கண்ணும் அறிவுடையோர் நினைப்பர்.

அகலம்: தாமத்தர் பாடம் ‘எழுமவ் வெழுபிறப்பும்’, ‘தங்கண்’. மற்றை நால்வர் பாடம் ‘எழுமை யயழுபிறப்பும்’ ; ‘தங்கண்’. கண் என்னும் ஏழாம் வேற்றுமை யுருபு ஈண்டுப் பொருத்தமற்ற தாகலான், தங்கள் என்பதன் ‘ள’கர வொற்றை ‘ண’கர வொற்றாக ஏடு பெயர்த்தெழுதியோன் படித் தெழுதியதால் தங்கண் என்னும் பிழைப் பாடம் ஏற்பட்ட தெனக் கொள்க. முந்திய பிறப்புக்களில் நடந்தவற்றையும் ஒருவன் அறியக் கூடு மென்பது இக் குறளால் விளங்குகின்றது. ஏழு வகைப் பிறப்புக்கள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.

கருத்து: தனது துன்பத்தை நீக்கியவர் நட்பை ஒரு காலத்தும் மறக்க லாகாது.

நன்று மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று. (78)

பொருள்: நன்று மறப்பது நன்று அன்று - (ஒருவர் செய்த) நன்மையை மறத்தல் அறம் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - (ஒருவர் செய்த) தீமையை அப்பொழுதே மறத்தல் அறம்.

அகலம்: அன்று என்பது ஆகுபெயர், அப்பொழுதிற்கு ஆயினமை யால். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நன்றி மறப்பது’. நான்காம் சீரில் நன்றல்லது எனக் கூறி யிருத்தலான், முதற் சீரில் நன்று என்றே ஆசிரியர் கூறியிருப்பர்.

கருத்து: தனக்கு ஒருவர் செய்த நன்மையை மறப்பது மறமாம். தீமையை மறப்பது அறமாம்.

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும். (79)

பொருள்: கொன்று அன்ன இன்னா செய்யினும் - (தமக்கு ஒருவர்) கொன்றாற் போன்ற துன்பங்களைச் செய்யினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ள (அவை) கெடும் - (தமக்கு) அவர் செய்த நன்மை யயான்றை நினைக்க அவை கெடும்.

அகலம்: ‘கொன்றன்ன’ என்பது வினையயச்சத் தொகை. ‘அது கொன்றால் அன்ன’ என விரியும். ‘அவை’ என்பது அவாய் நிலையான் வந்து, இன்னாத வற்றைச் சுட்டி நின்றது. ‘செய்யினும்’ என்பது செய்யுள் விகாரத்தால் ‘ய’கர வொற்றுக் கெட்டு நின்றது. ‘ஒரு நன்றி செய்தவர்க் கொன்றி யயழுந்த, பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்’ என்றார் நாலடியார். தருமர், தாமத்தர் பாடம் ‘அவர் செய்த தொன்றுநன் றுள்ளப் படும்.

கருத்து: தனக்கு நன்மை செய்தவர் பின்னர்த் தீமை செய்யின் அதனை மறந்திடுக.

எந்நன்று கொன்றாற்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (80)

பொருள்: எ நன்று கொன்றாற்கும் உய்வு உண்டாம் - எத்தகைய (சிறந்த) அறத்தைக் கெடுத்தவனுக்கும் உய்வாயில் உண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - (தனக்குப் பிறர்) செய்த நன்றியை மறந்த மனிதனுக்கு உய்வாயில் இல்லை.

அகலம்: உய்வாயில் - கழுவாய். ‘உய்வாயில்’ என்பதனை வட நூலார் ‘பிராயச்சித்தம்’ என்பர். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘எந்நன்றி’. ‘நன்று’ என்னும் பாடத்தைக் கொண்டதற் குரிய காரணத்தை ‘நயனீன்று’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்தில் காண்க.

கருத்து: செய்ந் நன்றியை மறந்தோன் அப் பாவப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.

No comments:

Post a Comment