Sunday

பொறை யுடைமை

பதிமூன்றாம் அதிகாரம் - பொறை யுடைமை

அஃதாவது, பொறுமை யுடைமை.

அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை. (121)

பொருள்: அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (மண்வெட்டி கொண்டு தன்னைத்) தோண்டுவாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

அகலம்: இகழ்வார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா- லும்மை, யயரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்’ - நாலடியார்.

கருத்து: தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.

பொறுத்த லிறப்பினை யயன்று மதனை
மறத்த லதனினு நன்று. (122)

பொருள்: இறப்பினை என்றும் பொறுத்தல் - (ஒருவன் பிறர் செய்த) மிகையினை எஞ்ஞான்றும் பொறுக்கக் கடவன்; அதனை மறத்தல் அதனினும் நன்று - அம் மிகையினை (உடனே) மறந்து விடுதல் பொறுத்தலினும் (மிக) நன்று.

கருத்து: பிறர் செய்த பிழையை உடனே மறந்திடுக.

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (123)

பொருள்: விருந்து ஒரால் இன்மையுள் இன்மை - விருந்தினரை விலக்குதல் வறுமையுள் வறுமை ; மடவார்ப் பொறை வன்மையுள் வன்மை - (மிகை செய்த) மடையரைப் பொறுத்தல் வலிமையுள் வலிமை.

அகலம்: மடவார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. மிகை செய்தற்குக் காரணம் மடமை என்பதைக் குறிக்கவே ‘மடவார்ப் பொறை’ என்றார். வன்மையுள் வன்மை அறிவுடைமை, ‘அறிவற்றங் காக்குங் கருவி’ என்றா ராகலின். இன்மையுள் இன்மை அறிவின்மை, ‘அறிவின்மை யின்மையு ளின்மை’ என்றாராகலின். ‘ஒப்பமுடித்தல்’ என்னும் உத்தியால் மடவார்ப் பொறைக்குக் காரணமாய அறிவுடைமையைக் கூறும் இக் குறளில் விருந்தொராலுக்குக் காரணமாய அறிவின்மையையும் கூறினார்.

கருத்து: அறிவில்லாதார் செய்த பிழைகளைப் பொறுத்தல் வேண்டும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யயாழுகப் படும். (124)

பொருள்: நிறை யுடைமை நீங்காமை வேண்டின் - சால்புடைமை (தன்னை விட்டு) நீங்காதிருத்தலை (ஒருவன்) விரும்பின், பொறை உடைமை போற்றி ஒழுக படும் - பொறையுடைமையைப் பேணி ஒழுக வேண்டும்.

கருத்து: பொறையுடையவனை விட்டு நிறையுடைமை நீங்காது.

ஒறுத்தாரை யயான்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (125)

பொருள்: ஒறுத்தாரை ஒன்றாக வையார் - (தமக்குத் தீங்கு செய்தானை) ஒறுத்தவரை ஒரு பொருளாக மதியார் ; பொறுத்தாரை பொன் போல் பொதிந்து வைப்பர் - பொறுத்தவரைப் பொன்னை (த் துணியில் பொதிந்து வைத்தல்) போல (மனத்தின்கண்) போற்றி வைப்பர் (அறிவுடையார்).

அகலம்: ஒறுத்தவர் -தண்டித்தவர். ‘அறிவுடையார்’ என்பது அவாய் நிலையான் வந்தது.

கருத்து: பொறுத்தாரை அறிவுடையார் போற்றுவர்.

ஒறுத்தார்க் கொருநாளே யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (126)

பொருள்: ஒறுத்தார்க்கு ஒரு நாளே இன்பம் (ஆம்) ‡ (தமக்குத் தீங்கி ழைத்தானை) ஒறுத்தவர்க்கு ஒரு நாளே இன்பம் ஆம் ; பொறுத்தார்க்கு பொன்றும் துணையும் புகழ் (ஆம்) - பொறுத்தவர்க்கு (அவர்) இறக்கும் அளவும் (இன்பத்தோடு) புகழ் ஆம்.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒரு நாளை’. ‘பொன்றுந் துணையும்’ என்று பின்னர்க் கூறியிருத்தலின், பிரிநிலை ஏகாரம் ஈண்டு இன்றியமையாதது. ஆகலான் ‘ஒரு நாளே’ என்பது ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. ‘ஆம்’ என்னும் ஆக்கச் சொல் இரண்டிடத்தும் வருவித்து உரைக்கப்பட்டது.

கருத்து: பொறுத்தவர்க்குப் பொன்றுந் துணையும் இன்பமும் புகழும் உண்டு.

அறனல்ல தற்பிறர் செய்யினும் நொந்து
திறனல்ல செய்யாமை நன்று. (127)

பொருள்: அறன் அல்ல தன் பிறர் செய்யினும்‡அறன் அல்லாத செயல்களைத் தனக்குப் பிறர் செய்யினும், நொந்து திறன் அல்ல செய்யாமை நன்று ‡ மனம் வருந்தித் திறன் அல்லாத செயல்களைச் செய்யா திருத்தல் நன்மை.

அகலம்: பிறர் செய்த தீங்குகளைப் பொறுத்தல் திறனுடைய செயலாம். பொறாது எதிர்த் தீங்கு செய்தல் திறனற்ற செயலாம். அதுபற்றித் ‘திறனல்ல’ என்றார். பரிமேலழகர் பாடம் முறையே ‘திறனல்ல’, ‘நோநொந்து’, ‘அறனல்ல’. தருமர் பாடம் முறையே ‘திறனல்ல’, ‘நேர்நொந்து’, ‘அறனல்ல’. தாமத்தர் பாடம் முறையே ‘திறனல்ல’, ‘நோய்நொந்து’, ‘அறனல்ல’. அறன் அல்ல-அறன் அல்லாத செயல்கள்; அஃதாவது, பாவச் செயல்கள். திறன் அல்ல- திறன் அற்ற செயல்கள் ; அஃதாவது, மனவலி யில்லாதார் செய்யும் செயல்கள். அறனல்ல தற்பிறர் செய்யின், அவரை ஒறுத்தல் தகுதி; திறனல்ல தற்பிறர் செய்யின், அவரைப் பொறுத்தல் தகுதி. மூன்றாஞ் சீராகிய ‘செய்யினும்’ என்பதன் உம்மை ஒறுத்தற்குரிய ‘அறனல்ல’ வற்றையே குறிக்கும். ஆகலான், ‘அறனல்ல’ என்பதையே ஆசிரியர் முதற் சீராகக் கூறினர் என்று கொள்க. திருத்தமாக எழுதத் தெரியாதவன் எழுதிய ஏட்டெழுத்தில் அகரத்திற்கும் திகரத்திற்கும் வேற்றுமை காண்டல் அரிது. அவ் வேட்டைப் பெயர்த்தெழுதியோன் முதற் சீரின் முதல் எழுத்தாகிய ‘அ’கரத்தைத் ‘தி’கரமாகக் கருதி அங்ஙனம் எழுதியிருத்தல் கூடும். அவ்வாறு அம் முதற் சீர் ‘திறனல்ல’ என்றாய பின்னர் இக் குறளைப் படிக்கும் புலவர் எவரும் ஐந்தாஞ்சீர் ‘அறனல்ல’ என்பதுதான் என்று கருதுதல் இயற்கை. அவ்வாறு அவர் கருதிய பின்னர்க் குறளின் நான்காஞ்சீர் ‘நொந்’ என ஓர் அசையாக இருத்தல் கண்டு, அதனைத் திருத்த முயலுதலும் இயற்கை. அம் முயற்சியின் பயன்தான் குறளின் நான்காஞ் சீர் ‘நோநொந்’ எனவும், ‘நோய் நொந்’ எனவும் ‘நேர்நொந்’ எனவும் மூன்றாக மூவர் உரை ஏடுகளில் காணப்படுகின்றது. திறனல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்யினும், தான் அறனல்லவற்றைச் செய்யலாகா தென்பது யாவரும் அறிந்த தொன்றாகலான், அதனை ஈண்டுக் கூறுதல் மிகையே யாகும். ஆனால், அறனல்லவற்றைச் செய்த பிறர்க்கும் நொந்து திறனல்லவற்றைச் செய்யலாகா தென்று கூறுதல் இன்றியமையாதது. ஆகலான், ‘திறனல்ல’ என்பதையே ஐந்தாஞ் சீராக ஆசிரியர் கூறினர் என்று கொள்க. ஐந்தாஞ் சீர் ‘திறனல்ல’ என்றாய பின்னர் நான்காஞ் சீர் ‘நொந்து’ என்றிருத்தலில் எவ்விதத் தடையும் இல்லை. ஆகலான் ‘அறனல்ல’ என்பதையே முதற் சீரும், ‘நொந்து’ என்பதையே நான்காஞ் சீரும், ‘திறனல்ல’ என்பதையே ஐந்தாஞ் சீருமாக ஆசிரியர் கூறினர் எனக் கொள்க.

கருத்து: தனக்குப் பிறர் பல மறங்களைச் செய்யினும், தான் அவரைப் பொறுக்கக் கடவன்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல். (128)

பொருள்: மிகுதியான் மிக்கவை செய்தாரை - (செல்வம் முதலியவற்றின்) மிகுதியினால் (செருக்குக் கொண்டு தமக்குத்) தீங்குகள் இழைத்தாரை, தாம் தம் தகுதியால் வென்று விடல் - தாம் தமது பொறுமையினால் வென்று விடுக.

அகலம்: தகுதி என்பது ஈண்டுப் பொறுமை என்னும் பொருள் தந்து நின்றது.

கருத்து: தமக்குத் தீங்கு செய்தாரைப் பொறுத்திடுக.

துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர். (129)

பொருள்: இறந்தார் வாய் இன்னா சொல் நோற்கிற்பவர் - மிகை செய்தாரது வாயினின்று வரும் துன்பம் தரும் சொற்களைப் பொறுக்கும் ஆற்றலுடையவர், துறந்தாரின் தூய்மை உடையர்- துறந்தாரினும் (அகத்) தூய்மை யுடையவர்.

அகலம்: கில் என்னும் இடைச் சொல் ஆற்றலை உணர்த்தி நின்றது.

கருத்து: பிறர் சொல்லும் இன்னாச் சொற்களைப் பொறுப்பவர் துறந்தாரினும் தூயர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின். (130)

பொருள்: பிறர் சொல்லும் இன்னா சொல் நோற்பாரின் பின் - பிறர் கூறும் துன்பந்தரும் சொற்களைப் பொறுப்பவர்க்குப் பின்னர், உண்ணாது நோற்பார் பெரியர் - (ஊண்) உண்ணாமல் தவம் புரிவோர் பெரிய ராவர்.

அகலம்: தவத்தினும் பொறுமை உயர்ந்தது என்றவாறு. தாமத்தர் பாடம் ‘இன்னாது நோற்பாரின்’.

கருத்து: பிறரது இன்னாச் சொற்களைப் பொறுப்பவர் தவஞ் செய்வாரினும் மேற்பட்டவர்.

No comments:

Post a Comment