Friday

நடுவு நிலைமை

ஒன்பதாம் அதிகாரம் -நடுவு நிலைமை

அது ‘நடுவு’, ‘நிலைமை’ என்னும் இரண்டு சொற்களால் ஆய தொடர். ‘நடுவு’ என்பது ‘நடு’ எனவும், ‘நிலைமை’ என்பது ‘நிலை’ எனவும் வழங்கும். நடுவு நிலைமை என்பது நடுவாக நிற்றல் எனப் பொருள்படும். அஃதாவது, உற்றார், நண்பர், நொதுமலர், பகைவர் என்னும் நான்கு திறத்தினர்களுக்கும் நடுவாக நின்று, அவர்களில் எத்திறத்தார் பக்கமும் கோடாமல், அவ்வத் திறத்தார்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தொழுகுதல். ஆசிரியர் உற்றார்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ‘வாழ்க்கைத் துணைநலம்’, ‘மக்கட் பேறு’, ‘அன்புடைமை’ என்னும் மூன்று அதிகாரங்களாலும், நொது மலர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ‘விருந்தோம்பல்’, ‘இனியவை கூறல்’, ‘செய்ந்நன்றி யறிதல்’ என்னும் மூன்று அதிகாரங்களாலும் கூறினர். நண்பருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் ‘பொருட்பாலி’ன்கண் ‘நட்பு’, ‘நட்பாராய்தல்’, ‘பழைமை’ என்னும் மூன்று அதிகாரங்களாலும், பகைவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் ‘பகை மாட்சி’, ‘பகைத் திறந் தெரிதல்’, ‘உட்பகை’ என்னும் மூன்று அதிகாரங்களாலும் கூறுவர். இந் நான்கு திறத்தினர்களுக்கும் பொதுவாகச் செய்ய வேண்டிய கடமைகளை ‘நடுவு நிலைமை’, ‘அடக்கமுடைமை’, ‘ஒழுக்கமுடைமை’ என்னும் மூன்று அதிகாரங் களாலும் கூறுகின்றனர்.

தகுதி யயனவொன்று நன்றே பகுதியார்
பாற்பட் டொழுகப் பெறின். (81)

பொருள்: தகுதி என ஒன்று நன்றே - நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட (ஒழுக்கம்) ஒன்று அறனே யாம்; பகுதியார்பால் பட்டு ஒழுக பெறின் - (மேற்கூறிய நான்கு) திறத்தினர்கண்ணும் பொருந்தி ஒழுகப் பெற்றால்.

அகலம்: அவ்வப் பகுதியினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்த வழி நடுவு நிலைமை அறமாம் என்ற வாறு. தகுதியானது பகுதியின்பாற் பட்டொழுகப் பெறின் அறமாம் என்றமையால், ‘தகுதி என ஒன்று’ என்பதற்கு ‘நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட ஒழுக்கம் ஒன்று’ என்று பொருள் உரைக்கப்பட்டது. நொதுமலர் - அயலார். நான்கு பகுதியார் இன்னின்னார் என்று மேற் கூறப்பட்டுள்ளனர். அப் பகுதியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களைப் பற்றிக் கூறும் அதிகாரங்களில் கண்டு கொள்க. ஏகாரம் தேற்றத் தின்கண் வந்தது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பகுதியாற்’. ‘பகுதி’ என்பதற்கு ஈண்டுப் பொருத்தமான பொருள் காணுதல் அரிதாகலானும், வேண்டுவதாய ‘ஆர்’ விகுதியை விடுத்து, வேண்டாததாய ‘ஆல் உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்க மாட்டா ராகலானும் ‘பகுதியாற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை யயனக் கொள்க.

கருத்து: பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை நடுவாக நின்று செய்யின், அந் நடுவு நிலைமை ஓர் அறமாம்.

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யயச்சத்திற் கேமாப் புடைத்து. (82)

பொருள்: செப்பம் உடையவன் ஆக்கம் ‡ நடுவு நிலைமையைப் பொருந்தியவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - அழிவு இல்லாமல் (அவனுக்கேயன்றி அவன்) மக்கட்கும் காப்பாதலை யுடைத்து.

அகலம்: எச்சத்திற்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செப்பம் - நேர்மை-நடுவு நிலைமை.

கருத்து: நடுவு நிலைமை யுடையவன் செல்வம் அழியாது.

நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யயாழிய விடல். (83)

பொருள்: நன்றே தரினும்‡ நன்மையையே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் ‡ நடுவு நிலைமை தவறி வருஞ் செல்வத்தை அப்பொழுதே நீங்க விடுக.
அகலம்: தரினும் என்பதன் உம்மை தாராமையை உணர்த்தி நின்றது. ஏகாரம் இரண்டும் பிரிநிலைக்கண் வந்தன.

கருத்து: நடுவு நிலைமை தவறி வருஞ் செல்வத்தைக் கொள்ளற்க.

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும். (84)

பொருள்: தக்கார் தகவு இலர் என்பது ‡ (ஒருவர்) தகுதி யுடையார் (அல்லது) தகுதி இல்லார் என்பது, அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய புகழால் அல்லது இகழால் அறியப்படும்.

அகலம்: ஒருவன் இறந்த பின் எஞ்சி நிற்பது எச்சம். ஆகவே, எச்சம் என்பதற்கு புகழ் அல்லது இகழ் எனப் பொருள் உரைக்கப்பட்டது. தகுதியுடையார் அல்லது தகுதி இல்லா ரென்பது முறையே அவரவருடைய நல்ல மக்களாலும் தீய மக்களா லும் அறியப் படும் என்று உரைப்பாரும் உளர்.

கருத்து: ஒருவர் தகுதியுடையார் என்பதை அவரது புகழாலும், தகுதி யில்லாதார் என்பதை அவரது இகழாலும் அறிக.

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (85)

பொருள்: கேடும் பெருக்கமும் இல்(ல) அல்ல - வறுமையும் செல்வமும் இல்லாதன அல்ல; நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி - மனத்தின்கண் (நடுவு நிலைமையை விட்டுச்) சாயாமை (கல்வி, அறிவு, ஒழுக்கங்களால்) நிறைந்தவர்க்கு அழகு.

அகலம்: ‘இல்ல அல்ல’ என்பது செய்யுள் விகாரத்தால் அகரம் கெட்டு நின்றது. நச்சர் பாடம் ‘சான்றோர்க் கறிவு’.

கருத்து: வறுமையும் வளமையும் மாறி மாறி வரும் இயல்புடையன வாதலால், அவை பற்றி நடுவு நிலைமை தவறுத லாகாது.

கெடுவல்யா னென்ப தறிவதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின். (86)

பொருள்: தன்நெஞ்சம் நடுவு ஒருவி அல்ல செய்யின்-தன் உள்ளம் நடுவு நிலைமையின் நீங்கி மறங்களைச் செய்யக் கருதின், யான் கெடுவல் என்பது அறிக - யான் கெடுவேன் என்பதனை அறியக் கடவன்.

அகலம்: இகர அளபெடை இன்னிசைக்கண் வந்தது. செய்யின் என்பது யகர வொற்றுக் கெட்டு நின்றது. மறங்களை ‘அல்லவை’ என்று பிறாண்டும் ஆசிரியர் கூறியிருத்தலான், ‘அல்ல’என்பதற்கு மறங்கள் என்று பொருள் உரைக்கப் பட்டது. தருமர் பாடம் ‘அறிதல்தன் னெஞ்சம்’.

கருத்து: நடுவு நிலைமையினின்று தவற நினைத்தல் கேட்டிற்கு அறிகுறியாம்.

கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு. (87)

பொருள்: நடுவு ஆக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவு நிலைமையைக் கைக்கொண்டு அறம் புரிதலின்கண்ணே (நிலைத்து) நின்றவனது வறுமையை, உலகம் கெடுவாக வையாது - உலகத்தார் வறுமையாகக் கருதார்.
அகலம்: ‘கெடு’ முதனிலைத் தொழிற்பெயர்.

கருத்து: அவனுடைய தாழ்வு விரைவில் நீங்கிவிடு மாதலால், அதனைக் கேடாக உலகத்தார் கருதார்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. (88)

பொருள்: சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து - (தன்னைச்) சம நிலைப் படுத்தி (நின்று தன்கண் வைத்த பொருளைச்) சீராக நிறுக்கும் நிறைகோல் போல நின்று, ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி - ஒரு பக்கத்துச் சாயாதிருத்தல் சால்புடையோர்க்கு அழகு.

அகலம்: அந் நிறைகோலை வெள்ளிக்கோல் என்பர். ஒரு பக்கம் சாயா திருத்தல் ‡ஒருவன் பொருளை வவ்வாதிருத்தல். தாமத்தர் பாடம் ‘சமஞ் செய்து’. ‘ஒரு பாற் கோடாமை’ என்பதற்கு நீதி வழங்குங்கால் ‘பகை’, ‘நொதுமல்’, ‘நட்பு’ என்னும் முத்திறத்தார்க்கும் ‘ஒப்பக் கூறுதல்’ என்று உரைப்பாரும் உளர்.

கருத்து: பிறர் பொருளைக் கவராமை ஒழுக்க முடையார்க்கு அழகு.

சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின். (89)

பொருள்: ஒரு தலையா(க) உட்கோட்டம் இன்மை பெறின் - ஒரு பக்கமாக மனக் கோட்டம் இல்லாதிருத்தலைப் பெறுமாயின், சொல் கோட்டம் இல்லது செப்பம் - சொற்கோட்டம் இல்லாத ஒழுக்கம் நடுவு நிலைமை.

அகலம்: கோட்டம் - கோணல். மனக்கோட்டமின்மை - மனத்தின் நேர்மை. உட்கோட்டம் உடையவரும் சொற் கோட்டமின்றிப் பேசுதல் கூடுமாகலின், உட்கோட்ட மின்மை பெறின் என்றார்.

கருத்து: நினைப்பும் சொல்லும் ஒத்து நேர்மையாக ஒழுகுதல் வேண்டும்.

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின். (90)

பொருள்: பிறவும் தம போல் பேணி செய்யின் - பிறர் பொருள்களையும் தம் பொருள்கள் போலப் பேணி (வாணிகம்) செய்யின், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் ஆம் - வாணிகத் தொழில் செய்வார்க்கு வாணிகம் வளரும்.

அகலம்: ‘செய்யின்’ என்பது ‘யகர’ வொற்றுக் கெட்டு நின்றது. வாணிகம் செய்வார்க்குப் பிறர் பொருளைக் கவர்தற் குரிய இடங்கள் பல உண்டா மாகலான், அவரைப் பற்றி ஈண்டுக் கூறினார். முந்திய உரையாசிரியர்கள் மூன்றாம் சீராக ‘வாணிகம்’ என்பதைக் கொண்டார்கள். ‘வாணிகமாம்’ என்பது தெளிவும் தொடையின்பமும் பயக்கின்றமையால், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. நச்சர் பாடம் ‘தம போற் செயல்’.

கருத்து: வாணிகஞ் செய்வார் தம் பொருளுக்கு என்ன பெற விரும்புவாரோ, அவற்றைப் பிறர் பொருளுக்குக் கொடுத்தல் வேண்டும்.

2 comments: