Friday

இனியவை கூறல்

ஏழாம் அதிகாரம் -இனியவை கூறல்

அஃதாவது, இன்பம் பயக்கும் சொற்களைச் சொல்லுதல்

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (61)

பொருள்: இன்சொல் ஈரம் அளை படிறு இல ஆம் - இனிய சொற்கள் அன்போடு கலந்து குற்றம் இல்லாதன வாம்; செம்பொருள் கண்டார் வாய் சொல் - (அன்றியும்) மெய்ப்பொருள் உணர்ந்தார் வாயினின்று வரும் சொற்களாம்.

அகலம்: இன் சொல் என்பது ‘இலவாம்’, ‘வாய்ச் சொல்’ என்னும் இரண்டு பயனிலைகளைக் கொண்டு நின்றது. தருமர் பாடம் ‘இன்சொலா யீரம்’ ; ‘காண்பார் வாய்ச் சொல்’. மற்றை நால்வர் பாடம் ‘இன் சொலா லீரம்’. இகர அளபெடை இசை நிறைக்க வந்தது. ஆல் என்பது அசை. ‘மாசற்ற நெஞ்சுடையார் வன்சொ லினிது’- நன்னெறி.

கருத்து: அன்போடு கலந்து குற்றமற்றதும், மெய்ப் பொருளுணர்ந்தார் வாயினின்று வருவதும் இனிய சொல்லாம்.

அகமலர்ந் தீதலி னன்றே முகமலர்ந்
தின்சொல னாகப் பெறின். (62)

பொருள்: முகம் மலர்ந்து இன் சொல்லன் ஆக பெறின் - முகம் மலர்ந்து இனிய சொல்லை யுடையன் ஆகப் பெற்றால், அகம் மலர்ந்து ஈதலின் நன்று - (அஃது) உள்ளம் உவந்து ஈதலைப் போல (ஓர்) அறமாம்.

அகலம்: சொல்லன் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அகனமர்ந்து’, ‘முகன மர்ந்து’. அப் பாடங்களைக் கொள்ளாததற் குரிய காரணங்களை ‘அகமலர்ந்து செய்யாள்’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்திற் காண்க. ‘ஏகாரம்’ அசை.

கருத்து: இன்சொல் கூறல் ஈகையைப் போல ஓர் அறமாம்.

முகத்தான் மலர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம். (63)

பொருள்: முகம் மலர்ந்து இனிது நோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்‡ முகம் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தின் கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம்.

அகலம்: அத்து இரண்டும் ஆனும் சாரியைகள். ‘ஆல்’ அசை. ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சுட்டி நின்றது. ‘ஏகாரம்’ அசை. இன் சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘முகத்தா னமர்ந்து’. மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘இன்சொலினதே’. தாமத்தர் பாடம் ‘இன்சொலஃதே’. தருமர், நச்சர் பாடம் ‘இன்சொலி னஃதே’.

கருத்து: மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வினைகள் அறமாம்.

துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு. (64)

பொருள்: யார் மாட்டும் இன்பு உறும் இன் சொல் அவர்க்கு - யாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இனிய சொல்லை யுடையார்க்கு, துன்பு உறும் துவ்வாமை இல் ஆகும் - துன்பத்தை மிகுவிக்கும் வறுமை இல்லை யாகும்.

அகலம்: உகர அளபெடைகள் இன்னிசைக்கண் வந்தன.

கருத்து: இன் சொல் உடையார் வறுமை யுறுதல் இல்லை.

பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற. (65)

பொருள்: ‘பணிவு உடையன்’ ‘இன்சொல்லன் ஆதல்’ ஒருவற்கு அணி - பணிதல் உடையனும் இனிய சொல் உடையனும் ஆதல் ஒருவனுக்கு ஆபரணம்; பிற அல்ல - (செல்வம் முதலிய) மற்றையன ஆபரணங்கள் அல்ல.

அகலம்: ‘மற்று’ அசை. எண் ணும்மையும், லகர வொற்றும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தருமர் பாடம் ‘அணி நல்ல’.

கருத்து: இன்சொல் லுடைமையும் பணி வுடைமையும் ஒருவனுக்கு நல்ல அணிகளாம்.

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின். (66)

பொருள்: நல்லவை நாடி இனிய சொல்லின்‡நல்ல பொருள்களை ஆராய்ந்து இனிய சொற்களால் சொல்லின், அல்லவை தேய அறம் பெருகும் ‡ மறங்கள் குறைய அறங்கள் வளரும்.

அகலம்: ‘இனிய’ என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால், லகர வொற்றுக் கெட்டு நின்றது. தாமத்தர் பாடம் ‘அறம் வளரும்’. நச்சர் பாடம் ‘அல்லவை தேயும்’.

கருத்து: நல்ல பொருள்களை இனிய சொற்களாற் சொல்லின், பாவம் குறைந்து புண்ணியம் வளரும்.

நயனீன்று நன்று பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல். (67)

பொருள்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா (த) சொல் - (கருதிய) பயனை அளித்து இனிமையை விட்டு நீங்காத சொற்கள். நயன் ஈன்று நன்று பயக்கும் - இன்பத்தை அளித்து அறத்தை நல்கும்.

அகலம்: தலைப்பிரிதல் - விட்டு நீங்குதல். ‘பண்பின்’ வேற்றுமை மயக்கம். அஃது ஈண்டு இனிமைப் பொருளில் வந்தது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நன்றி’. தருமர் பாடம் ‘தலைப்பிரியார்’ தாமத்தர் பாடம் ‘நன்மை பயக்கும் பயனீந்து’. நன்றி என்பது பெரும்பாலும் செய்ந்நன்றி என்னும் பொருளிலே வருதலானும், அப் பொருள் ஈண்டுப் பொருத்தமற்ற தாகலானும், நன்றி என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனக் கொள்க.

கருத்து: இன்சொல் இன்பத்தையும் அறத்தையும் விளைக்கும்.

சிறுமையி னீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும். (68)

பொருள்: சிறுமையின் நீங்கிய இன் சொல் - பெருமிதத்தினின்று நீங்கிய இனிய சொல், இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - இப் பிறப்பிலும் மறு பிறப்பிலும் இன்பத்தை நல்கும்.

அகலம்: ‘சிறுமை பெருமித மூர்ந்து விடல்’ - திருக்குறள். பெருமிதம் ‡ செருக்கு. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘சிறுமையுள்’. ‘இன்’ உருபு ஐந்தாம் வேற்றுமையின் நீக்கப் பொருளை உணர்த்துதலின், ‘சிறுமையின்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: செருக்கு இல்லாத இனிய சொல் இம்மை யின்பமும் மறுமை யின்பமும் தரும்.

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (69)

பொருள்: இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் - (பிறர் தன்னை நோக்கிச் சொல்லும் ) இனிய சொல் (தனக்கு) இன்பம் அளித்தலை அறிபவன், வன் சொல் வழங்குவது எவன் ‡ (பிறர் பால்) கடிய சொல்லைச் சொல்லுதல் யாது காரணம்?

அகலம்: ‘கொல்’, ‘ஓ’ அசைகள். சொல் வழங்குவது என்றமையால், வழங்குவது என்பதற்குச் சொல்லுதல் என்று பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து: பிறனுடைய இன் சொல் தனக்கு இன்பம் தருதலை அறிபவன் பிறனிடத்து வன் சொல் வழங்குவதற்குக் காரணம் மடமையே.

இனிய வுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (70)

பொருள்: இனிய உளவாக இன்னாத கூறல் - இன்பம் தரும் சொற்கள் உள்ளனவாகத் துன்பம் தரும் சொற்களைச் சொல்லுதல், கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - கனிகள் இருக்கக் காய்களைப் பறித்தாற் போலும்.

அகலம்: ‘கவர்ந்தற்று’ என்பது வினையயச்சத் தொகை. அது ‘கவர்ந்தா லற்று’ என விரியும். தருமர் பாடம் ‘கனியிருக்க’.

கருத்து: இனிய சொற்கள் இருக்க அவற்றை விட்டு இன்னாத சொற்களைக் கூறல் மடமை.

No comments:

Post a Comment