Sunday

கள்ளாமை

பதினைந்தாம் அதிகாரம் - கள்ளாமை
அஃதாவது, திருடாமை.

எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு. (141)

பொருள்: எள்ளாமை வேண்டுவான் என்பான் -(பிறர்) இகழா திருத்தலை விரும்புவான் எனப்படுபவன், தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க- தனது உள்ளம் எத்தன்மைத் (தாய ஒரு) பொருளையும் திருடக் (கருதா)மல் காக்கக் கடவன்.

கருத்து: களவு இகழைத் தரும்.

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கொள்வே மென. (142)

பொருள்: பிறன் பொருளை கள்ளத்தால் கொள்வேம் என - பிறனுடைய பொருளைத் திருட்டுத்தனத்தால் கொள்வேம் என, உள்ளத்தால் உள்ளலும் தீதே- மனத்தால் நினைத்தலும் தீதே.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. கள்ளம்-திருட்டுத்தனம். தருமர், மணக்குடவர் பாடம் ‘கள்ளத்தாற் கள்வேமெனல்’. நச்சர், பரிமேலழகர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வேமெனல்’. தாமத்தர் பாடம் ‘கள்ளத்தாற் கொள்வோ மெனல்’. ‘என’ என்பதே போதிய தாகலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. உள்ளத்தால் என வேண்டாது கூறினார்.

கருத்து: களவு செய்ய நினைத்தலும் தீது.

களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும். (143)

பொருள்: களவினால் ஆகிய ஆக்கம் - களவால் உண்டாய செல்வம், அளவு இறந்து ஆவது போல கெடும்-அளவு கடந்து வளர்வது போல (த் தோன்றிக் கொண்டிருந்து) கெடும்.

அகலம்: தருமர் பாடம் ‘ஆக்கம் விளையுங்கா லாவது’. ‘அல்லது செய்வா ரரும்பொருளாக்கத்தை, நல்லது செய்வார் நயப்பவோ - ஒல்லொலிநீர், பாய்வதே போலுந் துறைவகேள் தீயன, ஆவதே போன்று கெடும்’ என்றார் பழமொழியார்.

கருத்து: களவினால் வரும் செல்வம் வளர்வது போலத் தோன்றுமே யன்றி உண்மையில் கெடும்.

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (144)

பொருள்: களவின்கண் கன்றிய காதல் - களவின்கண் மிகுந்த ஆசை, விளைவின்கண் வீயா(த) விழுமம் தரும் - (அவ்வாசை) விளையுங்கால் நீங்காத துன்பத்தைத் தரும்.

கருத்து: களவின்கண் காதல் விளைவின்கண் துன்பம் தரும்.

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். (145)

பொருள்: அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளை அவாவி அன்பை உடையவராதல், பொருள் கருதி பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் - (பிறன்) பொருளை அவாவி (அவனுடைய) மறதியை (எதிர்) பார்ப்பாரிடத்து இல்லை.

அகலம்: தருமர், நச்சர் பாடம் ‘பொய்ச்சாப்பு’.

கருத்து: களவு செய்வார்க்கு அன்பு உண்டாகாது.

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். (146)

பொருள்: களவின்கண் கன்றிய காதல் அவர் - களவின்கண் மிக்க வேட்கையை யுடையவர், அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - (தமது) எல்லையின்கண் நின்று ஒழுகல் செய்யார்.

அகலம்: தமது எல்லையின்கண் நின்று ஒழுகல் செய்யார் - பிறர் மனையின்கண் புகுந்து களவு செய்வர்.

கருத்து: களவினை விரும்புவோர் பிறர் மனை புகுந்தும் களவு செய்வர்.

களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில். (147)

பொருள்: களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படும் இருண்ட அறிவினை ஆளுதல், அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - (தமது) எல்லையுள் நின்றொழுகலாகிய வலிமையை விரும்பினாரிடத்து இல்லை.

அகலம்: அளவு என்பது ஆகுபெயர், அளவின்கண் நின்றொழுகலுக்கு ஆயினமையால். களவாகிய காரியத்தைக் காரறிவு என்னும் காரணமாக உபசரித்தார். தாமத்தர் பாடம் ‘ஆற்ற லறிந்தார்கண்’.

கருத்து: களவு செய்தற்குக் காரணம் களவால் செல்வம் ஆம் என்னும் மயக்க அறிவே.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (148)

பொருள்: அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல - தமது எல்லையுள் நின்றொழுகுவாரது உள்ளத்தின்கண் அறம் (நிற்றல்) போல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவு செய்வாரது நெஞ்சத்தின்கண் வஞ்சகம் (நிலைத்து) நிற்கும்.

கருத்து: தமது எல்லையுள் நின்றொழுகுவோர் அறத்தையே கருதுவர்; களவினைச் செய்வோர் கரவையே கருதுவர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேறா தவர். (149)

பொருள்: களவு அல்ல மற்றைய தேறாதவர் - களவு அல்லாதன (வாகிய) மற்றையவற்றை அறியாதவர், அளவு அல்ல செய்து வீவர் - (தமது) அளவுக்கு மிஞ்சிய செயல்களைச் செய்து அழிவர்.

அகலம்: ஆங்கு, ஏ, என்பன அசைகள். ‘தேற்றாதவர்’ என்பது பிறவினை யாகலான், அது பிழைப்பட்ட பாடம் என்றறிக.

கருத்து: களவு செய்வார் தம் வலிமையின் அளவுக்கு மிஞ்சிய செயல்களைச் செய்தழிவர்.

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. (150)

பொருள்: கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - திருடுவார்க்கு உயிர் நிலையாகிய உடம்பு தவறும்; கள்ளார்க்கு புத்தேள் உலகு தள்ளாது - திருடாதார்க்குத் தெய்வ உலகம் தவறாது.

அகலம்: தவறும்‡அழியும். களவு செய்யுங்கால் காணப்படின் கொல்லப் படுவன் என்பதைக் குறிக்க வேண்டி, உயிர்நிலை தள்ளும் என்றார். தவறாது - தவறாமல் எய்தும்.

கருத்து: களவு செய்வார் கொலையுண்டு இறப்பர். களவை விடுத்தார் சுவர்க்கம் அடைவர்.

No comments:

Post a Comment