Friday

மக்கட் பேறு

நான்காம் அதிகாரம் - மக்கட் பேறு

அஃதாவது, மக்களைப் பெறுதல்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவுடைய
மக்கட்பே றல்ல பிற. (31)

பொருள்: பெறும் அவற்றுள் அறிவுடைய மக்கள் பேறு அல்ல பிற - (மாந்தர்) பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறு அல்லாத பிறவற்றை, யாம் அறிவது இல்லை - யாம் (ஒரு பேறாக) மதிப்பது இல்லை.

அகலம்: பெறப்படுவதனைப் பேறு என்றார். முந்திய உரையாசிரி யர்கள் பாடம் ‘அறிவறிந்த’. ‘அறிவறிந்த மக்கட் பேறு’ என்பது ‘கற்று அறிய வேண்டுவனவற்றை அறிந்த மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த மற்ற பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய மக்கட் பேறு என்பது ‘இயற்கை அறிவையுடைய மக்களைப் பெறுதல்’ எனப் பொருத்த முள்ள பொருளைத் தருதலானும், ‘அறிவுடைய’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. ‘அறிவ றிந்த என்றதனால், மக்கள் என்பது பெண் ஒழித்து நின்றது’ என உரைப்பாரும் உளர். அப் பாடத்தைக் கொள்ளினும் அவ்வுரை பொருந்தாது, கல்வியறிவு இரு பாலார்க்கும் பொதுவாகலான்.

கருத்து: மாந்தர் பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேறே சிறந்தது.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். (32)

பொருள்: பழி பிறங்கா பண்புடை மக்கள் பெறின் - பாவம் சேராத நற்குண முடைய மக்களைப் பெற்றால், எழு பிறப்பும் தீயவை தீண்டா- (மேல்வரும்) ஏழு (வகைப்) பிறப்பின்கண்ணும் (பெற்றோரைத்) துன்பங்கள் சேரா.

அகலம்: ஏழு வகைப் பிறப்பாவன‡ தாவரம், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, (நாற் காலால்) நடப்பன, மானுடர், தேவர். எழு பிறப்பு என்பதற்கு வரும் பிறப்பின்கண் என்று உரைப்பினும் அமையும். மக்களது நற்குண நற்செய்கை களால் பெற்றோரைத் துன்பங்கள் சேரா என்பது ஒவ்வொரும் செய்த வினை களின் பயன்கள் அவரவரையே சேரும் என்னும் வடமொழி தென்மொழி நூல்களின் வழக்கினை மறுக்காதோ எனின், மறுக்காது. என்னை? பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெறுதற்குப் பெற்றோர் பல நல் வினைகளைப் புரிந்திருத் தல் வேண்டும். அந் நல் வினைகளின் பயன்கள் இரண்டு. ஒன்று பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெறுதல் ; மற்றொன்று ஏழு பிறப்புந் தீயவை தீண்டாமை. முந்தியதன் உண்மை பிந்தியதன் உண்மையை அறிவிக்கும் அறிகுறி. அவ்விரண்டும் பெற்றோரது முன் வினைப் பயன்களே யாம். தருமர் பாடம் ‘மக்கட் பெறல்’.

கருத்து: பாவம் புரியாத மக்களைப் பெற்றோர் மேல் வரும் ஏழு பிறப்புக் களிலும் எவ்வகைத் துன்பமும் உறார்.

தம்பொரு ளென்பவே தம்மக்க ளப்பொரு
டந்தம் வினையான் வரும். (33)

பொருள்: தம் மக்கள் தம் பொருள் - தமது மக்கள் தமது பொருள் ; அப் பொருள் தந்தம் வினையால் வரும் - அம் மக்களாகிய பொருள் தந்தம் வினைகளால் உண்டாம்.

அகலம்: ‘என்ப’, ‘ஏ’ அசைகள். நச்சர் பாடம் ‘என்பர்’ ; ‘அவர்ப்பேறு’. மற்றை நால்வர் பாடம் ‘என்ப’ ; ‘அவர் பொருள்’. ‘அவர் பொருள் தந்தம் வினையான் வரும்’ என்பது பொருத்தமான பொருள் ஒன்றையும் தாராமையான் ‘அப்பொருள்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. அப்பொருள் என்பது நான்காஞ் சீர் ஆயக்கால், மூன்றாம் சீர் ‘தம்மக்கள்’ எனவும், இரண்டாஞ் சீர் ‘என்பவே’ எனவும் இருத்தல் வேண்டும். அப்பொழுது மூன்றாஞ் சீர் மோனை யின்பம் பயத்தலையும் நோக்குக.

கருத்து: மக்கள் உளராதலும் இலராதலும் ; நல்ல மக்கள் உளராதலும் தீய மக்கள் உளராதலும் அவரவர் வினைகளின் பயன்களேயாம்.

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ். (34)

பொருள்: தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தமது மக்கள் சிறிய கை களால் துழாவிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - அமிழ்தினும் மிக இனிது.

அகலம்: சிறு கை என்றமையால் குழந்தைக ளெனவும், தவழ்தல் முதலியவற்றால் அவர் கை மண்,தூசு, முதலியன படிந்திருக்குமெனவும் கொள்க. அக் கூழ் அமிழ்தினும் இனிதாதல் தம்முடைய சொந்த மக்களது சிறுகை அளாவிய போழ்தே என்பதை உணர்த்த வேண்டித் ‘தம் மக்கள்’ என்றார். கை என்பது சாதி ஒருமைப்பெயர். தருமர் பாடம் ‘அமுதினும்’. ஏகாரம் தேற்றம்.

கருத்து: தம் மக்கள் தம்முடன் உண்ணுதல் தமக்கு இன்பம் பயக்கும்.

மக்கள்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (35)

பொருள்: மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - மக்களது உடலைத் தொடுதல் (பெற்றோரது) உடம்பிற்கு இன்பம் (பயக்கும்) ; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அம் மக்களது சொல்லைக் கேட்டல் (பெற்றோரது) செவிக்கு இன்பம் (பயக்கும்).

அகலம்: ‘மற்று’ அசை. தாமத்தர் பாடம் ‘மற்றவர்தம்’.

கருத்து: தம் மக்களது மெய்யைத் தீண்டலும் சொல்லைக் கேட்டலும் தமக்கு இன்பம் பயக்கும்.

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர். (36)

பொருள்: தம் மக்கள் மழலை சொல் கேளாதவரே - தமது மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவரே, குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்வர்.

அகலம்: குழல், யாழ் என்பன ஆகுபெயர்கள், அவற்றின் இசைகளுக்கு ஆயினமையால். தருமர், தாமத்தர் பாடம் ‘என்பர்தம்’ . மற்றை மூவர் பாடம் ‘என்பதம்’ . ஏகாரம் கெட்டது.

கருத்து: தம் மக்கள் மழலைச் சொல் குழலினும் யாழினும் இனிது.

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல். (37)

பொருள்: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குச் செய்யும் உதவி, அவையத்து முந்தி இருப்ப செயல் - (சான்றோர்) அவை யின்கண் முன்னே இருக்கும்படியாகச் செய்தல்.

அகலம்: முன்னே இருக்கும்படியாகச் செய்தலாவது, முன்னே இருத்தற்குரிய கல்வி, ஒழுக்கம், முதலியவற்றை அளித்தல். முன்னே ‡ முதன்மையான இடத்தில். ‘நன்றி’ என்ற சொல்லை வழங்கினமையால், அவ்வாறு கல்வி முதலியவற்றைத் தந்தை அளித்தமையை மகன் செய்ந்நன்றியாகக் கருதல் வேண்டும் என்பது பெற்றாம்.

கருத்து: மக்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் கற்பித்தல் பெற்றோர் கடமை.

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது. (38)

பொருள்: தம்மின் தம் மக்கள் அறிவுடைமை - தம்மினும் தமது மக்கள் அறிவுடையராயிருத்தல், மாநிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது - பெரிய நிலவுலகின்கண் நிலை பேறுடைய மனித உயிர்களுக் கெல்லாம் இன்பம் பயக்கும்.

அகலம்: உயிரின் அழியாத் தன்மையைக் குறிக்க வேண்டி ‘மன்னுயிர்’ என்றார். ‘தம் மக்கள்’ என்றமையால், உயிர் என்பதற்கு மனித உயிர் என்று பொருள் உரைக்கப்பட்டது. இன்பம் பயப்பதனை இனிது என்றார். இன்பம் உறுவது உயிரே யாகலின், உயிர்க்கெல்லாம் என்றார். தாமத்தர் பாடம் ‘தன்னிற்றன் மக்கள்’. தம் மக்கள் அறிவுடைமை தமக்குப் பயக்கும் இன்பத்தினும் மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் அதிக இன்பம் பயக்கும் என்று உரைப்பாரும் உளர். உலக அனுபவத்திற்கு மாறுபடுகின் றமையால், அவ்வுரை போலியுரை யயன்று தள்ளுக.

கருத்து: தம்மினும் தம் மக்கள் அறிவுடையா யிருத்தல் பெற்றோர்க்கு இன்பம் பயக்கும்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய். (39)

பொருள்: தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் ‡ தனது மகனை (க்கல்வி அறிவு ஒழுக்கங்களால்) நிறைந்தோன் என (ப்பிறர் சொல்ல)க் கேட்ட தாய், ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் ‡ (அவனைப்) பெற்ற காலையில் அடைந்த களிப்பினும் பெரிது களிப்பள்.
அகலம்: ‘இன்’ என்றமையால், தன் மகனைச் சான்றோனாகத் தான் கண்ட பொழுது உளதாம் உவப்புத் தான் அவனை ஈன்றபொழுது அடைந்த, உவப்பினும் பெரிதென்பதும், பெரிது என்றமையால் அதனினும் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் கூறக் கேட்ட பொழுது உளதாம் உவப்புப் பெரிதென்பதும் பெறப் பட்டன. உவகை ‡ உள்ளக் களிப்பு. ‘பெண் ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாயயனக் கூறினார்’ என்று உரைப்பாரும் உளர். பெண்ணின் இயல்பு தானாக அறியாமை என்பது அறிவிலார் கூற்றென அவ் வுரையை மறுக்க.

கருத்து: தன் மகன் கல்வியும், அறிவும், ஒழுக்கமும் நிறைந்தவன் என்று பிறர் பேசக் கேட்ட தாய் பேருவகை எய்துவள்.

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யயன்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (40)

பொருள்: மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி- மகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் என்னும் சொல் (ஆக்குதல்) - (இவனைப் பெறுவதற்கு) இவன் தந்தை யாது தவம் புரிந்தான் என்று (பிறர்) சொல்லும் சொல்லை உண்டாக்குதல்.

அகலம்: என் என்பது என் நோன்பு எனப் பொருள் பட நின்றது. நோன்பு - தவம். ஆக்குதல் என்பது சொல்லெச்சம். ‘கொல்’, ‘அசை’, ‘சொல்’ இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘இவன் தந்தை என்னோற்றான்’, என்பது பிறரது கூற்று. உதவி என்றமையால், அச்சொல்லைப் பிறர் சொல்லுமாறு மகன், கல்வி, அறிவு, ஒழுக்கங்களோடு நடத்தலாகிய உதவியைத் தந்தை வேண்டி நிற்கின்றா னென்பதும், அதனால் அவ் உதவியைத் தந்தைக்கு மகன் தவறாது செய்யக் கடன்பட்டுள்ளான் என்பதும் பெறப்பட்டன. ‘என்னும்’ என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து: கல்வி, அறிவு, ஒழுக்கம் உடையராயிருத்தல் மக்கள் கடமை.

No comments:

Post a Comment