Friday

விருந்தோம்பல்

ஆறாம் அதிகாரம் - விருந்தோம்பல்

அஃதாவது, விருந்தினரைப் பேணுதல். விருந்து‡புதுமை. விருந்தினர்‡ புதியராய் வந்தோர்.

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (51)

பொருள்: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - (ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு- விருந்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து = பொருட்டு. பொருட்டு ‡ பொருளையுடையது. ‘விருந்து’ ஆகுபெயர், அதனை உடையார்க்கு ஆயினமையால்.

கருத்து: இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே.

விருந்து புறத்தாகத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (52)

பொருள்: சாவா மருந்து என்னினும்‡ சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தம் என்னினும், விருந்து புறத்து ஆக தான் (அகத்து) உண்டல் ‡ விருந்தினர் புறத்திருக்கத் தான்அகத்து உண்டல், வேண்டல் பாற்று அன்று‡ விரும்பற் பான்மைத்து அன்று.

அகலம்: சாவாமைக்குக் காரணமாகிய மருந்தினைச் சாவா மருந் தென்றார். அகத்து என்பது அவாய் நிலையான் வந்தது. பால்+து= பாற்று. பான்மைத்து ‡ தன்மைத்து. தருமர் பாடம் ‘புறத்ததாய்’. மற்றை நால்வர் பாடம் ‘புறத்ததா’. மணக்குடவர் பாடம் ‘வேண்டும்பாற் றன்று’. தாமத்தர் பாடம் ‘தானுண்ணல்’. ‘புறத்ததா’ என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘புறத்ததாக’ என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்ற தெனக் கொள்ள வேண்டிய திருத்தலானும், ‘புறத்தது’ என்னும் வினையாலணையும் பெயர் ஈண்டு வேண்டாததும் பொருத்த மற்றது மானபடியாலும், ‘விருந்து புறத்திருக்க’ என்னும் நேரிய பொருளைத் தரும் ‘புறத்தாக’ என்பதே ஆசிரியர் பாடமெனவும், ‘புறத்ததா’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனவும் கொள்க.

கருத்து: விருந்தினரை வீட்டின் வெளியே வைத்துவிட்டுத் தாம் வீட்டினுள் உண்டல் விரும்பத் தக்க தன்று.

வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று. (53)

பொருள்: வைகலும் வரு விருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள் தோறும் (தன்பால்) வரும் விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை, பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையுற்று அழிவுறுதல் இல்லை.

அகலம்: ‘வரு’ என்பது வினைத் தொகை. பேணுதல் - உபசரித்தல். பருவரல் - துன்புறுல். அஃது ஈண்டு ஆகுபெயர், அதற்கு ஏதுவாகிய வறுமைக்கு ஆயினமையால். அது தைவரல் என்பது போல ஒரு சொல் நீர்மைத்து.

கருத்து: விருந்தினரைப் பேணுவான் வறுமை யுறுதல் இல்லை.

அகமலர்ந்து செய்யா ளுறையு முகமலர்ந்து
நல்விருந் தோம்புவா னில். (54)

பொருள்: நல் விருந்து முகம் மலர்ந்து ஓம்புவான் இல் - நல்ல விருந்தினரை (த்தன்) முகம் மகிழ்ந்து பேணுவானது இல்லின் கண்ணே, செய்யாள் அகம் மலர்ந்து உறையும் ‡ திருமகள் உள்ளம் மகிழ்ந்து வாழ்வள்.

அகலம்: மேற் குறளில் விருந்தோம்புவானது இல்வாழ்க்கை வறுமையுறல் இல்லை யயன்றதற்கு ஈண்டுக் காரணம் கூறிய வாறு. தருமர் பாடம் ‘அக மலர்ந்து’; ‘முகமலர்ந்து’. மற்றை நால்வர் பாடம் அகனமர்ந்து; முகனமர்ந்து. ‘அகன மர்ந்து’, ‘முகனமர்ந்து’ என்பன முறையே அகம் பொருந்தி, முகம் பொருந்தி என்னும் பொருள் தருகின்றன. அக மலர்ந்து, முக மலர்ந்து என்பன முறையே அக மகிழ்ந்து, முக மகிழ்ந்து என்னும் பொருள் தருகின்றன. பிந்திய பொருள்கள் மிகப் பொருத்தமும் தெளிவு முடையனவாகலான், அப் பொருள் களைத் தரும். தருமர் பாடங்களே ஆசிரியர் பாடங்கள் எனக் கொள்ளப்பட்டன.

கருத்து: நல்ல விருந்தினரைப் பேணுவான் இல்லின் கண் திருமகள் உறை வள்.

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (55)

பொருள்: விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - (விருந்தினருக்கு உணவு அளித்து) விருந்தினரைப் பேணி எஞ்சியதை உண்பானது நிலத்தின் கண், வித்து இடலும் வேண்டுமோ‡விதை விதைத்தலும் வேண்டுமோ? (வேண்டா).

அகலம்: அவர் நிலத்தில் வித்து இடாமலே இறைவன் விளைபொருள்களை அருள்வன் என்றவாறு. வித்திடல் முதலியன செய்யாமலே நெல் வரப் பெற்றமையை ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் காண்க. ‘விச்சதன்றியே விளைவு செய்குவாய்’ என்ற திருவாசகத்தையும் நோக்குக. ‘வித்தும்’ என்பதன் உம்மையைப் பிரித்து ‘இடல்’ என்பதனோடு சேர்த்தும், ‘கொல்லோ’ என்பதின் ‘ஓ’ காரத்தைப் பிரித்து வேண்டும் என்பதனோடு சேர்த்தும் பொருள்கள் உரைக்கப்பட்டன. எஞ்சியது - மீதமானது.

கருத்து: விருந்தினரை ஓம்புவானது நிலங்களைத் தேவர் விளைப்பர்.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு. (56)

பொருள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்- (தன்பால் நின்று) செல்லும் விருந்தினரைப் பேணி (த் தன்பால்) வரும் விருந்தினரை (எதிர் நோக்கி) இருப்பவன், வானத்து அவர்க்கு நல் விருந்து - வானத்தின்கண் வாழும் தேவருக்கு நல்ல விருந்தினன் (ஆவன்).

அகலம்: செல், வரு என்பன வினைத் தொகைகள். அவை மேற்கூறிய பொருளன வாதலைத் ‘தருசொல் வருசொல்லாயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த’, ‘ஏனை யிரண்டுமேனை யிடத்த’ என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறிக.

இச் சூத்திரங்களை அறியாதார் ‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்’ என்பதற்குத் ‘தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான்’ என்று உரைப்பார்.

கருத்து: விருந் தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன். (57)

பொருள்: வேள்வி பயன் இனை துணைத்து என்பது ஒன்று இல்லை - (விருந்தோம்பலாகிய) உதவியின் பயன் இவ் வளவினது என்று (சுட்டிச்) சொல்வதற்கு ஓர் அளவு இல்லை; விருந்தின் துணையே துணை ‡ (அதற்கு) விருந்தினரது (பெருமையின்) அளவே அளவு.

அகலம்: துணையே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து:விருந்தோம்பலின் பயன் விருந்தினரின் நற் குண நற் செயல் களுக்குத் தக்க அளவு பெருமை யுடையது.

பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (58)

பொருள்: விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - விருந்தினரைப் பேணி (விருந்தோம்பலாகிய மானுட) யாகத்தின் பயனை அடையாதவர், பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் - (பிற்காலத்தே) ‘வருந்திக் காத்துப் பொருளை இழந்தேம்’ என்று இரங்குவர்.

அகலம்: ‘பரிந்தோம்பிப் பற்றற்றோம்’ என்பது விருந்தோம்பாது செல்வத் தைக் காத்து வைத்துப் பின் இழந்தாரது கூற்று. பற்று, வேள்வி என்பன ஆகு பெயர்கள், அவை முறையே பற்றுதற் கேதுவாகிய செல்வத் திற்கும், வேள்வியின் பயனுக்கும் ஆயினமையால். மணக்குடவர் பாடம் ‘பற்றற்றோம்’.

கருத்து: விருந்தினரை ஓம்பாதார் தமது செல்வத்தை இழந்து வருந்துவர்.

உடைமையு ளுண்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு. (59)

பொருள்: உடைமையுள் உண்மை விருந்து ஓம்பல் - உடைமையுள் உண்மையான உடைமை விருந்தினரைப் பேணுதல்; ஓம்பா(த) மடமை மடவார்கண் உண்டு- (விருந்தினரைப்) பேணாத மடமை அறிவில் லாரிடத்து உண்டு.

அகலம்: உண்மையான உடைமையை உண்மை என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘உடைமையு ளின்மை’. ‘ஒளியுள் இருள்’ என்பது எவ்வளவு முரண்பாடோ, அவ்வளவு முரண்பாடே ‘உடைமையுள் இன்மை’ என்பது. உடைமை என்பது செல்வத்தையும் அறிவையும் அடக்கி நிற்கும் ஆற்றல் உடையது. விருந்தோம்ப லோம்பா மடமை என்பதை ஒரே தொடராகக் கொள்ளுங்கால், ‘ஓம்பல்’ என்னும் சொல்மிகை யாகின்றது. ஏனெனில், ஆசிரியரது கருத்தை விளக்குவதற்கு ‘விருந்தோம்பா மடமை’ என்பதே போதியது. அன்றியும், ‘உடைமையு ளின்மை’ என்பதை ஆசிரியர் பாடமெனக் கொள்ளின், ‘உண்டு’ என்னும் பயனிலைச் சொற்கு ‘அது’ என்னும் சொல்லைத் தோன்றா எழுவாயாக வருவித்துக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கிறது. இக் காரணங் களால் ‘உடைமையு ளின்மை’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோன் ‘ளு’கரத்தை ‘ளி’கரமாகவும், ‘ண’கர வொற்றை ‘ன’கர வொற்றாகவும் படித்தெழுதியதால் நேர்ந்த பிழை எனக் கொள்க. பின்னர் ‘இன்மையு ளின்மை விருந்தொரல்’ என்று ஆசிரியர் கூறியிருத்தலையும் காண்க.

கருத்து: விருந்தினரை ஓம்பாதார் அறி வில்லார்.

மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (60)

பொருள்: மோப்ப அனிச்சம் குழையும் - (தொட்டு) முகர அனிச்சப் பூ வாடும்; முகம் திரிந்து நோக்க விருந்து குழையும் - (இல் வாழ்வான்) முகம் வேறு பட்டு நோக்க விருந்தினன் வாடுவன்.

அகலம்: ‘அனிச்சம்’ ஆகு பெயர், அதன் மலருக்கு ஆயினமையால். முகம் வேறு படுதலாவது, முகம் கடுத்தல்.
‘ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மை பேசி
யுப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்த மாகு
முப்பழ மொடுபாலன்ன முகங்கடுத் திடுவா ராயின்
கப்பிய பசியும்போகிக் கடும்பசி யாகுந் தானே’ - விவேகசிந்தாமணி.

கருத்து: மலர்ந்த முகத்தோடு விருந்தினரை உபசரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment