Sunday

ஒப்புர வறிதல்

பத்தொன்பதாம் அதிகாரம் - ஒப்புர வறிதல்
அஃதாவது, நாடொப்பன செய்தல். ‘அறிதல்’ என்பது ஈண்டுச் செய்தற் பொருட்டு.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (181)

பொருள்: கடப்பாடு கைமாறு வேண்டா- ஒப்புரவுகள் கைம்மாற்றை விரும்பா; மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - மழைக்கு உலகம் யாது கைம்மாற்றினைச் செய்யும்? (ஒன்றும் செய்ய இயலாது).

அகலம்: கொல், ஓ என்பன அசைகள். கைம்மாறு - பிரதியுபகாரம். கடப்பாடு என்றமையாலும், மழையை உவமானமாகக் கூறினமை யாலும், ஒப்புர வென்பது கைம்மாறு கருதாத உதவி என்று கொள்க. ஒப்புரவு தவிர்க்கப்படுவ தன்று என்பதை உணர்த்த வேண்டி, அதனைக் கடப்பாடு என்றார். ஒப்புரவு செய்வாரது வேண்டாமையை ஒப்புரவின் மேல் ஏற்றிக் கூறினார்.

கருத்து: ஒப்புரவு கைம்மாறு கருதாத உதவி.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (182)

பொருள்: தான் ஆற்றி தந்த பொருள் எல்லாம் - முயற்சி செய்து தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு - தகுதி யுடையார்க்கு உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: ‘ஆற்றித் தந்த’ என்பதற்குத் ‘தாள்’ என்பதை கர்த்தாவாகக் கொள்க.

கருத்து: சம்பாதிக்கும் பொருளெல்லாம் தக்கார்க்கு உதவி செய்தற் பொருட்டே.

புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யயாப்புரவி னல்ல பிற. (183)

பொருள்: ஒப்புரவின் பிற நல்ல - ஒப்புரவு போன்ற மற்றை நல்ல செயல் களை, புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிது - தெய்வ உலகத்தும் இவ் வுலகத்தும் பெறுதல் அரிது.

அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. மணக்குடவர் பாடம் ‘பெறற்கரிதே’.

கருத்து: ஒப்புரவு போன்ற நல்லவை இவ் வுலகத்திலும் தெய்வ உலகத்திலும் இல்லை.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (184)

பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.

அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு

கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. (185)

பொருள்: உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு (அடைதல்) - உலக நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை ஆள்கின்றவன் செல்வத்தை அடைதல், ஊருணி நீர் நிறைந்து அற்று - ஊருணி நீர் நிறைந்தாற் போலும்.

அகலம்: ஊருணி - ஊரில் வாழ்வார் உண்ணும் நீரையுடைய குளம். உலகு என்பது ஆகுபெயர், உலக நடைக்கு ஆயினமையால். உலக நடையாவது, ஒப்புரவு. ‘நிறைந்தற்று’ என்பது வினையயச்சத் தொகை. ஊருணி நீரை ஊரார் தடையின்றித் துய்த்தல் போல, ஒப்புர வுடையான் செல்வத்தை ஊரார் தடையின்றித் துய்ப்பர் என்று கூறிய வாறு. ‘அடைதல்’ அவாய் நிலையான் வந்தது. ஏகாரம் அசை. அவாவும் என்பது ஈற்றயல் கெட்டு நின்றது. ‘ஊருணி நிறையவு முதவு மாடுயர், பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும், கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி, வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்’ என்றார் கம்பர்.

கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்குப் பயன் படும்.

பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின். (186)

பொருள்: நயன் உடையான்கண் செல்வம் படின் - ஒப்புரவு உடையானிடத்தில் செல்வம் பொருந்தின், (அது) பயன் மரம் ஊர் உள் பழுத்து அற்று - அது பயன் மரம் ஊரினுள் பழுத்தாற் போலும்.

அகலம்: ஊருள் பழுத்த மரம் ஊரார்க்கெல்லாம் பயன் படுதல் போல ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்கெல்லாம் பயன் படும் என்றவாறு. ஆல் என்பது அசை. தருமர்,
மணக்குடவர் பாடம் ‘பயமரம்’.

கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க் கெல்லாம் உதவும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (187)

பொருள்: பெருந் தகையான்கண் செல்வம் படின் - (ஒப்புரவு செய்யும்) பெருந்தகைமையை யுடையானிடத்துச் செல்வம் பொருந்தின், (அது) மருந்து ஆகி தப்பா மரம் (இருத்தல்) அற்று - அது மருந்தாகித் தவறாத மரம் (இருத்தலைப்) போலும்.

அகலம்: தப்பா(த) மரம் - கொள்ளுதற்குத் தப்பாத மரம். மருந்தாகப் பயன் படும் மரம் யாரும் கொள்ளத்தக்க வாறு இருப்பின் அது மக்கட்கு எவ்வளவு பயன்படுமோ, அவ்வளவு பயன்படும், மக்கட்கு ஒப்புரவு செய்யும் பெருந்தகை யாளனிடம் இருக்கும் செல்வம் என்றவாறு. தாமத்தர் பாடம் ‘மருந்தாகித் தீர்க்கு மரத்தற்றால்’ ‘அத்து’ சாரியை. ‘ஆல்’ அசை.

கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் வறிஞர்க் கெல்லாம் மருந்து போல் உதவும்.

இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (188)

பொருள்: கடன் அறி காட்சி அவர் - (ஒப்புரவு செய்தல் தமது) கடன் என்று அறிந்த அறிவினை யுடையவர், ஒப்புரவிற்கு இடன் இல் பருவத்தும் ஒல்கார் - ஒப்புரவு செய்தற்கு இடம் இல்லாத காலத்தும் தளரார்.

அகலம்: ‘அடர்ந்து வறியரா யாற்றாத போழ்தும், இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர், மடங்கொண்ட சாயன் மயிலன்னாய் சான்றோர், கடங்கொண்டுஞ் செய்வார் கடன்’ என்றார் பழமொழியார்.

கருத்து: ஒப்புரவு அறிந்தார் வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்வர்.

நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்ய வமைகலா வாறு. (189)

பொருள்: நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு உடையான் வறிஞன் ஆதல், செய்யும் நீர செய்ய அமைகலா(த) ஆறே செய்யும் நீர்மையனவாகிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாத இடத்தே.

அகலம்: செய்யும் என்பதன் யகர வொற்றும், அமைகலாத என்பதன் ஈறும், ஏகாரமும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. முந்திய உரை யாசிரியர்கள் பாடம் ‘செய்யா தமைகலா வாறு’. ‘செய்ய அமைகலா வாறு’ என்பதே கருதிய பொருளைத் தருதலானும், ‘செய்யா தமைகலா வாறு’ என்பது பொருத்தமான பொருளைத் தாராமை யானும் ‘செய்ய அமைகலா’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: ஒப்புரவு செய்வான் தான் வறிஞன் என்று உணர்வது, தான் செய்ய வேண்டிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாதவிடத்தே.

ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து. (190)

பொருள்: ஒப்புரவினால் கேடு வரும் என்னின் -ஒப்புரவு செய்தலினால் (தனக்குக்) கேடு வரும் என்றால், அஃது ஒருவன் விற்று கோள் தக்கது உடைத்து - ஒப்புரவை ஒருவன் விற்றுக் (கேட்டைக்) கொள்ளுதல் தகுதி உடைத்து.

அகலம்: ஒப்புரவைக் கொடுத்துக் கேட்டைக் கொள்ளுதல் தகுதி யுடைத்து என்றவாறு. விற்றல் - கொடுத்தல். கொள்ளுதல் -வாங்குதல். ‘கோள்’ முதனிலை திரிந்த தொழிற்பெயர். என்னின் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. ஒருவன் தன்னை விற்றாயினும் ஒப்புரவு செய்தல் வேண்டும் என்று உரைப்பாரும் உளர். ‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை, வளவரை வல்லைக்கெடும்’ என்று ஆசிரியர் பின்னர்க் கூறுகின்றமையால், அவ்வுரை பொருந்தாது.

கருத்து: கேடு வரு மெனினும் ஒப்புரவு செய்க.

No comments:

Post a Comment