Sunday

புலான் மறுத்தல்

இருபத்து மூன்றாம் அதிகாரம் - புலான் மறுத்தல்.
அஃதாவது, ஊன் (உணவை) விலக்கல். ‘புலால்’ ஆகுபெயர், அதனாலாய உணவுக்கு ஆயினமையால்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள். (221)

பொருள்: தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்- தன் (உடம்பாகிய) ஊனை வளர்த்தற்குத் தான் பிறிது (ஓர்) உயிரின் (உடம்பாகிய) ஊனை உண்பவன், அருள் எங்ஙனம் ஆளும் -அருளினை எவ்வாறு ஆள்வான்? (ஆளான்).

கருத்து: புலால் உண்பவனுக்கு அருள் உண்டாதல் இல்லை.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (222)

பொருள்: பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-செல்வத்தை (ஈட்டி) ஆளுந்தன்மை (அதனைப்) பேணாதவர்க்கு இல்லை ; ஆங்கு- அதுபோல, அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அருளை (ஈட்டி) ஆளுந்தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை.

கருத்து: புலால் உண்பவர்பால் அருள் நிற்றல் இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம். (223)

பொருள்: ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் -ஓர் உயிரின் உடம்பைச் சுவைப்பட உண்டவரது உள்ளம், படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது - (கையில்) படைக்கலத்தைக் கொண்டவரது நெஞ்சம் (நன்மை செய்ய எழாதது) போல நன்மை செய்ய எழாது.

அகலம்: பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.

கருத்து: புலால் உண்பவர் உள்ளம் தீமை செய்யவே எழும்.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல். (224)

பொருள்: அருள் யாது என்னின் கொல்லாமை -அருள் யாது என்றால் கொல்லாமை ; அல்லது யாது என்னின் கோறல் -அருளல்லது யாது என்றால் கொல்லுதல் ; பொருள் அல்லது அ ஊன் தின்னல்-அறம் அல்லாத செயல் (யாது என்னின்) கொலையால் வந்த ஊனை உண்ணுதல்.

அகலம்: ‘என்னின்’, ‘தின்னல்’ என்பன னகர வொற்றுக் கெட்டு நின்றன. பொருள் என்பது ஈண்டுப் பொருளாலாகும் அறத்தைக் குறித்து நின்றது. அறம் அல்லாத செயலாவது மறம்.
கொல்லாமை, கோறல் என்னும் காரியங்களை அருள், அருளல்லது என்னும் காரணங்களாகவும், ஊன் தினல் என்னும் காரணத்தை பொருளல்லது என்னும் காரியமாகவும் உபசரித்தார்.

கருத்து: புலால் உண்ணல் பாவம்.

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்வ தளறு. (225)

பொருள்: உண்ணாமை உள்ளது உயிர்நிலை -(ஊன்) உண்ணாமையை உடைய உடம்பு உயிர்நிலை ; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்வது அளறு - ஊனை உண்பதற்காக வாயைத் திறக்கும் உடம்பு நரகம்.

அகலம்: ஊன் உண்பான் உடம்பு தீய ஊனை உட்கொள்ளுதலால், அவ் வுடம்பைத் தீய உயிர்களை உட்கொள்ளும் நரகத்துக்கு உவமித்தார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செய்யா தளறு’. ஒருவன் ஒன்றினை உட்கொள் ளுதற்காக அவாவுற்று வாய் திறத்தலைத் தான் அண் ணாத்தல் என்று சொல்வது வழக்கு. அன்றியும், ஒருவன் ஒருகால் ஊனை உட்கொள்ளின், அவனை அதற்காக நரகம் விழுங்குமெனவும், அவ்வாறு விழுங்கிய நரகம் அவனைப் பின்னர் ஒருகாலும் வெளிவிடாதெனவும் கூறின், அவன் ஊனுண்ணலை விடுதலா லாவது, வேறு பாவங்களை விடுதலா லாவது அடையும் பயன் யாது? ஒருவன் எத்துணைக் கொடிய பாவம் புரியினும், அவன் அதனைப் புரியாது நிறுத்திய மாத்திரத்திலே அப் பாவப் பயன் அவனைப் பற்றாது நீங்கிவிடுமெனக் கூறி, அப்பாவத்தை அவன் விடும்படியாகத் தூண்டுத லன்றோ நீதி நூல் இயற்றுவோர் கடமை? மேலும், ஊனுண்ணாமையை யுடைய உடம்பு உயிர் நிலை என்று கூறிய ஆசிரியர் ஊன் உண்ணுதலை யுடைய உடம்பு உயிர் நிலை யல்லாத வேறொன்று எனக் கூறுத லன்றோ இயற்கையும் பொருத்தமு மாகும்? ஆகலான், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனவும், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்வ தளறு’ என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. அளறு என்பதற்குக் குழை சேறு என்று உரைப்பினும் அமையும். அதுவும் போகட்டவற்றை யயல்லாம் தன்னுள் ஏற்பதொன் றாகலான்.

கருத்து: ஊன் உண்ணும் உடம்பு நரகத்தை ஒக்கும்.

தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (226)

பொருள்: உலகு தின்னல் பொருட்டு கொள்ளாது என்னின் - உலகத்தார் உண்ணுதற்காக (ஊனைக்) கொள்ளார் என்றால், விலை பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் -விலைக்காகப் புலாலை விற்பவர் எவரும் இல்லை.

அகலம்: உண்ணுதற்காக ஊனைக் கொள்ளுகின்றவர் உள்ள படியால் தான் பொருளுக்காக ஊனை விற்கின்றவரும் உள்ளார் என்றவாறு. உலகத்தாரை உலகம் என்றமையால், அதற்கேற்ப அதன் பயனிலையைக் கொள்ளாது என்று கூறினார்.‘ஆல்’இரண்டும் அசைகள். மணக்குடவர் பாடம் ‘கொள்ளா துல கெனின்’. மற்றை நால்வர் பாடம் ‘கொல்லா துலகெனின்’. ‘விலைப்பொருட்டா லூன்றருவா ரில்’ என்றமையால், ‘கொள்ளா துலகெனின்’ என்ற பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.

கருத்து: புலால் உண்பார் இல்லையேல், புலால் விற்பாரும் இல்லை.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (227)

பொருள்: புலால் உண்ணாமை வேண்டும் -(மாந்தர்) புலாலை உண்ணா திருத்தல் வேண்டும். அஃது உணர்வார்ப் பெறின் -புலால் அறிவுடையாரது ஆராய்ச்சியைப் பெறுமாயின், பிறிது ஒன்றன் புண் -பிறிது ஓர் பிராணியின் புண் (ஆம்).

அகலம்: அஃது என்பது ஆய்தம் கெட்டு நின்றது. உணர்வாரது ஆராய்ச்சி யைப் பெறின் என்பதை உணர்வாரைப் பெறின் என்றார். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர் பாடம் ‘புலாலை’.

கருத்து: புலால் ஒரு பிராணியின் புண் ; ஆகலான், அதனை உண்ணற்க.

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (228)

பொருள்: உயிரின் தலைப்பிரிந்த ஊன் -(ஓர்) உயிரினின்று நீங்கிய ஊனை, செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் -குற்றத்தினின்று நீங்கிய அறிவினை யுடையார் உண்ணார்.

கருத்து: அறிவுடையார் புலாலை உண்ணார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (229)

பொருள்: ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை - ஒரு பிராணியின் உயிரை அழித்து (அதனால் வந்த ஊனை) உண்ணாதிருத்தல், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று‡ நெய்யை வார்த்து ஆயிரம் வேள்வி செய்தலினும் நன்மை.

அகலம்: வார்த்தல்- ஊற்றல். பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.

கருத்து: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலினும் புலாலுண்ணாமை நன்று.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யயல்லா வுயிருந் தொழும். (230)

பொருள்: கொல்லான் புலாலை மறுத்தானை -(ஓர் உயிரையும்) கொல்லாத வனாய்ப் புலாலை விலக்கியவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் -எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணங்கும்.

அகலம்: கைகூப்பித் தொழுதல் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக ஏனைய உயிர்களின் மேலும் ஏற்றிக் கூறினார். உயிரைக் கொல்லாமலும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாகப் போற்றப்படுவன் என்ற வாறு.

கருத்து: கொலையும் புலையும் நீத்தோன் கடவுளை ஒப்பன்.

No comments:

Post a Comment