Friday

அடக்க முடைமை

பத்தாம் அதிகாரம் - அடக்க முடைமை

அஃதாவது, தான் அடங்கி யயாழுகுதலும், தன்னை அடக்கி யயாழுகுதலு மாம். தன்னை அடக்குதல் - தன் பொறிகள் முதலியவற்றை அடக்குதல்.

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும். (91)

பொருள்: அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கம் (தன்னை யுடையாரைத்) தேவருட் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும் - அடங்காமை (தன்னை யுடையாரை) நிறைந்த இருளையுடைய நரகத்தின்கண் செலுத்தி விடும்.

கருத்து: அடக்கம் சுவர்க்கத்தை நல்கும்; அடங்காமை நரகத்தை நல்கும்.

காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூஉங் கில்லை யுயிர்க்கு. (92)

பொருள்: அடக்கத்தை பொருளா(க) காக்க -(மக்கள்) அடக்கத்தை(க் காக்க வேண்டிய ஒரு) பொருளாகக் காக்கக் கடவர் ; உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - (மக்கள்) உயிர்க்கு அதனினும் மேற்பட்ட நன்மை இல்லை.

அகலம்: ஆக்கம் - செல்வம். அதனைத் தரும் நன்மையை ஆக்கம் என்றார். ‘மக்கள்’ என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.

கருத்து: ஒருவன் அடக்கத்தை விடாது காக்கக் கடவன்.

செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின். (93)

பொருள்: அறிவு அறிந்து ஆற்றின் அடங்க பெறின் - (ஒருவன் தன் உள்ளத்தின்கண் உள்ளதாகிய) அறிவை (ஆராய்ந்து) அறிந்து (அடங்கும்) நெறியில் (உளம், நா, உடல்) அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - (அவ்வறிவு அவ்) அடக்கத்தினை அறிந்து அவனுக்குச் சிறப்பினை நல்கும்.

அகலம்: சிறப்பு - வீடு. ‘ஓர்த்துள்ளம்’ என்னும் தொடக்கத்துக் குறளை நோக்குக. உளம், நா, உடல் அடங்குவதற்கு உள்ளத்தின் கண் உள்ளதாகிய அறிவை அறிதல் இன்றியமையாத தாகலான், அறிவு அறிந்து என்றார். அவ் வறிவே மெய்ப்பொருளாதலால், அது செறிவறிந்து சீர்மை பயக்கும் என்றார்.

கருத்து: அடக்க முடையார் வீடு பெறுவர்.

நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது. (94)

பொருள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - (தனது இல் வாழ்க்கை) நிலையினின்று வேறுபடாது (உளம், நா, உடல்) அடங்கியவனது தோற்றம், மலையினும் மாண பெரிது ‡ மலையினும் மிகப் பெரியது.

அகலம்: தோற்றம் - விளக்கம். தாமத்தர் பாடம் ‘நிலையிற் பிரியா’. இல்வாழ்க்கை நிலையினின்று வேறுபடாது அடங்குவதாவது, இல்வாழ்க்கை யின்கண் அடக்கி யாள வேண்டியவர்களை அடக்கி யாண்டுகொண்டே தான் அடங்கி யயாழுகல். ‘கருமஞ் சிதையாமல்’ என்னும் தொடக்கத்துக் குறளையும் நோக்குக. முந்திய மூன்று குறள்களால் பொதுவான அடக்கத்தைக் கூறினார். இக் குறளால் பிறருக்கு அடங்கி யயாழுகுதலின் பெருமையைக் கூறினார்.

கருத்து: இல்வாழ்வானது அடக்கம் அவனுக்கு மிக உயர்ந்த பெருமையைத் தரும்.

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கோர் செல்வந் தகைத்து. (95)

பொருள்: பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பணிதல் எல்லாருக்கும் நல்ல தாம்; அவருள்ளும் செல்வர்க்கு ஓர் செல்வம் தகைத்து - எல்லாருள்ளும் செல்வந்தருக்கு (அதனோடு வேறு) ஒரு செல்வ மரம் தகைமையை உடைத்து.

அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செல்வர்க்கே’. ஈண்டு ஏகாரம் வேண்டப்படுவதன் றாகலானும், ‘ஓர்’ இன்றியமையாது வேண்டப்படுவ தொன் றாகலானும், ‘செல்வர்க்கோர்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. ‘பெருமை பெருமித மின்மை’ - திருக்குறள்.

கருத்து: செல்வர்க்கு அடக்கம் சிறப்பினைத் தரும்.

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து. (96)

பொருள்: ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு பிறப்பின்கண் (ஒருவன்) ஆமை போல ஐம் பொறிகளையும் அடக்குதலைச் செய்யின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - (அவன் அடையும்) ஏழு பிறப்பின்கண்ணும் (அவனுக்கு அது) காவலாதலை யுடைத்து.

கருத்து: அடக்கம் மேல் வரும் ஏழு பிறப்பிலும் பெருமை பயக்கும்.

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குட் பட்டு. (97)

பொருள்: யா காவார் ஆயினும் நா காக்க - (மாந்தர்) எவற்றை அடக்கா ராயினும் நாவினை அடக்குக ; காவாக்கால் சொல் இழுக்குள் பட்டு சோகாப்பர் - (நாவினை) அடக்காத பொழுது (அவர்) சொற் குற்றத்துட் பட்டுத் துக்கப்படுவர்.

அகலம்: மணக்குடவர் பாடம் ‘சொல்லிழுக்குட் பட்டு’. மற்றை நால்வர்
பாடம் ‘சொல்லிழுக்குப் பட்டு’. நாவினைக் காவாதார் சொல்லிழுக்குட் பட்டுச் சோகாப்பர் என்பதே அதிகப் பொருத்த மாகலான், மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. சோகாத்தல் - துக்கப்படுதல்.

கருத்து: ஒருவன் நாவினை அடக்கிப் பேசுக.

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும். (98)

பொருள்: ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் - (ஒருவன் சொல்லும் சொற்களில்) ஒன்றாலும் தீய சொல்லின் பொருளினது (தீய) பயன் உண்டாயின், நன்று ஆகா(த)து ஆகி விடும்‡(அவன் சொல் ஒவ்வொன்றும்) நன்மையைத் தாராத சொல் ஆகி விடும்.

அகலம்: நன்றாகாதது என்பது செய்யுள் விகாரத்தால் தகரம் கெட்டு நின்றது.

கருத்து: ஒருவன் சொல்லும் சொற்களில் ஒன்று தீச் சொற்பயனை அளிப்பின், அவன் சொல்லிய சொற்களெல்லாம் தீயனவாய் விடும்.

தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே
வாயினாற் சுட்ட வடு. (99)

பொருள்: தீயினால் சுட்ட புண் உள் ஆறும் - தீயால் சுட்டபுண் உள்ளே ஆறிவிடும்; வாயினால் சுட்ட வடு ஆறாது - சொல்லாற் சுட்ட புண் (உள்ளே ஒரு நாளும்) ஆறாது.

அகலம்: ஏகாரம் தேற்றம். வாய் என்பது ஆகுபெயர், வாயினின்று வரும் சொல்லிற்கு ஆயினமையால். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நாவினால்’. ‘வாயினால்’ என்பது எதுகையும் மோனையும் ஒத்துத் தொடையின்பம் பயத்தல் காண்க. அன்றியும், ‘வாய்’ என்பது ஆசிரியர் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று. ஆகலான், வாயினால் என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: ஒருவனை இகழ்ந்து பேசின், அஃது அவன் மனத்தைவிட்டு ஒரு நாளும் நீங்காது.

கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து. (100)

பொருள்: கதம் காத்து அடங்கல் கற்று ஆற்றுவான் செவ்வி - சினத்தை அடக்கி(த் தான்) அடங்குதலைக் கற்றுக் கைக் கொண்டு ஒழுகுவானது நல்ல சமயத்தை, ஆற்றின் நுழைந்து அறம் பார்க்கும் - (அவன்பாற் செல்லுதற்குரிய) நெறியிற் புகுந்து அறக்கடவுள் பார்க்கும்.

அகலம்: அறம் என்பது ஆகுபெயர், அறக்கடவுளுக்கு ஆயின மையால்.

கருத்து: வெகுளியை விடுத்து அடக்கத்தைக் கைக்கொண்டு ஒழுகுபவன் வேண்டியவற்றை யயல்லாம் கடவுள் அருள்வார்.

No comments:

Post a Comment